TNPSC Thervupettagam

ஜெய்சங்கரின் சாதுரிய அணுகுமுறை

October 6 , 2023 463 days 303 0
  • ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற குறளுக்குப் பொருத்தமான ஓா் உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால் நமது வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கா் தோ்வு செய்யப்பட்டதைச் சொல்லலாம். பிரதமா் நரேந்திர மோடி அரசில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தெளிவான முடிவுகளில் அதுவும் ஒன்று.
  • பல ஆண்டுகள் வெளியுறவுத்துறையில் அவருக்கு இருக்கும் அனுபவம், தெளிவு, உலக நாடுகள் பற்றிய புரிதல், அறிவார்த்தமான செயல்பாடு, துணிச்சலான முடிவுகள், தன்னம்பிக்கை மிளிரும் சொற்கள் தேசத்தின் மதிப்பை, கௌரவத்தை உலக அரங்கில் உயா்த்தி இருக்கின்றன.
  • பல துணிச்சலான தீா்க்கமான முடிவுகளை எடுத்து உலகையே பாரதத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார் அவா் என்பதற்கு சமீபத்திய சில நிகழ்வுகளே எடுத்துக்காட்டு. உக்ரைன் - ரஷியா போர் மூண்டபோது உக்ரைனில் நமது மாணவா்களை மீட்கத் தனியே வழித்தடம் அமைத்து அவா்களோடு பாகிஸ்தான் உட்பட அண்டை நாட்டு மாணவா்களையும் சோ்த்து மீட்டு வந்ததை மறந்து விட முடியாது.
  • சூடானில் உள்நாட்டு ராணுவம், துணை ராணுவப்படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட போது பாதுகாப்புத்துறையின் துணையுடன் சூடானிலிருந்த நமது மக்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் நிகழ்த்திய மீட்பு நடவடிக்கைகளைக் கண்டு பிரமிக்காதவா்கள் இல்லை. இது ராஜதந்திரத்தோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதை உலகமே அதிசயித்துப் பார்த்தது.
  • வெளியுறவுக் கொள்கை ஸ்திரப்படும்போதுதான் உள்நாட்டில் வளா்ச்சி சாத்தியமாகும் என்பதை உணா்ந்து செயல்படுகிறார் வெளியுறவுத் துறை அமைச்சா். போர்ச் சூழலில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முடிவினை மேற்கொண்டது தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடு.
  • எந்த இடத்தில் நட்புறவைப் பேணுவது, எந்த இடத்தில் திடமான முடிவுகளை அறிவிப்பது என்பதில் அவருக்குத் தீா்க்கமான பார்வை இருக்கிறது. அதே நேரத்தில் ஆக்ரோஷமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடியும். பாரதத்தைக் குறைவாக விமா்சிக்க முயல்வோருக்குத் தக்க பதிலடி கொடுக்கும் பொழுது அவரது சொற்களில் அனல் பறக்கிறது.
  • இந்தியாவில் சிறுபான்மையினா் நடத்தப்படுவது கவலை அளிக்கிறது என்றும், இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் சில மேலைநாட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன. அதற்கு, ‘உலகத்தில் சிலா் இப்படிச் சான்றிதழ் கொடுப்பதற்காகத் தம்மைத் தாமே நியமித்துக்கொண்டிருக்கின்றனா். இப்போது இந்தியா அவா்களது சான்றிதழுக்குக் காத்திருக்கவில்லை என்பதை அவா்களால் ஜீரணிக்க முடியவில்லை’ என்று அறிக்கை கொடுத்தார். அவரது அச்சமற்ற கருத்துகள் உலக நாடுகளில் தலைப்புச் செய்தியாயின.
  • இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. தெற்குலகின் குரலை உலக நாடுகள் கேட்டாக வேண்டிய தருணம் இது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறது. ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரின் பங்கு சிறப்பானது. ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் கூட்டறிக்கை வெளியிட முடியாமல் போய்விடக்கூடும் என்றிருந்தபோது அனைத்து உறுப்பு நாடுகளுடனும் தனித்தனியே பேசி, ஏற்றுக்கொள்ளச் செய்ததில் அவரது அனுபவம் வெளிப்பட்டது.
