TNPSC Thervupettagam

டிரம்ப் 2.0: காலநிலைச் செயல்பாடுகள் என்னவாகும்?

November 12 , 2024 72 days 118 0

டிரம்ப் 2.0: காலநிலைச் செயல்பாடுகள் என்னவாகும்?

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமரப்போகும் டிரம்ப் ஒரு காலநிலை மறுப்பாளர் (Climate denier). தேர்தல் பிரச்சாரத்தின்போது, “காலநிலை மாற்றம் என்பது ஒரு புரளி; மிகப்பெரிய ஏமாற்று வேலை” என்று பகிரங்கமாகப் பேசிய அவர், மீண்டும் அதிபராகியிருக்கும் நிலையில் காலநிலை தொடர்பான அமெரிக்காவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
  • “அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க அரசின் காலநிலைச் செயல்பாடுகள் தடம்புரளும்” என்கிறார் காலநிலை ஆராய்ச்சியாளர் ரேச்சல் க்ளீட்டஸ். டிரம்ப்பின் மீள்வருகை உலகளாவிய காலநிலைச் செயல்பாடுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்தப் பாதிப்பு பல்வேறு தளங்களில் நிகழக்கூடும்.

உள்நாட்டுச் செயல்பாடுகளில் மாற்றம்:

  • “எண்ணெய் வளங்களைத் தொடர்ந்து நாம் தேட வேண்டும்; அமெரிக்காவின் ஆற்றல் உற்பத்தியைப் பலமடங்கு அதிகரிக்க வேண்டும்” என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்ப் அறிவித்திருந்தார். “தொழில் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆகவே, நாம் அதிகமான அனல் மின் நிலையங்களை அமைக்க வேண்டும்” என்றும் அவர் கூறியிருந்தார்.
  • எதிர்வரும் அவரது பதவிக்காலத்தில் அமெரிக்காவின் சூழலியல் செயல்பாடுகள், ஆற்றல்சார் செயல்பாடுகள் பெரிய அளவில் தொய்வடையும். பூஜ்ய கரிம உமிழ்வை நோக்கிய அமெரிக்காவின் பயணம் தடைபடும். தனது முந்தைய பதவிக்காலத்தில் அவர் நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்தியிருக்கிறார். இந்த முறையும் அது நடக்கக்கூடும்.

பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுதல்:

  • காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்க வேண்டும் என்பது டிரம்ப்பின் நிலைப்பாடாக இருந்தி ருக்கிறது. “பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்கர்களைப் பாதிக்கிறது; மாசுபடுத்துபவர்களை உண்மையில் பாதுகாக்கிறது. அதீதமாகச் செலவு வைக்கும் இந்த ஒப்பந்தத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் பிரச்சாரக் கூட்டங்களில் பேசியிருக்கிறார். தனது முந்தைய பதவிக்காலத்தில் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அவர் அமெரிக்காவை விலக்கினார்.
  • அவருக்கு அடுத்து அதிபரான ஜோ பைடன், பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை இணைத்தார். “பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை நீக்குவேன்” என்று பிரச்சாரத்தின்போதே தெரிவித்திருக்கிறார் டிரம்ப். இது நிகழும்பட்சத்தில் உலகின் மிகப்பெரிய கரிம உமிழ்வு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, அதற்கான தீர்வைக் கொடுக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும். அமெரிக்காவைக் காரணம் காட்டிப் பிற நாடுகளும் செயல்பாடுகளைக் குறைக்கலாம். உலகளாவிய காலநிலைச் செயல்பாடுகளில் தேக்கம் ஏற்படலாம்.
  • இன்னொரு கவலைதரும் அம்சத்தையும் அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சென்ற முறை அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியபோது மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், இந்த முறை விரைவிலேயே அமெரிக்கா வெளியேறுவதற்கு பாரிஸ் ஒப்பந்தமே இடம் கொடுத்திருக்கிறது. இதை நடைமுறைக்குக் கொண்டுவரும் ஆவணங்களும் அமெரிக்காவில் தயார் நிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர் சாரா ஷோன்ஹார்ட் தெரிவிக்கிறார். ஆகவே, சென்ற முறையைவிட இப்போது பாதிப்பு அதிகமாகும்.
  • அதிக அளவில் கரிம உமிழ்வை வெளியிடும் ஒரு நாடு பொறுப்பிலிருந்து விலகினால், பிற நாடுகளின் சுமை அதிகமாகும். காலநிலை மாற்றத்தின் தீவிரம் அதிகமாகிவரும் சூழலில் இது பிற நாடுகளுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். ஏழை நாடுகள் அதிகமாகப் பாதிக்கப்படும்.

