TNPSC Thervupettagam

டிரம்ப்பின் அதிரடி!

January 28 , 2025 41 days 150 0

டிரம்ப்பின் அதிரடி!

  • அமெரிக்க அதிபராக கடந்த திங்கள்கிழமை (ஜன. 20) பதவியேற்ற டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் பல நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடு, வர்த்தகம், வெளிநாட்டுப் பொருள்களுக்கு வரி விதிப்பு, சுகாதாரம், குடியேற்றம், எல்லைப் பாதுகாப்பு, குடியுரிமை போன்றவை தொடர்பாக அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது என்ன கூறினாரோ, அவற்றில் பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவை 48 மணி நேரத்துக்குள் பிறப்பித்து உலகையே அதிரவைத்துள்ளார்.
  • அவரது உத்தரவுகளில் ஒன்று உலக சுகாதார அமைப்பில் (டபிள்யூஹெச்ஓ) இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகும். 'கடந்த முறை அதிபராக இருந்தபோது உலக சுகாதார அமைப்புக்கு 50 கோடி டாலர் வழங்கினோம். அதே நேரம் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா 3.9 கோடி டாலர் மட்டுமே வழங்கியது நியாயமாகத் தெரியவில்லை. அந்த அமைப்பு உலக சுகாதார நெருக்கடிகளை சரியாகக் கையாளவில்லை; மேலும், அரசியல் ரீதியாக சார்பு நிலையைக் கொண்டுள்ளது' என விலகலுக்குக் காரணம் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
  • டிரம்ப்பின் ஆதங்கம் ஓரளவுக்கு நியாயம் என்றாலும், ஒரேயடியாக அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகினால், டபிள்யூஹெச் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலகம் முழுவதும் தோன்றும், பரவும் நோய்களுக்கான மூலகாரணம், அவற்றைத் தடுப்பது, புதிய தீநுண்மித் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிவது போன்ற மிக முக்கியப் பணிகளை டபிள்யூஹெச்ஓ செய்துவருகிறது.
  • டிரம்ப்பின் உத்தரவுகளில் மிக முக்கியமான மற்றொன்று, பருவநிலை மாறுபாடு தொடர்பாக 2015-ஆம் ஆண்டு பாரீஸில் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாகும்.
  • உலகை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களை அதிகமாக உமிழ்வதில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. பருவ நிலை மாறுபாடு காரணமாக, வழக்கத்துக்கு மாறாக பருவம் தவறிய மிக அதிகமான மழை, மிக அதிகமான வெப்பம் போன்றவற்றை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இதனால், புதிதுபுதிதாக நோய்த் தொற்றுகள் உருவாகி வருகின்றன.
  • உலகிலேயே அதிகபட்சமாக, அமெரிக்கா கடந்த 2023-இல் தின மும் சராசரியாக 19.4 மில்லியன் பேரல் (ஒரு பேரல் - 159 லிட்டர்) கச்சா எண்ணெய் உற்பத்தி செய்தது. இப்போதும் உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்காவே உள்ளது.
  • அதேபோன்று, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் மற்றொரு எரிபொருளான எரிவாயு உற்பத்தியிலும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு உலகிலேயே அதிக திரவ இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) ஏற்றுமதி செய்த நாடாகவும் உள்ளது.
  • கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி, அதிக வாகனங்கள் பயன்பாடு போன்றவற்றின் மூலம் பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ள அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் உலக அளவிலான மாநாடுகளில் கொடுக்கும் வாக்குறுதிகளை எப்போதுமே நிறைவேற்றுவதில்லை.
  • நிதி நெருக்கடி அதிகமாகி டபிள்யூஹெச்ஓ-வின் பணிகளில் தொய்வு ஏற்படுவதாலும், பசுமை இல்ல வாயு தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாலும் பெருமளவில் பாதிக்கப்படப்போவது வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும்தான். பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவருக்கு வழங்கும் குடியுரிமையை ரத்து செய்வது என்ற டிரம்ப்பின் அறிவிப்பு அங்கு வாழும் இந்திய சமூகத்தவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
  • லட்சக்கணக்கான இந்தியர்கள் தற்காலிக நுழைவு இசைவு (விசா) பெற்று அங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அங்கு குழந்தை பிறக்கும் நிலையில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. டிரம்ப்பின் இந்த உத்தரவைத் தொடர்ந்து குடியுரிமை வழங்கப்படாவிட்டால், அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, பெரியவர்கள் ஆகும்போது சட்டபூர்வ வேலை செய்யும் உரிமை, வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைக்காது. டிரம்ப்பின் இந்த உத்தரவை எதிர்த்து 22 மாகாண அரசுகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. எனினும், பல கட்டங்களைத் தாண்டி இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு வரும்போது அங்கு டிரம்ப்புக்கு சாதகமான நீதிபதிகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த அரசாணை நிராகரிக்கப்படுவது சந்தேகமே.
  • இதுபோதாதென்று, சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் பதிவு செய்யப்படாத 7.25 லட்சம் இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் ஒட்டுமொத்தமாக நாடு கடத்தப்பட்டால் அது இந்தியாவுக்குப் பெரும் நெருக்கடியாக அமையும்.
  • அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், இது தொடர்ந்தால் இந்திய பொருள்கள் மீது அதிக வரி விதிக்க நேரிடும் என்றும் டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்லுறவு உள்ளது. இப்போதைக்கு அதிக வரிவிதிப்பு தொடர்பாக நேரடியான அச்சுறுத்தல் இல்லை என்றாலும், டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்பதை கணிக்க முடியாததால் எந்த சூழலையும் சமாளிக்க இந்தியா திட்டமிடுதல் காலத்தின் கட்டாயமாகும்.
  • அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்கிற டிரம்ப்பின் கொள்கை ஏற்படுத்த இருக்கும் பிரச்னைகளை எண்ணி உலகம் அதிர்ந்து போயிருக்கிறது!

நன்றி: தினமணி (28 – 01 – 2025)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top