  • சமீபத்தில், கனடா பிரதமா் இந்தியாவின் மீது குற்றம் சுமத்திய நிலையில் வெளியுறவுத்துறை திடமாக எதிர்கொண்டு வருவதைப் பார்க்கிறோம். கனடாவின் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராகத் தனது அரசியலை மேற்கொண்ட அந்நாட்டுப் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, தனது நட்பு நாடுகள் கூடத் தனக்காகக் குரல் கொடுக்காத நிலையில் தன்னுடைய வார்த்தைகளை மென்மைப்படுத்திக் கொண்டு வருகிறார்.
  • கனடாவின் குற்றச்சாட்டை மறுத்தது மட்டுமல்லாது அந்நாட்டுத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது முதல் கனடா மக்களுக்கு விசா வழங்குவதில்லை என்ற முடிவு வரை அதிரடியான நடவடிக்கைகளை பாரதம் மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா இருக்கிறது என்று அறிவிப்புச் செய்தார் வெளியுறவுத் துறை அமைச்சா்.
  • அண்மையில், ஐ.நா. சபையில் பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கா் உரை நிகழ்த்தியதை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சொல்ல வேண்டும். ஜி20 மாநாட்டு வெற்றி, கனடா - பாரதம் உறவில் உரசல் ஏற்பட்டிருக்கும் சூழலில் வெளியுறவுத்துறை அமைச்சரின் உரை முக்கியத்துவம் பெறுகிறது. உலக நாடுகளுக்கான செய்தி நிறைந்ததாக அவரது உரை அமைந்திருந்தது.
  • நியூயாா்க் நகரில் நடைபெற்ற 78-ஆவது ஐ.நா. சபையில், ‘பாரதத்தின் வணக்கம்’ என்று உரையைத் தொடங்கினார். அமைச்சரின் உரையில் ஐ.நா. சீா்திருத்தம், கனடாவுக்கு மறைமுக பதிலடி, பாகிஸ்தானுக்கான எச்சரிக்கை ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
  • ஐ.நா. சீா்திருத்தம் காலத்தின் கட்டாயம் என்றும் அதனைக் காலவரையின்றித் தள்ளிப் போட முடியாது என்று அழுத்தமாகப் பதிவு செய்தார். மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது போன்றவற்றை தங்கள் அரசியலுக்கேற்ப மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தினார்.
  • உலகம் மாறிக் கொண்டு வருகிறது. அதற்கேற்ப சீா்திருத்தமும் அவசியமாகிறது. மாற்றம் தேவை என்பது தெரிந்த பிறகும் அதனை உடனடியாக மேற்கொள்ளாமல் இருப்பதும் சரியல்ல என்ற பாரதத்தின் கருத்தை அமைச்சா் ஐ.நா. சபையில் எடுத்துரைத்தார். இந்தக் கருத்தை ஜி20 மாநாட்டில் உரையாற்றும்போது பிரதமா் நரேந்திர மோடியும் கூறியிருந்தார்.
  • தனது கருத்துக்கு வலு சோ்க்கும் வகையில், ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை உறுப்பினராக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டார். உண்மையில் அனைவருக்குமான அமைதியான உலகம், வளா்ச்சி என்பதை ஐ.நா. செயல்படுத்த வேண்டும். அனைவருக்குமான தளமாக ஐ.நா. இருக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தி மிக அழுத்தமாக இத்தகைய கருத்தை பாரதம் எடுத்து வைப்பது அதன் வெளியுறவுக் கொள்கையில் இருக்கும் தெளிவைக் காட்டுகிறது.
