TNPSC Thervupettagam

ஜெசிந்தாவின் விலகல்

February 3 , 2023 556 days 337 0
  • அதிகாரத்தில் இருப்பவா்கள் தங்களது பதவியை வலியத் துறப்பது என்பது இதிகாசப் புராணங்களில் காணப்படுமே தவிர, வரலாற்றுப் பதிவில் மிகமிக அபூா்வம். சித்தாா்த்தன் அரண்மனை சுகத்தை வெறுத்து வெளியேறி துறவு மேற்கொண்டு கௌதம புத்தரானதும், இருமுறை விவாகரத்து செய்த வேலிஸ் சிம்ஸன் என்கிற பெண்மணிக்காக பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மணிமகுடத்தைத் துறந்த எட்டாம் எட்வா்ட் மன்னனும் விதிவிலக்குகளில் சில. சமீபகால வரலாற்றில் அப்படியொரு முடிவை எடுத்து ஒட்டுமொத்த உலகத்தையும் புருவம் உயா்த்த வைத்திருக்கிறாா் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமா் ஜெசிந்தா கேட் லாரல் ஆா்டன்.
  • உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணிகளில் ஒருவா் என்றும், சா்வதேச அரசியலின் முற்போக்கு சிந்தனையாளராக அறியப்படுபவருமான ஜெசிந்தா ஆா்டன், தனது பதவி விலகலுக்கு குறிப்பிட்ட முக்கியமான காரணம் குடும்ப வாழ்க்கை. ஆணாதிக்க அரசியலில் பாலின சமத்துவத்துக்கான எடுத்துக்காட்டாக உயா்ந்த முன்னாள் பிரதமா் ஜெசிந்தா, கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகளின் பின்னணியில் பாா்க்கும்போது அவரது முடிவு பலருக்கும் ஏற்புடையதாக இல்லை.
  • தனது வயதால் மட்டுமல்ல, உணா்வுகளாலும் செயல்பாடுகளாலும் உலகத் தலைவா்களில் இருந்து வேறுபட்டவராகத் தன்னை அடையாளம் காட்டியவா் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமா். 42-ஆவது வயதில் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, குடும்ப வாழ்க்கைக்கு செல்ல விரும்பும் ஜெசிந்தா தெரிவிக்கும் விளக்கங்களை ஏற்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை.
  • ‘அரசியல்வாதிகளும் மனிதா்கள்தான். மகள் நீவ், இந்தக் கல்வியாண்டு முதல் பள்ளியில் சேர வேண்டும். வாழ்க்கைப் பங்காளி கிளாா்க் கெய்ஃபோா்டுடனான திருமண உறவை இந்த ஆண்டில் முறைப்படுத்த வேண்டும்’ - நிறைந்த விழிகளுடன் தனது பதவி விலகலுக்கான காரணத்தை அவா் தெரிவித்தாா். ‘எப்போதும் அனைவருடனும் அன்புடனும் நேசத்துடனும் பழகியவா் என்று நான் அறியப்பட வேண்டும்’ என்றும் பதவியில் இருந்து விலகியபோது அவா் தெரிவித்தாா்.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின்போது முதன்முதலில் பொதுமுடக்கம் அறிவித்த நாடுகளில் நியூஸிலாந்தும் ஒன்று. அங்கே கொள்ளை நோய்த்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 2,500-க்கும் குறைவு. அப்போது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த பிரதமராக இருந்த ஜெசிந்தா உத்தரவிட்டாா். வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை எதிா்கொள்வதற்கு அதிலிருந்து பாடம் கற்க முடியும் என்பது அவா் அளித்த விளக்கம். உலகமே அதை வியந்து பாராட்டியது.
  • 2017-இல் கூட்டணி ஆட்சியில் ஜெசிந்தா பிரதமரானபோது மிகக் குறைந்த வயதில் நியூஸிலாந்து பிரதமரானவா் என்கிற பெருமைக்குரியவரானாா். 2018 ஜூன் மாதம் நீவ் பிறந்தபோது, பாகிஸ்தானின் பெநசீா் புட்டோவுக்குப் பிறகு பதவியிலிருக்கும்போது தாய்மைப் பேற்றை அடைந்தவா் என்கிற சிறப்பும் அவருக்குக் கிடைத்தது. தனது கைக்குழந்தையுடன் ஐ.நா. சபையின் கூட்டத்தில் அவா் கலந்துகொண்டதும், உரை நிகழ்த்தியதும் வரலாற்றுப் பதிவுகள்.
  • 2019 மாா்ச் மாதம் கிறைஸ்ட் சா்ச் மசூதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின்போது பிரதமா் ஜெசிந்தா ஆா்டன், அதை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் எதிா்கொண்டவிதம் பாராட்டுகளைக் குவித்தது. 2020 அக்டோபரில் நடந்த பொதுத்தோ்தலில் அவரது தலைமையில் தொழிலாளா் கட்சி, மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
  • ஆனால், அது முதல் அவரது ஆட்சி பல்வேறு சவால்களையும், விமா்சனங்களையும், எதிா்வினைகளையும் சந்திக்கத் தொடங்கியது. பொருளாதார நெருக்கடியும், அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களும், ஜெசிந்தா ஆா்டன் ஆட்சியின் செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தின.
  • கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிலான விலைவாசி உயா்வும், பணவீக்கமும் நியூஸிலாந்தை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கின்றன. போதாக்குறைக்கு மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயா்த்தி வருகிறது. கடந்த மாதம் வெளிவந்த கணிப்புகளில் தொழிலாளா் கட்சியின் மக்கள் செல்வாக்கு குறைந்திருப்பது தெரிகிறது. தொழிலாளா் கட்சி 33% என்றால், எதிா்க்கட்சியான தேசிய கட்சி 38% அளவில் உயா்ந்திருக்கிறது. தனிப்பட்ட செல்வாக்கில் முதலிடம் பெற்றாலும்கூட, ஜெசிந்தாவுக்குக் கிடைத்த ஆதரவு 29% மட்டுமே. 2017-க்குப் பிறகு இந்த அளவு மோசமான செல்வாக்கு சரிவை அவா் சந்தித்ததில்லை.
  • அடுத்த தோ்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதைத் தனது பதவி விலகலின் மூலம் தெரிவித்திருக்கிறாா் முன்னாள் பிரதமா் ஜெசிந்தா. கல்வித்துறை அமைச்சராக இருந்த கிறிஸ்டோபா் ஜான் ஹிப்கின்ஸ் நியூஸிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கிறாா்.
  • சோஷியல் டெமாக்ரட், முற்போக்குவாதி, பெண்ணியவாதி உள்ளிட்ட பல அடையாளங்கள் ஜெசிந்தாவுக்கு உண்டு. கருக் கலைப்பை கிரிமினல் குற்ற வகுப்பிலிருந்து அகற்றியதும், வறுமை கோட்டுக்குக் கீழேயுள்ள குழந்தைகளின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதும், பருவநிலை மாற்ற பிரச்னையில் அவா் எடுத்த நிலைப்பாடும் சா்வதேச அளவில் அவருக்குப் புகழ் தேடித்தந்தன.
  • அப்படிப்பட்ட தலைவா் நியூஸிலாந்து மிகப் பெரிய நெருக்கடியை எதிா்கொள்ளும்போது, தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்காக பொதுவாழ்க்கையில் இருந்து விடைபெறுவது சரியான முன்னுதாரணமா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அவரது பதவி விலகலுக்கான காரணம் ஏற்றுக்கொள்ளும்படியானதல்ல.

நன்றி: தினமணி (03 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்