புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நிர்வாகத்தில், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அனாவசியமாகத் தலையிடக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்புக்குரியது மட்டுமல்ல; இந்த விவகாரத்தை எப்படி அணுக வேண்டும் என்ற பார்வையையும் இந்திய அரசுக்குக் கொடுக்கிறது. ‘ஒன்றியப் பிரதேசம் என்றால் டெல்லியின் நேரடி ஆட்சிக்கு, அதுவும் துணை நிலை ஆளுநர் மூலமாக நிர்வகிக்கப்படுவதற்காக மட்டுமே உருவானது என்ற தோற்றம் தரும் வகையில் துணை நிலை ஆளுநர் செயல்படுகிறார்’ என்று பல முறை குற்றஞ்சாட்டியிருந்தார் முதல்வர் வி.நாராயணசாமி. இதே பிரச்சினை டெல்லியிலும் பல முறை தலைதூக்கியிருந்தது.
தீர்ப்பு
முதல்வர் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை எடுக்கும் முடிவுகள்தான் அரசுத் துறைச் செயலாளர்கள், பிற அதிகாரிகள் அனைவரையும் கட்டுப்படுத்தும்” என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. “ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப மத்திய அரசும், அவர் சார்பில் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநரும் நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயக நடைமுறைகளும் குடியரசுத்துவமும் தோல்வி காணும்” என்று அது சுட்டிக்காட்டியுள்ளது.
மோதல் போக்கு
டெல்லியில் முதல்வருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பை அடியொற்றியே இந்தத் தீர்ப்பும் அமைந்திருக்கிறது. “சட்டமன்றம் தீர்மானிக்கும் விஷயங்களில் அமைச்சரவை அளிக்கும் ஆலோசனைகளை ஏற்று துணை நிலை ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்” என்று உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெளிவுபடுத்தியிருக்கிறார். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் தனக்கு உடன்பாடு இல்லாதவற்றை மட்டும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என்று அரசியல் சட்டம் அளிக்கும் அதிகாரத்தை, ‘எல்லா முடிவுகளையுமே குடியரசுத் தலைவரின் முடிவுக்கு விட்டுவிடலாம்’ என்பதாகக் கருதி ஆளுநர் செயல்படக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.
வெறுமனே இந்தத் தீர்ப்பை இப்போதைய பிரச்சினைக்கான தீர்வாக மட்டும் கருதாமல், ஒன்றியப் பிரதேசங்களுக்கான நிர்வாக முறையை மறுவரையறுப்பதற்கான தக்க சமயம் இது என்று இந்திய அரசு கருத வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை அந்தந்தக் காலகட்டத் தேவைக்கேற்ப பல விஷயங்களிலும் திருத்திவந்திருக்கிறோம். ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை மிஞ்சியது அல்ல ஆளுநரின் அதிகாரம்’ என்ற பார்வையை நாம் பெறவும் அதற்கேற்ற மாற்றங்களை மேற்கொள்ளவும் இத்தீர்ப்பு வழிவகுக்க வேண்டும்.