TNPSC Thervupettagam

ஜூன் 13, 1975 - இந்திரா காந்தி பதவி விலகுவாரா

June 13 , 2023 580 days 310 0
  • அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலகுவாரா என்று நாடு முழுவதும் ஒரே பரபரப்பாக இருந்தது. மேல் முறையீட்டில் முடிவு வரும் வரையில் பதவியில் தொடரலாமா, வேண்டாமா என்று இந்திரா காந்தி யோசித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன.
  • உடனடியாக ராஜிநாமா செய்துவிட்டு, குற்றமில்லை என்ற முடிவுடன் திரும்பிவந்தால் எதிர்ப்போரின் வாயடைக்கச் செய்துவிடலாம் என்றும் உச்ச நீதிமன்றமும் அலாகாபாத் தீர்ப்பை உறுதி செய்தால் மேலும் ஒரு களங்கமாக இருக்கும் என்ற நிலையில் இப்போதே விலகிவிடலாம் என்றும் இந்திரா காந்தி நினைப்பதாகவும் கூறப்பட்டது.
  • நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்திரா காந்தி தயங்குவதாகவும் மழைக் காலக் கூட்டத் தொடரை ஒத்திவைக்கலாமென்றும் மக்களவையைக் கலைப்பது பற்றியும்கூட விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஒரே நாளில் 9 முறை பேச்சு!

  • இதனிடையே, பிரதமர் இந்திரா காந்தியின் வீட்டுக்கு முன் தொடர்ந்து, ஏராளமான ஆதரவாளர்களும் பொதுமக்களும் திரளத் தொடங்கிவிட்டனர்.
  • அவ்வப்போது வீட்டுக்கு வெளியே வந்து அங்கே திரண்டிருந்தவர்களிடையே இந்திரா காந்தி உரையாற்றத் தொடங்கினார் (பின்னர் இந்தப் பேச்சுகள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்தன. இதற்காகவே மக்கள் திரட்டிக் கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின).

நான் என்றும் மக்கள் சேவகி!

  • "கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஒவ்வொரு வாரமும் என்னைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரி வந்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன லாபம் எனத் தெரியவில்லை.
  • "1971-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, உத்தரப் பிரதேசத்தில் டி.என். சிங் தலைமையிலான சம்யுக்த விதாயத்தள அமைச்சரவை ஆட்சியிலிருந்தது. ராய்  பரேலியில் எனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த அரசுதான் செய்திருந்தது. இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்தவித ஏற்பாடுகளையும் செய்யவில்லை.
  • சென்ற நான்கு ஆண்டுகளில் நாடு வெகுவேகமாக முன்னேறி வந்திருக்கிறது. மற்ற நாடுகளில் என்னைப் பற்றிக் குறை கூறுவோர்கூட இந்த உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
  • "நாம் ஒற்றுமையாகச் செயல்பட்டு பல கஷ்டங்களைச் சமாளித்திருக்கிறோம். அதேபோல, இனியும் ஒற்றுமையாக இருந்து அவற்றைச் சமாளிப்போம்.
  • நான் என்றுமே மக்களின் சேவகியாக இருந்து வந்திருக்கிறேன். இன்றும் என்றும் அப்படியே இருப்பேன்.
  • "மக்களுக்கு சேவை செய்வதில் உறுதிகொண்டிருக்கிறேன். நீதிமன்றத் தீர்ப்பால் கவலையடைந்துவிடவில்லை. தீர்ப்பு பற்றிக் கருத்து எதுவும் சொல்லப் போவதில்லை.
  • "நாட்டைப் பலவீனப்படுத்த சில அன்னிய சக்திகள் முயலுகின்றன
  • என்றும் தன்னுடைய பேச்சில் இந்திரா காந்தி குற்றம் சாட்டினார்.
  • இன்று முழுவதும் பல முறை அவர் வீட்டுக்கு வெளியே வந்து திரண்டிருந்த ஆதரவாளர்களிடையே பேசிக்கொண்டே இருந்தார். இன்று ஒரே நாளில் 9 முறை இவ்வாறு பேசினார். இதற்கு முன்னால் எப்போதும் அவர் இவ்வாறெல்லாம் பேசியதில்லை.

ஆலோசனை

  • தீர்ப்பின் நகல் தில்லிக்குக் கிடைத்துவிட்ட நிலையில், பிரதமர் இந்திரா காந்தியும்  அவருடைய சட்ட ஆலோசகர்களும் தீர்ப்பை ஆராய்ந்துவருவதாகவும் மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய், சட்டத் துறை அமைச்சர் எச்.ஆர். கோகலே, புகழ்பெற்ற வழக்கறிஞர் என்.ஏ. பால்கிவாலா ஆகியோரும் உடனிருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாயின. முன்னதாக, ஒடிசா முதல்வர் நந்தினி சத்பதி, கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸ் ஆகியோர் பிரதமரைச் சந்தித்துப் பேசினர்.

மாற்று?

