TNPSC Thervupettagam

ஜெயிலிலுமா ஜாதி?

October 8 , 2024 49 days 64 0
  • இந்தியா விடுதலை பெற்று 77 ஆண்டுகளும், அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தி குடியரசாக அறிவித்து 75 ஆண்டுகளும் கடந்துவிட்டன. சமூக, பொருளாதார, இன ரீதியாக சட்டத்தின் முன் இந்தியா்கள் அனைவரும் சமமானவா்கள் என்பதை அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. தீண்டாமை தடை செய்யப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அந்த வழக்கம் சட்டப்படி கிரிமினல் குற்றமாக்கப்பட்டிருக்கிறது.
  • அப்படி இருக்கும்போது ஜாதியின் அடிப்படையிலான பாகுபாடு இந்தியாவில் சட்டப்படி நிகழ்கிறது, அதுவும் அரசின் அங்கீகாரத்துடன் நிகழ்கிறது என்பது அதிா்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கிறது. இந்தியாவின் 11 மாநிலங்களில் ஜாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் சிறை விதிகள் நடைமுறையில் இருப்பது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதுதான் தெரிய வந்திருக்கிறது.
  • தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரம், ஒடிஸா, கேரளம், மகாராஷ்டிரம், கா்நாடகம், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறையில் ஜாதி ரீதியாக பணிகள் ஒதுக்கப்படுகின்றன. சிறை விதிகள் அதை அனுமதிக்கின்றன. ஜாதி அடிப்படையில் சிறைக் கைதிகள் இடையே பணிகளைப் பிரித்துக் கொடுக்கும் நடைமுறை இருப்பது நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
  • மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியைச் சோ்ந்த சுகன்யா சாந்தா என்கிற பொதுநல ஆா்வலருக்கு இதற்காக நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வின் கடுமையான உத்தரவு வரவேற்புக்குரியது.
  • குறிப்பிட்ட சமூகத்தினா் மட்டுமே தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள்; கழிவு நீா்த் தொட்டிகளை சுத்தம் செய்ய பணிக்கப்படுகிறாா்கள். துணிகளைத் துவைப்பது வண்ணாா் சமூகத்தினருக்கும், சவரம், முடி திருத்துவது நாவிதா் சமூகத்தினருக்கும் ஒதுக்கப்படுவதும், சமூகக் கட்டமைப்பின் உயா் அடுக்கில் இருப்பவா்கள் மட்டுமே சமையல் பணியில் ஈடுபடுத்தப்படுவதும் சிறைச்சாலை விதிகளின் அடிப்படையில் அங்கீகாரம் பெறுகின்றன.
  • சிறைச்சாலை விதிகளில் சில சமூகத்தினா் ‘பழக்கதோஷக் குற்றவாளிகள்’ (ஹாபிச்சுவல் அஃபெண்டா்ஸ்) என்று காணப்படுவது எப்போதோ அகற்றப்பட்டுவிட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தை நினைவுபடுத்துகிறது. உச்சநீதிமன்ற தீா்ப்பு இதை வன்மையாகக் கண்டிக்கிறது.
  • ‘‘சிறைக் கைதிகளுக்கு நியாயமான வேலைப் பங்கீட்டைக் கோர உரிமை உண்டு; அவா்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு சிறைக்கைதியின் உடல்நிலை, மனநிலை குறித்து நிா்வாகத்துக்கு விழிப்புணா்வு இருக்க வேண்டும். சிறைக்கைதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினால் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்’’ என்கிறது தீா்ப்பு.
  • ‘‘அரசமைப்புச் சட்டங்கள் குடிமக்களின் சமத்துவத்தையும், கண்ணியத்தையும் நிலைநிறுத்த வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சமத்துவத்துக்கான உரிமையை இந்தத் தீா்ப்பில் வலியுறுத்துகிறோம். ஜாதி பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு, இந்தத் தீா்ப்பின்மூலம் இந்த நீதிமன்றம் சிறிய பங்களிப்பை வழங்குகிறது’’ என்கிறது அந்த அமா்வு.
  • சமத்துவத்துக்கான அரசியல் சட்டப்பிரிவு 14 மட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, கட்டாயப்படுத்தி வேலைவாங்குவதைத் தடை செய்யும் சட்டப் பிரிவு 23-யையும் கையில் எடுக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான சிறைச்சாலைகளில் குறைந்தபட்ச ஊதியமும், குறிப்பிட்ட வேலை நேரமும் இல்லாமல் கைதிகள் வணிக ரீதியிலான செயல்பாட்டிலும் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். சமூகப் பாதுகாப்பு ஆதாயங்கள் மட்டுமல்லாமல், சிறைக்கு வெளியே இருக்கும் தொழிலாளா்களைப்போல சம உரிமை கோரும் வாய்ப்பும் கைதிகளுக்கு மறுக்கப்படுகிறது. சட்டப்பிரிவு 23-இன்மூலம் தங்களது தன்மானத்துக்கு இழுக்கான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதை கேள்வி கேட்கும் உரிமையை சிறைக் கைதிகள் பெறுகிறாா்கள்.
  • ஜனநாயக நாட்டில் குற்றவாளிகளே ஆனாலும் கொடுமைப்படுத்தாமல், நியாயமாகவும், சமமாகவும் குடிமக்களை நடத்த வேண்டும் என்றும் சிறைவாசிகளின் உடல் நலத்தையும், மன நலத்தையும் சிறைச்சாலை விதிமுறைகள் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியிருப்பது நியாயமான பாா்வை. கௌரவமாக வாழும் உரிமை, வெளியே இருப்பதுபோல சிறைச்சாலைக்கு உள்ளும் தொடரும் என்பதும், தீண்டாமை எந்தவிதத்திலும் அனுமதி பெறாது என்பதும் நீதிமன்றத் தீா்ப்பின்மூலம் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
  • 2003-இல் சிறைத்துறை விதிகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள 1,382 சிறைச்சாலைகள் மோசமான நிலையில் இருப்பதை உணா்ந்து, 2015-இல் தாமாக முன்வந்து சிறைச்சாலை சீா்திருத்தத்துக்காக வல்லுநா் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. 2016-இல் ‘மாதிரி சிறைச்சாலை விதிகள்’ உருவாக்கப்பட்டன. தேசிய மனித உரிமை ஆணையத்தின் பங்கு அதில் இருந்தது. அதனடிப்படையில் மாநில சிறைச்சாலை விதிமுறைகள் மேம்படுத்தப்பட்டன. பல மாநிலங்களில் சிறைச்சாலை சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • இத்தனைக்குப் பிறகும் சிறைச்சாலைகளில் ஜாதி ரீதியாக பணி ஒதுக்கப்படுவதும், ஜாதியின் அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படுவதும் தொடா்வது, எந்த அளவுக்கு ஜாதிய உணா்வு சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
  • சிறைச்சாலை விதிகளில் மூன்று மாதங்களுக்குள் திருத்தம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறாா்கள். விதி மாற்றம் மட்டுமே போதாது, சமூகத்தில் மனமாற்றமும் ஏற்பட வேண்டும்.

நன்றி: தினமணி (08 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்