காந்திக்கு மகாத்மா எனும் பட்டம் வழங்கப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே மகாத்மா எனும் பட்டம் பெற்ற மற்றொரு சமூக சீர்திருத்தவாதி இருந்தார்.
ஜோதிராவ் கோவிந்ராவ் பூலே ஒரு சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
இவர் மகாத்மா பூலே, ஜ்யோதிபா பூலே, ஜோதிபா பூலே, ஜோதிராவ் பூலே என்றும் அறியப்பட்டார்.
பூலே என்னும் பட்டமானது 1888 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் மகாராஷ்டிராவின் சமூக ஆர்வலரான வித்தல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேகரால் வழங்கப்பட்டது ஆகும்.
இவரின் பணிகள் அனைத்தும் குறிப்பாக தீண்டாமை மற்றும் சாதிமுறைகளை ஒழித்தல், பெண்கள் விடுதலை மற்றும் அதிகாரமளித்தல், இந்துச் சமுதாயக் குடும்ப வாழ்வைச் சீர்திருத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது ஆகும்.
மகாராஷ்டிராவில் சமூகச் சீர்திருத்தங்களை கொண்டு வந்த முக்கியமான நபர்களில் ஒருவராக பூலே கருதப்படுகிறார்.
இவரின் மனைவியான சாவித்ரி பாய் பூலேவுடன் இணைந்து இந்தியாவில் பெண் கல்விக்கான முன்னோடியாகவும் இவர் கருதப்படுகின்றார்.
இவரின் மனைவியான சாவித்ரி பாய் பூலேவும் ஒரு சமூக சேவகர் ஆவார்.
இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும், பெண் விடுதலை இயக்கத்தின் முதல் தலைவராகவும் அறியப்படுகின்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
ஜ்யோதி ராவ் கோவிந்த்ராவ் பூலே மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் 1827 ஆம் ஆண்டில் பிறந்தார்.
இவரின் தந்தை கோவிந்த்ராவ் மற்றும் தாய் சிம்னா பாய் ஆவர்.
ஜோதிராவின் குடும்பமானது “மாலி” பிரிவைச் சேர்ந்தது ஆகும். அவர்களின் உண்மையான குடும்பப் பெயர் “கோர்ஹேய்” என்பதாகும்.
இவரின் தந்தை மற்றும் தந்தையின் சகோதரர்கள் அனைவரும் பூ வியாபாரிகளாக இருந்தனர். எனவே இவரின் குடும்பம் “பூலே” என்று அறியப்படுகின்றது.
இவர் தனது 13 வயதில் அதே சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான சாவித்ரி பாயைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர் தனது மனைவி சாவித்ரி பாயை வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் ஊக்கப்படுத்தினார்.
இவர் உள்ளூர் ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படிக்குமாறு வலியுறுத்தப்பட்டு 1847 ஆம் ஆண்டில் ஆங்கில பள்ளிக் கல்வியை முடித்தார்
அங்கு பிராமணரும், அவரது வாழ்நாள் முழுவதும் நெருங்கிய நண்பராக இருந்தவருமான சதாசிவ் பல்லால் கோவந்தேவை அவர் சந்தித்தார்.
பூலே ஒரு சமூக ஆர்வலர் மற்றும் சீர்திருத்தவாதி என்பதைத் தாண்டி ஒரு தொழிலதிபராகவும் இருந்தார்.
இவர் விவசாயியாகவும் நகராட்சியில் ஒரு ஒப்பந்தத் தாரராகவும் இருந்தார்.
மேலும் இவர் 1876 ஆம் ஆண்டு பூனா நகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்று 1883 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
சமூக சீர்திருத்தங்கள்
கீழ் சாதியினர் மற்றும் பெண்கள் ஆகியோர் சமூகத்தில் மிகவும் பின் தங்கியோர் எனவும் கல்வி மட்டுமே அவர்களுக்கு விடுதலையளிக்கும் என்பதனை அவர் உணர்ந்து இருந்தார்.
பூலே குழந்தைத் திருமணங்களை கடுமையாக எதிர்த்ததுடன் விதவைகள் மறுமணத்திற்காகவும் உழைத்தார்.
1848 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிராவின் புனேவில் இந்தியாவில் தனியாரால் நடத்தப்படும் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கிய முதல் இந்தியர்கள் பூலே தம்பதியினர் ஆவர்.
பின்னர் அவர்கள் மஹர், மாங் போன்ற தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்பதற்கென பள்ளியைத் துவங்கினர்.
1863 ஆம் ஆண்டில் பிராமண விதவை கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாக குழந்தை பெற ஒரு இல்லத்தைத் துவங்கினார்.