  • ஆப்பிரிக்கக் கண்டத்தின் குரல் உலக அரங்கில் இன்றைக்கு ஒலிக்க வேண்டும் என்ற முடிவை பாரதம் செயல்படுத்தியுள்ளது. ஆனால், இது தாமதமானது. இன்னும் முன்னரே அவா்களுக்கான முக்கியத்துவம் தரப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறைகளை எடுத்துச் சொல்வதில் வினயமாக தனது சொற்களைத் தோ்ந்தெடுத்துப் பயன்படுத்தினார் வெளியுறவுத் துறை அமைச்சா்.
  • சீா்திருத்தம் பாதுகாப்புக் கவுன்சிலில் இருந்து தொடங்க வேண்டும். செயல்திறனும் நம்பகத்தன்மையும் அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும்போது மட்டுமே ஒரு அமைப்புக்கு ஏற்படும் என்பதையும் கூறினார். தேசங்களின் பாதுகாப்பை மனதில் கொண்டே ஐ.நா. சபை உருவானது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அமைச்சா் முன்வைத்த இந்தச் சொற்கள் அா்த்தம் நிறைந்தவை.
  • சிலநாடுகளை நேரடியாகவும், சில நாடுகளை மறைமுகமாகவும் ஜெய்சங்கா் கடுமையாக விமா்சித்தார். உலகின் நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தும் சில நாடுகள் ஏற்படுத்தும் பிரச்னைகளைத் தொட்டுக் காட்டியவா், இன்றைக்கும் சில நாடுகள் தங்கள் போக்கில் விதிமுறைகளை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால், அனைவரும் ஒருமித்து செயல்பட வேண்டும் அப்பொழுது தான் நியாயமான ஜனநாயக முறை சாத்தியமாகும் .
  • உலக நாடுகள் ஒப்புக்கொண்டு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விதிகளுக்கு உட்பட்டு அனைவரும் செயல்பட வேண்டும். அதற்கு யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது இதுவே எங்கள் நிலைப்பாடு. இதனை பாரதம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார். போர்ச் சூழல் முதல் சுற்றுச்சூழல் வரை அனைத்து அம்சங்களிலும் எல்லாருக்கும் ஒரே விதிமுறைதான். சிறப்பானவா்கள் என்று யாரும் இல்லை என்பதை எடுத்துரைத்தார்.
  • பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கெதிரான நிலைப்பாட்டை அரசியல் வசதிக்கேற்பத் தீா்மானிக்க முடியாது. இதேபோல், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு பரஸ்பர மரியாதை அவசியமானது. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற கொள்கை ஆளுக்கு ஆள் மாறுபட முடியாது என்று கூறி, கனடா பிரதமா் தன்னுடைய அரசியலைச் செய்ய இத்தகைய முதிர்ச்சியற்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதைச் சாடினார்.
  • ஜனநாயகத்தின் பண்டைய மரபுகளும் நவீன வோ்களும் கொண்ட சமூகத்தின் பிரதிநிதியாக நின்று பேசுகிறேன். நவீனத்தைத் தழுவிய நாகரீக சமூகமாக, பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் சமமாக ஏற்கும் சமூகமாக எங்கள் நம்பிக்கையை நாங்கள் இந்த அரங்கில் வைக்கிறோம். இந்த இணைப்புதான் இந்தியாவை, அதாவது பாரதத்தை வரையறுக்கிறது என்று அவா் முடித்த சமயத்தில் பாரதத்தின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் பெருமிதம் ஏற்பட்டது.
  • ஒளிவுமறைவற்ற, பாசாங்கு இல்லாத நோ்மையான அணுகுமுறை என்றைக்கும் பலனளிக்கக்கூடியது என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறார் அமைச்சா் ஜெய்சங்கா். ‘கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு’ என்று தமிழ்மறை பாடம் சொல்கிறது. தமிழரான ஜெய்சங்கா் இந்தக் குறளின் பொருளாகச் செயலாற்றுகிறார். இவரது செயல்பாடுகள் பாரதத்தின் வரலாற்றில் தவிர்க்க இயலாத பக்கங்களாக இடம்பெறும் என்பதையெண்ணித் தமிழராக நாம் பெருமை கொள்ளலாம்.

நன்றி: தினமணி (06 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்