காலநிலை மறுப்பு மனநிலை பரவுதல்:

  • “சொல்லப்போனால் உலகம் குளிர்ந்துவருகிறது, இவர்களோ பூமி வெப்பமாகிறது என்கிறார்கள்” என்று காலநிலை அறிவியலின் அடிப்படையையே விமர்சித்தவர் டிரம்ப். உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபரே வெளிப்படையான காலநிலை மறுப்பாளர் எனும்போது, அது பொது மனநிலையிலும் எதிரொலிக்கலாம்.
  • காலநிலை சார்ந்த பல அறிவியல் ஆலோசனைகளைத் தனது முந்தைய ஆட்சியில் டிரம்ப் மறுத்திருக்கிறார்; நிதி ஒதுக்கீட்டையும் குறைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இது தொடர்ந்தால், அது காலநிலை மறுப்புக்குச் சாதகமான சூழலை உருவாக்கும். அறிவியலாளர்களின் குரல் மழுங்கடிக்கப்படும்.

காலநிலை நிதி:

  • காலநிலைச் செயல்பாடுகளிலிருந்தும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்கா விலகும்பட்சத்தில், அமெரிக்காவிடமிருந்து உலக நாடுகளுக்குக் கிடைக்கும் காலநிலை நிதியும் குறையும். குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகள், தீவு நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் ஆகியவை இதனால் பெருமளவில் பாதிக்கப்படும். முந்தைய ஆட்சியின்போது, “ஐ.நா-வின் பசுமை கால நிதியத்துக்கு அமெரிக்கா பங்களிக்காது” என்று டிரம்ப் முடிவெடுத்தார். அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த முறையும் அப்படிப்பட்ட முடிவுகளை அவர் எடுக்கக்கூடும்.
  • காலநிலைச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை நிதி ஒதுக்கீடு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பாரிஸ் ஒப்பந்தம் தொடங்கிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு 2022இல்தான் காலநிலைக்கான இழப்பு, பாதிப்பு நிதியம் (Loss and damage fund) தொடங்கப் பட்டிருக்கிறது. அது எப்படி இயங்கப்போகிறது என்பதையே இன்னும் உலக நாடுகள் ஒருமித்து முடிவெடுக்கவில்லை. இந்தச் சூழலில் மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்கா பின்வாங்கினால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காலநிலைத் தாக்கங் களை எதிர்கொண்டுவரும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்குக் கிடைக்க வேண்டிய நிதி உதவி தடைபடும்.

பிற ஒப்பந்தங்களிலிருந்து விலகுதல்:

  • காலநிலை மாற்றத்துக்கான பிற செயல்பாடுகளிலிருந்தும் விலகிக்கொள்ள டிரம்ப் முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பிலிருந்து (UNFCC) அமெரிக்காவை அவர் விலக வைக்கப்போவதாகப் பேசப்படுகிறது.
  • பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதைப் போல இது அவ்வளவு சுலபமான செயல்பாடு அல்ல என்றாலும், ஒருவேளை அது நடந்துவிட்டால் உலகளாவிய காலநிலைச் செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்படும். அவ்வளவு சுலபமாக மீண்டும் இந்தக் கட்டமைப்பில் இணையவும் முடியாது. “இந்தக் கட்டமைப்பிலிருந்து ஒருவேளை அமெரிக்கா விலகினால், அமெரிக்காவின் நீண்டகால காலநிலைச் செயல்பாடுகள்கூட மிக மோசமாகப் பாதிக்கப்படும்” என்று எச்சரிக்கிறார் நதேனியல் கோஹென்.