இவர் சிசுக் கொலையைத் தடுக்கும் பொருட்டு ஆதரவற்றோர் இல்லத்தைத் துவங்கினார். இதன் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கென பாதுகாப்பு இல்லம் தொடங்கிய முதல் இந்து இவரே என நம்பப்படுகின்றது.
1868 ஆம் ஆண்டில் தனது சகோதரத்துவ அணுகுமுறையை வெளிப்படுத்த ஜோதிராவ் தனது வீட்டிற்கு வெளியில் அனைத்து சாதி மனிதர்களுக்கும் பொதுவான ஒரு குளியல் தொட்டியைக் கட்ட முடிவு செய்தார். மேலும் சாதியைப் பொருட்படுத்தாது அனைவருடனும் உணவு உண்ண விழைந்தார்.
1873 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளுக்காகவும் சாதி முறையை எதிர்க்கவும் பகுத்தறிவைப் பரப்பவும் சத்யசோதக் சமாஜ் அல்லது சத்தியத்தை அறிவோர் சங்கத்தை இவர் நிறுவினார்.
அவரின் மனைவியான சாவித்ரிபாய் அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவராக ஆனார்.
ஜோதிராவ் பூலே மற்றும் அவரின் சத்யசோதக் சமாஜ் அமைப்பு ஆகியவற்றின் போராட்டம் காரணமாக அரசானது விவசாயச் சட்டத்தை நிறைவேற்றியது.
இவரது சமாஜ் அமைப்பின் கருத்துகளுக்கு ஆதரவாக பூனேவை அடிப்படையாகக் கொண்ட செய்தித்தாளான “தீனபந்து” குரல் கொடுத்தது.
கீழ் சாதியினர் மற்றும் பாரம்பரிய வர்ணாசிரம முறைக்கு வெளியில் உள்ள சாதியைச் சார்ந்தோரைக் குறிக்கும் உடைக்கப்பட்ட அல்லது நசுக்கப்பட்ட எனும் பொருள் தரும் மராத்தி வார்த்தையான “தலித்” எனும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் இவரேயாவார்.
பின்னர் 1970களில் இந்த சொல்லானது தலித் சிறுத்தை அமைப்பினரால் பிரபலப்படுத்தப்பட்டுப் பின்னர் இலக்கியங்களிலும் அது சேர்க்கப்பட்டது.
சாவித்திரி பூலே (03 ஜனவரி 1831 – 10 மார்ச் 1897)
இவர் சாதி மற்றும் பாலின அடிப்படையில் மக்களிடையே நிலவும் பாகுபாடு மற்றும் அவர்களை நியாயமற்ற முறையில் நடத்தும் முறையை ஒழிப்பதற்காகப் பணியாற்றினார்.
இவர் மகாராஷ்டிராவின் சமூக சீர்திருத்த இயக்கத்தின் முக்கியமான நபராகக் கருதப்படுகின்றார்.
ஜோதிராவ் மற்றும் சாவித்ரி பாய் ஆகியோருக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் அவர்கள் ஒரு பிராமண விதவைக்குப் பிறந்த யஷ்வந்த் ராவை என்ற ஒரு மகனைத் தத்தெடுத்துக் கொண்டனர்.
இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் முதல் பெண் தலைமை ஆசிரியராகவும் கருதப்படுகின்றார்.
கீழ் சாதி மற்றும் பாலின அடிப்படையில் பிராமணர்கள் பெண்கள் படிப்பதைத் தடை செய்திருந்ததால் இவரின் திருமணத்தின் போது சாவித்ரி பாய் படித்திருக்கவில்லை.
அரசு பதிவேடுகளின்படி சாவித்ரி பாய் வீட்டில் கல்வி கற்பதற்கு ஜோதிராவே பொறுப்பாவார்.
அவர் தனது கணவருடன் சேர்ந்துப் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தார். மேலும் மொத்தமாக 18 பள்ளிகளையும் அவர்கள் இணைந்து திறந்தனர்.
சாவித்ரி பாயின் நெருங்கிய தோழியான பாத்திமா பேகம் ஷேயிக் இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியர் ஆவார்.
முன்னதாக சாவித்ரியுடன் இணைந்து பாத்திமாவும் பொதுவான பள்ளிக்குச் சென்றார். பின்னர் இருவரும் இணைந்துப் பட்டப்படிப்பை முடித்தனர்.
சாவித்ரி பாய் 1854 ஆம் ஆண்டில் காவ்யா பூலே எனும் புத்தகத்தையும் 1892 ஆம் ஆண்டு பவன் காஷி சுபோத் ரத்னாகர் எனும் புத்தகத்தையும் “செல்க, கல்வி பெறுக” எனும் தலைப்பிலான ஒரு கவிதையையும் வெளியிட்டார்.