  • சந்திரஜித் யாதவ் இல்லத்தில் புது காங்கிரஸ் தலைவர் டி.கே. பரூவா தலைமையில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஒருவேளை இந்திரா காந்தி தாற்காலிகமாக பதவி விலகுவதாக இருந்தால், அவருக்குப் பதிலாக யாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரிய வந்தது. ஜெகஜீவன் ராம் அல்லது ஸ்வரண் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள்  தெரிவித்தன.

மெக்சிகோ, கியூப பயணம் ரத்து

  • சர்வதேச மகளிர் ஆண்டையொட்டி மெக்சிகோவில் ஐ.நா. அவை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டுக்கும் தொடர்ந்து கியூபாவுக்கும் பிரதமர் இந்திரா காந்தி செல்ல மாட்டார் எனத் தெரிவிக்கப் பட்டது. எனினும், வழக்கம்போல அலுவலகத்துக்கு வந்து முக்கிய வேலைகளைக் கவனித்தார் இந்திரா காந்தி.

வெட்கக்கேடு!

  • பிரதமர் பதவியில் இந்திரா காந்தி நீடிப்பது வெட்கக் கேடு என்ற சர்வோதய இயக்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் பதவியில் நீடிப்பதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
  • "இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது; ஆறாண்டு காலத்துக்கு அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தும்கூட இந்திரா காந்தியும் அவரைச் சுற்றியுள்ள ஆமாம் சாமிகளும் பிரதமர் தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என்று செய்துள்ள முடிவு மிகவும் வெட்கக் கேடானது.
  • "இது பொதுவாழ்வில் கண்ணியம், ஜனநாயகப் பண்பு இரண்டுக்கும் விரோதமானது. பிரதமர் என்ற முறையில் நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்புக் கொடுத்து ராஜிநாமா செய்துவிட்டு, மேல் முறையீட்டின் முடிவு தெரியும் வரையில் இந்திரா காந்தி பொறுத்திருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார் ஜெ.பி.

வாஜபேயி சந்திப்பு

  • இதனிடையே, ஸ்ரீநகரில் முகாமிட்டிருந்த குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவை ஜனசங்கத் தலைவர் வாஜபேயி சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிஷங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தை அவர் விளக்கினார்.

முடியவே முடியாது!

  • இந்திரா காந்தியை இனியும் நாட்டின் பிரதமராக ஏற்க முடியாது என்று ஜனதா முன்னணிக் கட்சிகள் அறிவித்தன.
  • தில்லியில் காலையில் கூடிப் பேசிய முன்னணித் தலைவர்கள், ஒரு முக்கியமான அரசியல் சாசன நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தத் தருணத்தில் தில்லியைவிட்டு காஷ்மீரில் முகாமிட்டிருப்பது கண்டிக்கத் தக்கது. எனவே,  குடியரசுத் தலைவர் உடனடியாக தில்லி வர வேண்டும் என்றும் தந்தியின் மூலம் அழைப்பு விடுத்தனர்.
  • வரும் 21 ஆம் தேதிக்குள் பிரதமரை ராஜிநாமா செய்ய வைக்க வேண்டும் அல்லது அவரைப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமையில் ஊர்வலம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
  • இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்க ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு அழைப்பு விடுக்கவும் சிறப்புத் தூதரை அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

போராட்டம்...

  • இந்திரா காந்தியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத்  தலைவர் மாளிகை முன் இந்திய கம்யூனிஸ்ட் அல்லாத எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் உள்பட சுமார் 15 பேர் திடீரென தர்னா மறியல் போராட்டத்தைத் தொடக்கினர்.
  • குடியரசுத் தலைவரே தலைநகருக்குத் திரும்புங்கள், இந்திரா காந்தியின் ஊழல்  அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள் என அவர்கள் முழக்கமிட்டனர். போராட்டத்தில் எஸ்.என். மிஸ்ர, பிலுமோடி, ரபி ராய், ஞானேசுவர் மிஸ்ர ஆகியோர் பங்கேற்றனர்.
  • இந்திரா காந்தியின் அரசியல் நோக்கங்களை நிறைவு செய்துகொள்வதற்காக காவல்துறை, அகில இந்திய வானொலி, தில்லி போக்குவரத்து கார்ப்பரேஷன் போன்றவை பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டங்களுக்கும் அலாகாபாத் நீதிமன்ற நீதிபதியின் உருவபொம்மையை எரிக்க ஏற்பாடு செய்ததன் மூலமும் நீதிமன்ற அவமதிப்புக்கு உடந்தையாக இருக்கும் குற்றமிழைத்திருக்கிறார் பிரதமர் இந்திரா காந்தி என்றும் குறிப்பிட்டனர்.
  • நிகழிடத்துக்கு வந்து, தடையுத்தரவு நடைமுறையில் இருப்பதால்  கலைந்துசெல்லுமாறும் இல்லாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார் கூடுதல் மாவட்ட நீதிபதி மீனாட்சி தத்தா. ஆனால், பிரதமரின் வீட்டுக்கு வெளியே தடையுத்தரவு நடைமுறையில் இருக்கும் பகுதியில் மக்களிடையே இந்திரா காந்தி பேசலாம் என்றால் நாங்கள் ஏன் இங்கே திரளக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். யாரும் கைது செய்யப்படவில்லை.
  • ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே ராஜ்நாராயண் அந்த இடத்துக்குப் பெரும் ஆரவாரத்துக்கு இடையே வந்தார். பிகாரிலிருந்தவாறு ஜெயப்பிரகாஷ் நாராயண் விடுத்திருந்த அறிக்கையை அங்கே வாசித்துக்காட்டினார் அவர்.