சீனாவின் காலநிலைச் செயல்பாடுகள்:

  • டிரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது உலகம் இருந்த நிலை வேறு. பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்னரும் பாதிப்பு அவ்வளவாகத் தெரியவில்லை. பிற நாடுகள் அந்த இழப்பைச் சரிசெய்ய முன்வந்தன. ஆனால் இந்த முறை சூழல் அவ்வளவு இலகுவானதாக இல்லை. பல நாடுகள் பேரிடர்களையும் போர்ச்சூழலையும் எதிர்கொள்ள முடியாமல் திணறிவருகின்றன. பொருளாதாரமும் உலக அளவில் தள்ளாட்டத்தில் இருக்கிறது.
  • இந்தச் சூழலில், முக்கியக் கரிம உமிழ்வு நாடு களில் ஒன்றான சீனா என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அமெரிக்காவுடனான உறவில் பல முரண்கள் இருந்தாலும் பைடனின் ஆட்சிக் காலத்தில் காலநிலைச் செயல்பாடுகளின்போது சீனா அமெரிக்காவுக்கு ஓரளவு ஒத்துழைத்தது. டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் இது தொடருமா என்பது சந்தேகம்தான்.
  • “உலக அளவில் பெரிய இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் நிலைப்பாடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர் சீனாவின் காலநிலைச் செயல்பாடுகளில் பெரிய தடுமாற்றம் ஏற்படும். அமெரிக்காவே பின்வாங்கிய பின்னர் காலநிலைச் செயல்பாட்டைத் தீவிரப்படுத்த வேண்டும் என்கிற அழுத்தம் சீனாவுக்கு இருக்காது” என்கிறார் காலநிலை வல்லுநர் லி ஷுவோ.
  • இன்னொருபுறம், சில ஐரோப்பிய நாடுகள் காலநிலை தொடர்பாகச் சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது தங்களின் பொறுப்பாகிவிடும் என்று கவலையில் இருக்கின்றன. இந்தச் சூழலை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு உலக அளவில் காலநிலைச் செயல்பாடுகளின் முன்னோடியாக மாற சீனா முயற்சி செய்யலாம். ஆனால், அது ஒரு நப்பாசை மட்டுமே. நடைமுறையில் அது நடப்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு.
  • அசர்பைஜானில் வருடாந்திரக் காலநிலை உச்சி மாநாடு நேற்று (நவம்பர் 11) தொடங்கியிருக்கிறது. 2016இல் டிரம்ப் பதவியேற்ற காலத்தோடு ஒப்பிடும்போது நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. டிரம்ப் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று முன்பே தெரிந்ததால், அதற்கான சில முன்னேற்பாடுகளைக் காலநிலைச் செயல்பாட்டாளர்கள் தொடங்கிவிட்டனர். ஆகவே, நவம்பர் 22 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் அதிரடி மாற்றங்கள் இருக்காது என்று நம்பப்படுகிறது.
  • டிரம்ப் பதவிக்கு வருவதால் உலகளாவிய கரிமக் குறைப்புச் செயல்பாடுகள் தடாலடியாகக் குறைந்துவிடாது என்று சில வல்லுநர்கள் சொல்கின்றனர். வேறு சிலரோ, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குச் செயல்பாடுகள் மந்தமடையும் என்றும், அதைத் தாங்கக்கூடிய வலிமையே நமது புவிக்கு இல்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
  • டிரம்ப்பின் வெற்றி காலநிலை உச்சிமாநாட்டின் முடிவுகளையும் காலநிலைச் செயல்பாடுகளையும் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைக் கவலையுடன் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்