- டாரின் என்பது நம் உடலிலேயே இருக்கும் ஒருவகை அமினோ அமிலம். நாம் சாப்பிடும் உணவின் மூலமும் இது கிடைக்கும். இருப்பினும், ஜிம்முக்குச் செல்பவர்கள் இதனை எனர்ஜி பானம் அல்லது ஊக்க மாத்திரைகளின் வழியே பெற முயல்கின்றனர்.
- கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை எலிகளிடம் செலுத்தி மேற்கொண்ட பரிசோதனையில், டாரின் செலுத்தப்பட்ட எலிகளின் ஆயுள்காலம் 10 முதல் 12 சதவீதம் அதிகரிப்பது தெரியவந்தது. குரங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் டாரின் காரணமாக ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிப்பது தெரியவந்ததுன.
- இதைத் தொடர்ந்து, 60 வயதுக்கு மேலான 12 ஆயிரம் மனிதர்களிடம் டாரின் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டது. அந்தச் சோதனையின் முடிவுகளின்படி, டாரின் செலுத்தப்பட்ட மனிதர்களின் உடலில் சர்க்கரை, கொழுப்பு ஆகியவை கட்டுப் பாட்டில் இருந்தன. 55 முதல் 70 வயது வரையிலான பெண்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்தது. உடல் பருமன் குறைந்தது; எலும்புகளும் தசைகளும் வலுவடைந்தன. இத்தகைய முடிவுகள் டாரின் மீது மருத்துவ உலகின் கவனத்தைத் திருப்பியுள்ளன, நமது கவனத்தையும்தான்.
டாரின் என்றால் என்ன?
- ஜிம்முக்குச் செல்பவர்கள் தங்களது செயல்திறனை அதிகரிப்பதற்காகச் சாப்பிடும் ஃபிட்னஸ் மாத்திரைகளிலும், எனர்ஜி பானங்களிலும் டாரினே முக்கியப் பங்கு வகிக்கிறது. இதிலிருந்தே டாரினின் செயல்திறனை நாம் புரிந்து கொள்ளலாம்.
- நமது உடலின் தசைகள், திசுக்கள், செல்கள் உள்ளிட்ட அனைத்தின் கட்டமைப்புக்கும், அவற்றின் வளர்ச்சிக்கும், செயலாற்றலுக்கும் புரதங்கள் இன்றியமையாதவை. இந்தப் புரதங்களை உருவாக்க உதவும் வேதிப்பொருள்களாக டாரின் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன.
வகைகள்
- பொதுவாக, இந்த அமினோ அமிலங்களை அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற அமினோ அமிலங்கள் (essential & nonessential aminoacids) என்று மருத்துவ உலகம் இரண்டு வகையாகப் பிரிக்கிறது. நமது உடலே உற்பத்தி செய்துகொள்ளும் அமினோ அமிலங்களை வெளியிலிருந்து நாம் பெறவேண்டிய அவசியமில்லை. இத்தகைய அமிலங்களை ‘அத்தியாவசியமற்ற அமினோ அமிலங்கள்’ என மருத்துவ அறிவியல் வரை யறுக்கிறது.
- வெளியிலிருந்து உணவாகவோ வேறுவழியிலோ பெறவேண்டிய அமினோ அமிலங்கள் ‘அத்தியாவசிய அமினோ அமிலங்கள்’ என வரையறுக்கப்படுகின்றன. இந்த இரண்டுமே நமது உடலுக்கு முக்கியமானவையே என்கிறார்கள் அறிவியலாளர்கள். இவற்றில், டாரின் என்பது நமது உடலே தயாரித்துக்கொள்ளும் ஓர் அமினோ அமிலம்.
பெயர்க் காரணம்
- இது முதன்முதலாக, 1820ஆம் ஆண்டில் ஐரோப்பியக் காளைகளின் (Bos taurus) பித்தநீரி லிருந்து கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே இது டாரின் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமினோ அமிலம், காளைகளில் மட்டுமல்லாமல் மீன், முட்டை, இறைச்சி, பால் பொருள்கள் என நமது அன்றாட உணவு வகைகளிலும் அதிகம் காணப்படுகிறது.