திமுக நிலை என்ன?

  • இந்திரா காந்தி தாமாகவே ராஜிநாமா செய்திருந்தால் அதை நாங்கள் பாராட்டியிருப்போம் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு. கருணாநிதி தெரிவித்தார்.
  • சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய கருணாநிதி, தொடக்கத்தில் நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. மத்திய அரசில் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எடுக்கும் முடிவு எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியாகத் திகழும் என்றுதான் குறிப்பிட்டார்.
  • மேலும் விளக்கமாகக் கூறுங்கள் என்று செய்தியாளர்கள் வற்புறுத்தியதுடன், இந்திரா காந்தி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்களா என்று நேரடியாகவே கேட்டபோதுதான், அவர்களாகவே ராஜிநாமா செய்திருந்தால் பாராட்டியிருப்போம் என்று கருணாநிதி குறிப்பிட்டார்.
  • "ஆளுங் காங்கிரஸ் இந்தியாவில் மிகப் பெரிய கட்சி. இந்தியா உலகத்தினரால் மதிக்கத்தக்க மிகப் பெரிய ஜனநாயக நாடு.  இவற்றை எண்ணிப் பார்த்து, இப்போது மத்திய அரசில் இருப்பவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அந்த முடிவுதான் இந்தியாவின் எதிர்கால அரசியலில் முன்மாதிரியாகத் திகழும்.
  • "இதுபோன்ற ஒரு நிலைமை தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு ஏற்பட்டிருந்தால், தமிழ்நாட்டிலுள்ள இந்திரா காங்கிரஸ் உள்பட மற்ற எதிர்க்கட்சிக்காரர்கள் இந்நேரம் எவ்வளவு கூப்பாடு போட்டிருப்பார்கள், என்ன பாடுபடுத்தியிருப்பார்கள் என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
  • "இந்த சூழ்நிலையிலும் திமுக தன்னுடைய பெருந்தன்மையை உணர்த்தும் வகையில்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறது.
  • "நாங்கள் எப்போதும் இந்திரா காந்தி எதிர்ப்பு நிலையைக் கொண்டது கிடையாது. மத்திய - மாநில உறவுகள் பற்றிய பிரச்சினையில்தான், மாநில அரசின் உரிமைகள் பாதுகாக்கப்பட மத்திய அரசுடன் வாதாடுகிறோம். தனிப்பட்ட முறையில் இந்திரா காந்தியை என்றைக்கும் நாங்கள் எதிர்த்தது கிடையாது.
  • "ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டியுள்ள கம்யூனிஸ்ட் அல்லாத தேசிய எதிர்க்கட்சிக் கூட்டணி கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளும். இங்கு தெரிவித்துள்ள கருத்தையே அங்கேயும் திமுக பிரதிநிதிகள் வலியுறுத்துவார்கள்.
  • "பிரதமரின் சுற்றுப்பயணத்தில் அது கட்சிக் கூட்டமானாலும் தேர்தல் பிரசாரக் கூட்டச் செலவானாலும் எல்லா செலவுகளையும் அந்தந்த மாநில அரசுகள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே பிறப்பித்துள்ள அறிவுறுத்தலை இனியேனும் மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொள்வது நல்லது" _ என்று கருணாநிதி தெரிவித்தார்.

இந்திராவே நீடிக்க எம்.ஜி.ஆர். தந்தி

  • நாட்டின் பரந்த நலனையும் மக்கள் பரந்த நலனையும் உத்தேசித்து இந்திரா காந்தியின் தலைமை நீடிக்க வேண்டும் என்று இந்திரா காந்திக்கு அ.தி.மு.க. பொதுச் செயலர் எம்.ஜி.ஆர். தந்தி அனுப்பினார்.
  • "தார்மிக நீதி உங்கள் பக்கம் இருக்கிறது. சத்தியத்தை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. தார்மிகப் போரிலும் நீதிமன்றப் போரிலும் நீங்கள் வெற்றியடைய விரும்புகிறேன். நாட்டின் நெருக்கடியான நிலைமையில் இந்திரா காந்தியின் சேவை நீடித்தாக வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

குஜராத்தில் எதிரணி!

  • குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் அதிக இடங்களில் (87) வெற்றி பெற்ற ஜனதா முன்னணி ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமடைந்தன. சில நாள்களில் முன்னணி கூடித் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என்று பழைய காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாய் தெரிவித்தார்.

நன்றி: தினமணி (13 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்