- டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் ஒரு நாளையேனும் முழுமையாக ஊர் சுற்ற ஒதுக்கி விடுவது வழக்கம். இந்தியாவில் மிகப் பெரிய பெருநகரம் என்பதோடு, உலகில் ஜப்பானின் டோக்கியோவுக்கு அடுத்த பெரிய நகரப் பகுதி அது என்பது மட்டுமே காரணம் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குக் குறையாத வரலாற்றைக் கொண்டிருக்கும் ஒரு பழமையான நகரம் எப்படித் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்கிறது என்பதற்கு இந்திய உதாரணமாக டெல்லியைத்தான் நான் காண்கிறேன்.
- கட்டுக்கடங்காத மக்கள்தொகைப் பெருக்கத்தையும் அதற்கேற்ற சூழல் நெருக்கடிகளையும் எதிர் கொள்ளும் நகரம் டெல்லி. ஒவ்வொரு நாளும் டெல்லியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிடவும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகம். டெல்லிக்கு வெளியே இருப்பவர்கள் ‘டெல்லி’ என்ற பெயரில் ஒரு நகரத்தைக் குறிப்பிட்டாலும், உண்மையில் இன்றைய டெல்லி நகரமானது ஏழு நகரங்களின் உள்ளடக்கம் என்பார்கள்.
- நாளுக்கு நாள் டெல்லி மேலும் விரிகிறது. இதற்கேற்ப நகரம் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது.
- முப்பதாண்டுகளுக்கு முன்னரே உலகின் மாசு மிகுந்த 40 நகரங்களில் நான்காவது நகரமாக டெல்லி பட்டியலிடப்பட்டது. விளைவாகப் பல நடவடிக்கைகளை அரசு எடுத்தது; நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் ஓடும் எல்லா பஸ்களையும் எரிவாயுவில் இயங்கத்தக்கதாக 2002க்குள் மாற்றப்பட்டது இந்த நடவடிக்கைகளில் முக்கியமானது. மிக விரைவில் டெல்லியில் ஓடும் ஆட்டோக்கள், ரிக்ஷாக்கள் எல்லாமே சூழலுக்கு இயைந்த தொழில்நுட்பத்துக்கு மாறலாயின. இப்படிச் சில மாற்றங்கள் நடந்தாலும், கட்டுக்கடங்காத மக்கள் பெருக்கமும் நுகர்வும் உருவாக்கும் சூழல் கேடுகளோடு ஒப்பிட யானைக்கு முன் வைக்கப்பட்ட சோளப்பொறியாகவே இந்த நடவடிக்கைகள் அமைந்தன.
- பத்தாண்டுகளுக்கு முன் ‘உலகிலேயே மாசு மிகுந்த நகரம்’ என்று டெல்லியை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. காற்று மாசால் மட்டும் ஆண்டுக்கு 50,000க்கும் அதிகமானோர் டெல்லியில் பலியாகின்றனர். தொடர்ந்து இது குறித்து டெல்லியின் பொது நல அமைப்புகள் தீவிரமாகப் பேசலானபோது, அரசியல் தளத்திலும் இது முக்கியமான விவாதப் பொருள் ஆனது.
- இன்று டெல்லி தேர்தல் பிரச்சாரக் களத்தில் சுற்றுச்சூழல் விவகாரம் மிக முக்கியமான ஒரு அம்சமாக விவாதிக்கப்படுகிறது; சொல்லப்போனால், டெல்லியின் பிரதான கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுப்பதற்குப் பெருநகர நிர்வாகத்தை அது முக்கியமான பேசுபொருளாகக் கொண்டிருப்பதே ஒரு காரணம் ஆயிற்று.
- சென்ற வாரம் டெல்லி சென்றிருந்தேன். அவ்வப்போது சென்றுவரும் நகரம்தான் என்றாலும், ஊர் சுற்ற இம்முறை கொஞ்சம் கூடுதலான நேரத்தைச் செலவிட முடிந்தது. இரண்டு நல்ல மாற்றங்களை டெல்லியில் இம்முறை கண்டேன். நகரத்தை மேலும் அழகூட்டியிருக்கிறார்கள்; இந்த அழகின் மைய அம்சமாகப் பசுமையைக் கொண்டுவந்திருக்கிறார்கள். சாலையோரங்கள், பாலவோரங்கள், பூங்காவோரங்கள் எல்லாமும் தாவரங்களையும் இளமரங்களையும் சூடிக்கொண்டிருப்பதைக் கவனித்தேன்.
- உள்ளூர் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் சொன்னார்கள், “உங்களுடைய கணிப்பு சரிதான்; கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மரம் வளர்ப்பைப் பெரும் இயக்கமாக டெல்லி அரசும் டெல்லி மக்கள் அமைப்புகளும் இணைந்து வளர்த்தெடுத்திருக்கிறார்கள்! பொதுவாகவே டெல்லியிலேயே பிறந்து வளர்ந்த அல்லது இங்கேயே வந்து குடியேறிவிடும் மக்களுக்கு சுற்றுசூழல் பிரக்ஞை அதிகம். இப்போது அது அதிகம் ஆகியிருக்கிறது.”