செயல் திறன்
- நமது உடலினுள் இதயம், மூளை, கண்கள், கல்லீரல், தசைகள் ஆகியவற்றில் டாரின் அதிகச் செறிவுடன் காணப்படுகிறது. தான் இருக்கும் இடங்களுக்கேற்ப அந்தந்த உறுப்புகளின் செயலாற்றலை இது நன்கு பெருக்குகிறது. குறிப்பாக இதயம், சிறுநீரகம், கண், நரம்பு மண்டல ஆரோக்கியம், உணவு செரிமானம், தசை வலிமை, சருமப் பாதுகாப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு போன்றவற்றில் இதன் செயல்திறனை நன்கு உணர முடியும். முக்கியமாக, செல்களுக்குள் ஆக்சிஜனேற்றம், நீர்த்தன்மை ஆகியவற்றை டாரின் அதிகரிப்பதால் நமது
உடலின் நோயெதிர்ப்பு
- ஆற்றல் வீரியமடைகிறது. நமது ஆரோக்கியம் மேம்படுகிறது. இளமையாக இருக்கும் காலமும் அதிகரிக்கிறது. ஏன் வெளியிலிருந்து பெறவேண்டும்? நமது உடல் தானாகவே இந்த டாரினை உற்பத்தி செய்துகொள்கிறது என்றாலும், பிறந்த குழந்தைக்கு ஆரம்பத்தில் தாய்ப்பால் மூலமாக மட்டுமே இது கிடைக்கிறது. குழந்தை வளர வளர அவர்களின் உடலே டாரினை உற்பத்தி செய்துகொள்ள ஆரம்பிக்கிறது. பிறகு, முதுமையில் டாரின் உற்பத்தி குறையத் தொடங்கும்.
- முதுமையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உற்பத்தி ஆகிறது. அதாவது, டாரின் உற்பத்தி குறையும்போதுதான் நமக்கு முதுமை ஆரம்பிக்கிறது என்றும் சொல்லலாம். மேலும், நோயுற்ற நிலைகளிலும், அதீத அழுத்தங்கள் நம்மை ஆட்கொள்ளும்போதும் டாரினின் உற்பத்தி குறைகிறது அல்லது அதன் தேவை அதிகரிக்கிறது.இத்தகைய சூழலில்தான், டாரினை மருந்தாகவோ, பானமாகவோ எடுத்துக்கொண்டால் தசைகளின் ஆற்றலும் செயல்திறனும் அதிகரிக்கும் என்று அதன் உற்பத்தியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
டாரின் தேவையா?
- உண்மையில், உடற்பயிற்சி அல்லது விளையாட்டின்போது நம் உடல் டாரின் உற்பத்தியைத் தானாகவே அதிகரித்துக்கொள்கிறது. மேலும், இந்த மருந்து அல்லது பானங்களில் காணப்படும் குறைந்த அளவு டாரின் நமது உடலினுள் பெரிய மாற்றங்களைத் தோற்றுவிக்காது. நான்கு அல்லது ஐந்து மடங்கு வரை இந்த மருந்துகளைக் கூடுதலாக உட்கொண்டால் மட்டுமே ரத்தத்தில் நாம் எதிர்பார்க்கும் அளவு டாரின் கிடைக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஆனால், அப்படி உட்கொள்ளும்போது, அந்தப் பானங்களில் உள்ள பிற உணவு ஊட்டங்களும், அதன் கலோரிகளும் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்துடன் தொடர்ந்து ஒரே வகை அமினோ அமிலத்தை உட்கொள்வதால் நைட்ரஜன் சமநிலை பாதிக்கப்படலாம். அதன் காரணமாகப் பல பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.
பரிந்துரை அவசியம்
- டாரினைத் தேவைப்படும்போது மருந்தாக அளிப்பதால் கிடைக்கும் பலன்களைக் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதய நோய், சிறுநீரக நோய், பக்கவாதம், கல்லீரல் நோய், அல்சைமர், கண் நோய் ஆகியவற்றில் அந்தந்த நோய்களுக்கான மருந்துகளுடன் துணைமருந்தாக டாரின் பயன்படுத்தப் படும்போது நல்ல பலன்களையே அளிக்கிறது என்றாலும், மருத்துவர் பரிந்துரை யின்றி இதை உட்கொள்ளக் கூடாது.
காத்திருப்பதே நலம்
- உடலுக்குத் தேவையான டாரினை உடலே உற்பத்தி செய்துகொள்ளும்; பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நமது அன்றாட உணவு வகைகளே போதுமானவை. இந்த நிலையில், மருத்துவத்தில் இணைமருந்தாகப் பயன்படும் இந்த டாரினை ஊக்க மருந்தாகவோ எனர்ஜி பானமாகவோ பயன்படுத்துவது ஆபத்தில் முடியக்கூடும்.
- நாம் அனைவரும், முக்கியமாக உடற் பயிற்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது. சில அறிவியலாளர்கள் கூற்றுப்படி டாரின் உண்மையிலேயே ஓர் ‘அதிசய மூலக்கூறு’ என்பது உண்மைதான் என்றாலும், அதன் இன்னொரு பக்கம் என்னவென்பதை அவர்கள் கண்டறிந்து சொல்லும்வரை நாம் காத்திருப்பதே நலம்.
நன்றி: தி இந்து (16 – 07 – 2023)