பெண்களது உரிமைகள் தொடர்பான விழிப்புணர்விற்காக மகிளா சேவா மண்டல் எனும் அமைப்பினை இவர் நிறுவினார்.
பாண்டுரங் பாபாஜி கெய்குவாட் என்பவரின் மகனைக் காப்பாற்றும் முயற்சியில் சாவித்ரி பாய் வீரமரணமடைந்தார்.
இறுதிக் காலங்கள்
1888 ஆம் ஆண்டு ஜோதிபா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடக்கமடைந்தார்.
1890 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் நாள் தனது 63 ஆம் வயதில் புனேயில் அவர் காலமானார்.
அவரது படைப்புகள்
கவிதைகள் மற்றும் நாடகங்கள் உட்பட 16க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.
திரித்திய ரத்னா (1855), குலாம்கிரி (1873), ஷேத்கரயாச்சா ஆசுத் அல்லது விவசாயிகளின் சாட்டை (1881), சத்யசோதக் சமாஜோக்ட் மங்களாஷ்டகசாஹ் சர்வ பூஜா-விதி (1887) போன்ற இவரின் பல புத்தகங்கள் புகழ்பெற்றவைகளாகும்.
இவற்றில் அமெரிக்காவின் அடிமைத்தனத்தை ஒழித்த மக்களுக்கு இவர் அர்ப்பணித்த குலாம்கிரி மிகவும் பிரபலமானது ஆகும்.
சமூக அநீதிக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இவரின் வழிநடத்துதலின் கீழ் “சாட்சார்” அங்க் 1 மற்றும் 2 ஆகிய நாடகங்கள் அவரால் எழுதப்பட்டன.
நினைவுச் சின்னங்கள்
1974 ஆம் ஆண்டில் ஜோதிபாவின் வாழ்க்கை வரலாற்றை “மகாத்மா ஜோதிபா பூலே: நமது சமூகப் புரட்சியின் தந்தை” எனும் பெயரில் தனஞ்செய் கீர் என்பவரால் எழுதப்பட்டது.
இவரைக் கௌரவிக்கும் பொருட்டு புனேவில் மகாத்மா பூலே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
மகாராஷ்டிரா அரசானது ஏழைகளுக்கு கட்டணமின்றிச் சிகிச்சையளிக்கும் மகாத்மா ஜ்யோதிபா பூலே ஜீவன்தாயினி யோஜனா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இவரின் சித்தாந்தங்கள்
இவர் தாமஸ் பெயின் எழுதிய “மனிதனின் உரிமைகள்” எனும் புத்தகத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இவர் உள்நாட்டு மக்களை ஒடுக்கி அடிமைப்படுத்தி சாதிமுறைகளை உருவாக்கி பிராமணர்களின் உயர்வு நிலையை உறுதி செய்யும் வகையில் சாதிக் கட்டமைப்பை உருவாக்கிய காட்டுமிராண்டித்தனமான ஒரு இனமாக ஆரியரைக் கருதினார்.
தீண்டத்தகாதவர்களை பிராமணர்களின் சுரண்டல்களிலிருந்து விடுவிப்பதற்காக பூலே தனது வாழ்வை முழுவதுமாக அர்ப்பணித்தார்.
மேலும் இவர் வேதங்களைத் தாக்கியும் அவற்றை தவறான உணர்வு நிலையின் வடிவமாகவும் கருதினார்.
இவர் கீழ் சாதியினர் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படாத பூஜை நெறிமுறைகளை கோடிட்டுக் காட்டினார்.
இவர் பிராமணிய ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தார். மேலும் இவர் பிராமணர்களல்லாத திருமண விழாவைத் தொடங்கினார். பின்னர் இது பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது.
இவர் இஸ்லாமியர்களின் இந்தியப் படையெடுப்பிற்கும் இதே போன்ற கருத்துக்களைக் கொண்டிருந்தார்.
இவர் ஆங்கிலேயரை ஒப்பீட்டளவில் அறிவொளி கொண்டவர் மற்றும் தாராளவாதிகள் எனக் கருதினார்.
இவரின் பணிகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களானது அம்பேத்கர் மற்றும் காந்தி ஆகியோரை ஈர்த்தது. இதனால் பின்னாளில் இதே விவகாரங்களை அவர்கள் கையிலெடுத்தனர்.
1890 ஆம் ஆண்டில் பூலே காலமானார், ஆனால் அதே 1891 ஆம் ஆண்டில் அம்பேத்கர் பிறந்தார். எனவே இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.