TNPSC Thervupettagam

டெங்கு கடந்து வந்த பாதையும் ஏடிஸ் கொசுவும் - 1

September 15 , 2023 436 days 261 0
  • டெங்கு காய்ச்சல், சீனாவில் பழங்காலத்திலேயே (கி.பி. 265 - 420) ஏற்பட்டதற்கான குறிப்புகள் கிடைத்தபோதும், முதன்முறையாக இந்தக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது 1789-ம் ஆண்டில்தான்.
  • பெஞ்சமின் ரஷ் என்ற அறிஞர்தான், இந்தக் காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தியதுடன், இந்தக் காய்ச்சல் மிகுதியான தசைவலியையும், மூட்டு வலியையும் ஏற்படுத்துவதால், இதை எலும்பை நொறுக்கும் காய்ச்சல் (Breakbon Fever) என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் காய்ச்சல் குறித்து முதன்முதலாக விரிவாக விளக்கியவரும் இவர்தான்.

பெஞ்சமின் ரஷ்

  • இந்தக் காய்ச்சல் தீய ஆவியினால்தான் பரவியது என்று நம்பியவர்களும் உண்டு. இந்தக் காய்ச்சல் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டபோதும், 1828-ம் ஆண்டிலிருந்து டெங்கு காய்ச்சல் என்ற பெயரே உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிடப் படுகிறது.
  • 1906-ம் ஆண்டில்தான், ஏடிஸ் வகைக் கொசுக்களால் இந்தக் காய்ச்சல் பரவுகிறது என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு 1907-ல்தான், இந்த ஏடிஸ் கொசுக்கள் ஒருவகை வைரஸை பரப்புவதால்தான் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது என்பது தெரிய வந்தது.
  • 1950-ம் ஆண்டில், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் கண்டறியப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பயனாக, இந்த வைரஸ் குறித்தும், அது எவ்வாறு ஏடிஸ் வகைக் கொசுக்களால் மனிதர்களுக்குப் பரவி நோயை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் விரிவாகத் தெரிய வந்தது.
  • ஏடிஸ் வகைக் கொசுக்கள் டெங்கு வைரஸை மட்டுமல்லாமல், வேறு பல வைரஸ் வகைகளையும் பரப்புகின்றன.

எந்தெந்த நாடுகளில் டெங்கு பரவியுள்ளது?

  • டெங்கு காய்ச்சல் கிட்டத்தட்ட 128 நாடுகளில் பரவியுள்ளது. இதனால், இதுவரை 3.9 பில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 100 நாடுகளில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து (Endemic) இருந்துகொண்டே இருக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று. மேலும், பல தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகள், மேற்கு பசிபிக் நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
  • உலகம் முழுவதும், ஆண்டுதோறும் 50 முதல் 100 மில்லியன் ( 5 கோடி - 10 கோடி) மக்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதில், 5 லட்சம் பேருக்கு டெங்கு ரத்தக் கசிவு பாதிப்பு ஏற்படுகிறது. சுமார் 22 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்.

இந்தியாவில் டெங்கு காய்ச்சல்

  • இந்தியாவில், 1945-ம் ஆண்டில்தான் டெங்கு வைரஸை பிரித்தெடுத்தார்கள். இந்தியாவில் முதன்முறையாக, 1956-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள வேலூரில்தான் டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது. 1963-ல் கொல்கத்தாவில் முதன்முறையாக டெங்கு ரத்தக்கசிவு நோய் கண்டறியப்பட்டது.
  • கடந்த 20 வருடங்களில், நமது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சத் தீவுகள் மட்டும் அபூர்வமாக இதற்கு விதிவிலக்கு.

