TNPSC Thervupettagam
December 18 , 2024 7 days 50 0

ஞெகிழித் தடை

  • ஒவ்வொரு வருடமும் உலகளவில் 40 கோடி டன் ஞெகிழிக் கழிவு உற்பத்தியாவதாக ஐக்கிய நாடுகள் அவை குறிப்பிடுகிறது. இதில் 1.1 கோடி டன் கழிவு கடலில் கலப்பதாகவும்; 2024இன் இறுதியில் இது 2.9 கோடி டன்னாக அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதிகரித்து​வரும் ஞெகிழிக் கழிவானது சுற்றுச்​சூழலில் பாதிப்பை ஏற்படுத்து​வதுடன், கோடிக்கணக்கான மக்களின் வாழ்​வா​தா​ரம், உணவு உற்பத்தி போன்ற​வற்றில் கடுமையான தாக்​கத்தை ஏற்படுத்திவரு​கிறது.
  • இந்த நிலை​யில், ஞெகிழி மாசைக் கட்டுப்​படுத்துவது தொடர்பான ‘அரசுகளுக்கு இடையேயான பேச்சு​வார்த்​தைக் குழு’​வின் (The 5th Intergovernmental Negotiating Committee (INC-5) on plastic pollution) ஐந்தாவது மாநாட்​டில், உலக நாடு​களிடையே ஆக்கபூர்​வமான ஒப்பந்​தங்கள் ஏதும் நிறைவேற்றப்​ப​டாமல் முடிவடைந்​திருப்பது சுற்றுச்​சூழல் ஆர்வலர்​களிடம் அதிருப்​தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐ.என்​.சி. என்றால்?

  • ஞெகிழி மாசு​பாடு குறித்த ஐஎன்சி குழு என்பது சுமார் 170 நாடு​களின் கூட்​டமைப்பு. ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்​சூழல் அமைப்​பின் ஓர் அங்கமாக இந்தக் குழு செயல்​பட்டுவருகிறது. இந்த அமைப்பு, ஞெகிழி மாசு​பாட்​டைக் கட்டுக்​குள் கொண்டு​வரு​வதற்கான ஒப்பந்​தங்களை உருவாக்கு​கிறது. இந்த ஒப்பந்​தங்கள் அனைத்​தும் ஞெகிழி​யின் பயன்​பாடு, உற்பத்தி, வடிவ​மைப்பு, மறுசுழற்சி, அகற்றுதல் போன்ற​வற்றை மையமாகக் கொண்​டிருக்​கின்றன.
  • இந்த நிலை​யில், தென் கொரி​யா​வின் பூசான் நகரில் நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி தேதிவரை ஐஎன்சி குழு​வின் சந்திப்பு நடைபெற்​றது. இச்சந்​திப்​பில், உலகள​வில் ஞெகிழி மாசைக் கட்டுப்​படுத்த உருவாக்​கப்​பட்ட ஒப்பந்​தங்களை நிறு​வுவ​தில், உலக நாடு​களிடையே ஒருமித்த கருத்து எட்டப்​பட​வில்லை. இதன் காரணமாக ஞெகிழி மாசைக் கட்டுப்​படுத்​தும் உலக நாடு​களின் செயல்​பாட்​டில் சுணக்கம் ஏற்பட்​டுள்​ளது.

அதிகரிக்​கும் ஞெகிழிக் கழிவு:

  • 1950 முதல் 1970 வரையிலான காலக்​கட்​டத்​தில் உலக அளவில் குறைந்த ஞெகிழிக் கழிவே உற்பத்​தி​யானது. இதனால் அக்கழிவை உலக நாடு​களால் திறம்பட நிர்​வகிக்க முடிந்​தது. ஆனால், அதற்​கடுத்த ஆண்டு​களில் ஞெகிழிப் பயன்​பாடு தீவிரமடைந்​தது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்​சூழல் அமைப்​பின் தரவானது, 1979 முதல் 1990வரையிலான காலக்​கட்​டத்​தில் ஞெகிழிக் கழிவு உற்பத்தி மூன்று மடங்காக அதிகரித்​திருப்​ப​தாகக் கூறுகிறது.
  • மேலும், 1990 - 2000 காலக்​கட்​டத்​தில், கடந்த 40 ஆண்டு​களில் இருந்​ததைவிட ஞெகிழிக் கழிவின் அளவு கடுமையாக அதிகரித்​த​தால் அக்கழிவை நிர்​வகிப்​ப​தில் உலக நாடுகள் தடுமாற்றம் அடைந்தன. தற்போது, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 40 கோடி டன் ஞெகிழிக் கழிவை உலக நாடுகள் உற்பத்தி செய்​கின்றன. 2050ஆம் ஆண்டு​வாக்​கில் இது 110 கோடி டன்களை எட்டும் என அறிவிய​லா​ளர்கள் எச்சரிக்கை விடுத்​துள்ளனர்.

உலக அளவில்...

  • 70% ஞெகிழிக் கழிவு 20 நாடு​களால் மட்டுமே உற்பத்​தி​யாகிறது. ஒரு வருடத்​தில் அதிக அளவு ஞெகிழிக் கழிவை வெளி​யேற்றும் நாடு​களில் முதல் ஐந்து இடங்களை இந்தியா (93 கோடி டன்), நைஜீரியா (35 கோடி டன்), இந்தோ​னேசியா (34 கோடி டன்), சீனா (28 கோடி டன்), பாகிஸ்​தான் (26 கோடி டன்) ஆகிய நாடுகள் வகிக்​கின்றன.
  • பெரும்​பாலான ஞெகிழிக் கழிவு தெற்கு நாடு​களி​லிருந்​து​தான் உருவாகி​யுள்ளதாக சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன. தெற்கு நாடுகள் வெளி​யேற்றும் ஞெகிழிக் கழிவைக் கையாள்வதற்கான போதிய கழிவு மேலாண்​மைக் கட்டமைப்பு அந்நாடு​களிடம் இல்லை எனவும் சுற்றுச்​சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்​கின்​றனர்.