ஏடிஸ் கொசு

  • பிற கொசுக்களைப்போல், ஏடிஸ் வகைக் கொசுக்களும் பூச்சியினத்தைச் சேர்ந்தவைதான். இந்தக் கொசுவை ஜெர்மனியைச் சேர்ந்த பூச்சியின ஆராய்ச்சியாளர் ஜோகனன் கண்டறிந்து விளக்கினார்.
  • இந்த ஏடிஸ் வகைக் கொசுக்கள் கருப்பு நிறமாக இருப்பதுடன், அவற்றின் உடலிலும், கால் பகுதியிலும் வெள்ளை நிறத்தில் கோடுகள் இருக்கும்.
  • இவை மனிதர்களைப் பகலில் கடிக்கும் குணம் கொண்டவை. குறிப்பாக, அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும்தான் அதிக அளவில் மனிதர்களைக் கடிக்கின்றன. பிற கொசுக்களைப்போலவே, இவ்வகைக் கொசுக்களிலும் பெண் இனக் கொசுக்களே மனிதர்களைக் கடிக்கின்றன.
  • இந்தக் கொசுக்கள், சுத்தமான தூய நீரில்தான் முட்டையிடும். மிகச் சிறிய நீர் அளவே, இவை முட்டையிடப் போதுமானது. நாம் பயன்படுத்தி கொட்டிவிடும் சிறிய பிளாஸ்டிக் டம்ளரில் நீர் இருந்தால்கூட அதில் முட்டை இட்டுவிடும்.
  • சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர்த் தொட்டிகள், ஆட்டு உரல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், திறந்தவெளிக் கிணறு, டயர்கள், வாளி, தேங்காய் ஓடு, ஏசி பெட்டியில் தேங்கும் நீர் என இவை முட்டையிட்டுப் பெருகும் இடங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகின்றன. சிறிதளவு நீர் தங்கினால்/தேங்கினால் போதும். அங்கு இந்தக் கொசுக்கள் முட்டையிட்டுவிடும்.
  • ஆனால், இவை எப்போதும் சுத்தமான நீரில் மட்டுமே முட்டியிடும் என்று சொல்ல முடியாது. சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி, இவை கழிவுநீரில்கூட முட்டையிடக் கூடியவை. குறிப்பாக, திறந்த நிலையில் உள்ள கழிவு நீர்த்தொட்டி (செப்டிக் டேங்க்), அதில் இருந்து இருந்து வெளியேறும் கழிவு நீரிலும், வீட்டைச் சுற்றி தேங்கும் கழிவு நீரிலும் இந்தக் கொசு முட்டையிடும்.
  • ஏடிஸ் என்ற பெயர் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதற்கு உற்சாகமின்மை என்று பொருள். ஏடிஸ் வகைக் கொசுக்களில் பல வகைகள் இருக்கின்றன.
  • ஏடிஸ் வகைக் கொசுக்களில் மிக முக்கியமானது ஏடிஸ் இஜிப்டை (Aedes aegypti). இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் உருவாகி, இன்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. அடுத்தது, ஏடிஸ் ஆல்போபிக்டஸ் (Aedes albopictus). இவ்வகைக் கொசுக்கள் ஆசியாவில் உருவானவை. இவை தவிர, ஏடிஸ் பாலிநெசியன்ஸிஸ் என்ற வகையும், ஏடிஸ் நீவியஸ் என்ற வகையும் இருக்கின்றன.
  • இதில், ஏடிஸ் இஜிப்டை வகைக் கொசுக்களின் ஆயுள்காலம் 30 நாள்கள். ஆல்போபிக்டஸ் வகைக் கொசுக்கள் 55 முதல் 60 நாள்கள் வரை உயிர் வாழும். ஆனால், தற்போது அவற்றின் ஆயுள் சற்று அதிகரித்திருப்பதுடன், அவை பல்வேறு தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் பண்புகளால், டெங்கு காய்ச்சல் பரவுதல் அதிகரித்துள்ளது. இவை, சுமார் 400 மீட்டர் சுற்றளவு வரைக்கும் பறந்து சென்று நோயைப் பரப்பும் தன்மை கொண்டவை.
  • மனிதர்களைப் பெண் கொசுக்கள் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவதற்கு முக்கியக் காரணமே, முட்டையிடுவதற்குத் தேவையான சக்தியையும் ஊட்டத்தையும் பெறுவதற்குத்தான். இந்தக் காரணங்களால், மனிதர்களை ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை. அவை, தாவரச் சாறுகளை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால், பெண் கொசுக்களைவிட ஆண் கொசுக்கள் உருவில் சிறியவையாக இருக்கின்றன.
  • ஆண் கொசுவுடன் பெண் கொசு உறவு கொண்ட மூன்றாவது நாளில் சுமார் 100 முட்டைகள் இடும். இறப்பதற்கு முன் இதுபோல் மூன்று முறை முட்டையிடும். ஆக, ஒரு கொசு உயிருடன் இருந்தால் அதன்மூலம் குறைந்தது 300 கொசுக்கள் உண்டாகிவிடும்.
  • ஒரு கொசு இடும் முட்டையில் இருக்கும் தண்ணீர் வற்றி உலர்ந்துபோனால்கூட, பல மாதங்கள் வரை அது அழியாமல் இருக்கும். அதுபோலவே, மிகவும் குளிர் நிறைந்த ஐரோப்பிய நாடுகளிலும் இந்தக் கொசு முட்டைகள் வளர்ச்சியை சுருக்கிக் கொள்ளும் தன்மை கொண்டவை. மீண்டும் கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால்போதும், முட்டைகள் லார்வா நிலையை அடைந்து விரைவில் கொசுவாக உருமாறிவிடும்.
  • முட்டையில் இருந்து லார்வா உருவாக ஓரிரு நாள்கள் ஆகும். இந்த லார்வா தண்ணீரில் நீந்தி உயிர் வாழும். சுமார் 5 மி.மீ. அளவே உள்ள இது, தண்ணீரில் இருக்கும் நுண்ணிய பொருள்களை உண்டு வாழும். ஐந்து நாட்களுக்குப் பிறகு இது பியூப்பா என்ற நிலையை அடையும். இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குப் பிறகு முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக வெளியேறும். இவ்வாறு, முட்டையிலிருந்து கொசுவாக மாறுவதற்கு 8 முதல் 10 நாள்கள் வரை ஆகலாம்.
  • டெங்கு காய்ச்சலுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் ஏடிஸ் வகைக் கொசுக்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, வடகிழக்கு ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள், வட அமெரிக்காவில் சில பகுதிகளில் பரவியுள்ளன. இந்தப் பூமிப் பந்தில், வடதுருவப் பகுதியில்தான் இதன் பாதிப்பு குறைவாக உள்ளது. மக்கள் தொகைப் பெருக்கம், சுகாதாரச் சீர்கேடுகள் போன்றவற்றால், ஏடிஸ் வகைக் கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்து, நோய்ப் பாதிப்பு ஏற்படுகிறது.

நன்றி: தினமணி (15 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்