இந்தியா​வின் நிலைப்​பாடு:

  • 2024இல் பூசானில் நடைபெற்ற ஐஎன்சி கூட்​டத்​தில் ஞெகிழிக் கழிவைக் குறைக்​க​வும், முதன்மை ஞெகிழி பாலிமர்​களின் உற்பத்​தி​யைக் கட்டுப்​படுத்​த​வும் கொண்டு​வரப்​பட்ட ஒப்பந்​தங்களை ஏற்க இந்தியா மறுத்து​விட்​டது. முதன்மை ஞெகிழி பாலிமர்​களின் உற்பத்​தி​யைக் கட்டுப்​படுத்​தி​னால், நாட்டின் முன்னேற்றம் பாதிக்​கப்​படும் என்பது இந்தியா தரப்பு வாதமாக முன்​வைக்​கப்​பட்​டது. ஞெகிழிக் கழிவைக் குறைக்க, ஒருமுறை மட்டும் பயன்​படுத்​தித் தூக்கி எறியப்​படும் ஞெகிழிப் பொருள்​களுக்கு 2022 ஜூலை மாதம் முதல் இந்திய அரசு தடை விதித்தது.
  • குறிப்​பாக, பல்கலைக்​கழகங்​களில் உணவகங்​கள், விடு​திகள் உட்பட்ட இடங்​களில் ஒருமுறை மட்டுமே பயன்​படுத்​தக்​கூடிய ஞெகிழிப் பொருள்கள் பயன்​படுத்துவதைத் தடை செய்வதாகப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்​தது. எனினும் போதிய விழிப்பு​ணர்வு இன்மை​யால், ஒரு முறை மட்டுமே பயன்​படுத்​தும் ஞெகிழியை ஒழிப்​ப​தில் இந்தியா எதிர்​பார்த்த இலக்கை அடைய முடிய​வில்லை.
  • அரசு தடை செய்திருந்​தா​லும், அந்தத் தடையை நடைமுறைப்​படுத்து​வ​தில் எந்த அக்கறையை​யும் காட்​ட​வில்லை. ஞெகிழிக் கழிவைக் கட்டுப்​படுத்து​வதை​விட, ஞெகிழி உற்பத்தி நிறு​வனங்​களால் கிடைக்​கும் குறுகிய கால லாபத்​துக்கு மட்டுமே அரசு கவனம் கொடுக்​கிறது.
  • அடுத்து, ஞெகிழிக் கழிவை மறுசுழற்சி செய்​யும் முறைகள் தற்போது அனைத்து நாடு​களி​லும் பின்​பற்​றப்​படு​கின்றன. இந்தியா​விலும் ஞெகிழிக் கழிவை மறுசுழற்சி செய்து சாலைகள் அமைக்​கப்​பட்டு வருகின்றன. இருப்​பினும், அதிகரித்து​வரும் மக்கள்​தொகைக்கு ஏற்ப ஞெகிழிக் கழிவைத் திறம்பட முறைப்​படுத்து​வ​தில் கூடு​தலாகக் கவனம் செலுத்த வேண்டிய கட்டா​யத்​தில் இந்தியா உள்ளது.

ஞெகிழிக் கழிவு எரிபொருளுக்கு மாற்றா?

  • அதிகரித்து​வரும் புவி​யின் வெப்​பநிலை​யைக் கட்டுக்​குள் கொண்டுவர, 2023இல் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்​டில் புதைபடிவ எரிபொருள் பயன்​பாட்​டைக் குறைப்​பது, ஞெகிழிக் கழிவை மறுசுழற்சி செய்வது தொடர்பான கொள்​கைகளை உலக நாடுகள் ஏற்றுக்​கொண்டன. அதன்​படி, ஞெகிழிக் கழிவை எரிபொருளாக மாற்றும் முறையை நிபுணர்கள் பரிந்​துரைத்​தனர்.
  • ஆனால், “காலநிலை மாற்​ற​மும் ஞெகிழி மாசும் ஒரு நாணயத்​தின் இரண்டு பக்கங்​கள்; அவ்வாறு இருக்​கும்​போது புவி வெப்​பத்​துக்​குக் காரணமான கார்பன் உமிழ்​வைக் குறைக்க ஞெகிழிக் கழிவைப் பயன்​படுத்துவது என்பது இலக்​கில்​லாமல் படகில் பயணிப்​ப​தற்​குச் சமம்” என ஐக்கிய நாடுகள் சுற்றுச்​சூழல் திட்ட இயக்​குநர் இங்கர் ஆண்டர்சன் விமர்​சித்திருந்​தார்.
  • ஞெகிழி மாசைக் குறைக்​கும் ஒப்பந்​தங்களை நிறைவேற்று​வதற்கான பேச்சு​வார்த்​தைகளை 2025இல் ஐஎன்சி மீண்​டும் தொடங்கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அப்போது உலக நாடு​களிடம் ஒரு​மித்த கருத்து ஏற்​படும் எனச் சுற்றுச்​சூழல் ஆர்​வலர்கள் நம்​பிக்கை தெரி​வித்​துள்ளனர். ஞெகிழிக் கழி​வைச் சரியான ​முறை​யில் கை​யாள்​வதற்கான நிரந்​தரத் தீர்வை நோக்கி உலக ​நாடு​கள் நகருமா என்​ப​தைப் பொறுத்​திருந்​து​தான் ​பார்க்​க வேண்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்