- டெல்லி நகரத்திலுள்ள வனப் பகுதி அல்லது பசுமைப் பரப்பு 23.1% ஆக அதிகரித்திருக்கிறது. இத்தகு பசுமைப் பரப்பை அதிகரிப்பதில் சென்ற பத்தாண்டுகளில் ஒரு பெரும் வளர்ச்சியை டெல்லி நகரம் கண்டிருக்கிறது. 2021 கணக்கெடுப்பின்படி டெல்லியில் மரங்களால் போர்த்தப்பட்ட பசுமைப் பரப்பளவு 342 சதுர கிலோ மீட்டராக அதிகரித்திருக்கிறது. ஒரு நகரத்திலுள்ள தனிநபருக்கான வனப் பரப்பைக் குறிக்கும், ‘தனிநபர் வனப் பரப்பு’ 9.6 சதுர மீட்டர் ஆக டெல்லியில் இருக்கிறது. நாட்டிலேயே எந்த நகரத்தைவிடவும் இது அதிகம். ஓர் ஒப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஹைதராபாத்தில் இது 8.2 ச.மீ., பெங்களூருவில் இது 7.2 ச.மீ., மும்பையில் இது 5.4 ச.மீ., சென்னையில் இது 2.1. ச.மீ. ஆக இருக்கிறது.
- சென்ற ஐந்தாண்டுகளில் மட்டும் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆஆக அரசு ஒரு கோடிக்கும் மேலான மரக்கன்றுகளை நகரத்தில் நட்டிருக்கிறது; மக்களுடைய உற்சாகமான பங்கேற்பே இதற்கு முக்கியமான காரணம் என்கிறார்கள். “2016-17இல் 10 லட்சம் மரக்கன்றுகளை நட அரசு இலக்கு நிர்ணயித்தது; முடிவில், 24 லட்சம் மரக்கன்றுகளை நாங்கள் நட்டிருந்தோம். 2017-18இலும் அப்படித்தான்; 10 லட்சம் மரக்கன்றுகளை நட அரசு இலக்கு நிர்ணயித்தது; முடிவில் 19 லட்சம் மரக்கன்றுகளை நாங்கள் நட்டிருந்தோம். இப்படியாக, 2018-2019இல் 28 லட்சம், 2020-21இல் 32 லட்சம், 2021-22இல் 32 லட்சம் மரக்கன்றுகளை டெல்லியில் நட்டிருக்கிறோம். இவற்றில் கிட்டத்தட்ட 80% கன்றுகள் வரை பிழைத்திருக்கின்றன. டெல்லி மக்களுடைய அக்கறைதான் முதன்மைக் காரணம்” என்கிறார் ஆஆகவின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய்.
- பல நகரங்களின் கூட்டுச் சேர்க்கையாகிவிட்ட இன்றைய டெல்லியின் எல்லாப் பகுதிகளுமே முறையாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை அல்ல; பிரிட்டிஷ் பொறியாளர்கள் எட்வின் லூட்யன், ஹெபர்ட் பேக்கரால் 1911இல் உருவாக்கப்பட்ட புது டெல்லி பகுதி ஒரு துருவம் என்றால், பல நூற்றாண்டுகள் பழைய கட்டமைப்பைக் கொண்ட பழைய டெல்லி பகுதியும் ஒவ்வொரு பிரதான சாலையையும் ஒட்டி உருவான ஏழை மக்களுடைய நெரிசல் மிக்க குடியிருப்புப் பகுதிகளும் இன்னொரு துருவம். மத்திய டெல்லி அல்லது தெற்கு டெல்லி போன்று கிழக்கு டெல்லி அல்லது வடமேற்கு டெல்லியில் அடர்த்தியான மரச்செறிவு கிடையாது. ஆயினும், வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் டெல்லி சமூகம் பூங்காக்களையும் தோட்டங்களையும் மரச்செறிவையும் உருவாக்குவதைக் காண முடிகிறது.
- டெல்லியில் இடநெருக்கடி அதிகம். சாலைகள், மெட்ரோ ரயில் பாதைகள், புதிய கட்டுமானங்கள் ஏகத்துக்குத் தொடர்ந்தாலும், இன்னமும் பெரும் பூங்காக்களைச் சேதாரமின்றி நகரம் பேணுகிறது. டெல்லிக்குள் மட்டும் 3,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் 17 நகரக் குறுங்காடுகள் இருக்கின்றன. சிறிதும் பெரிதுமாக 18,000 பூங்காக்கள் இருக்கின்றன. “டெல்லியில் மர வளர்ப்புக்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. கடும் தண்ணீர் நெருக்கடி உண்டென்றாலும், தோட்டங்களைப் பராமரிக்க ஏதுவாகப் பல இடங்களில் ‘கச்சா பானி’ விநியோகம் இங்கே உண்டு. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைத்தான் நாங்கள் ‘கச்சா பானி’ என்போம். அதேபோல. உங்கள் வீட்டு மரம் என்றாலும், மழை வெள்ளத்தில் சாய்ந்துவிட்டால் அரசு அனுமதி இல்லாமல் அதை வெட்டிவிட முடியாது; ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை மரங்கள் உண்டு என்ற கணக்கு டெல்லி நிர்வாகத்திடம் உண்டு” என்றார் அரசு அலுவலர் ஒருவர். முறைகேடுகள் எல்லா இடங்களிலும் இருக்கலாம். நகரத் திட்டமிடலிலும் சட்ட முறைகளிலும் பல படி முன்னே நிற்கிறார்கள்.
- பொதுவாக இந்தியர்களுக்கு நகரக் கட்டுமானம் தொடர்பான கற்பனை மிகக் குறைவு என்பது என் எண்ணம். இந்தியாவில் இன்றும் மெச்சத்தக்க அழகோடு வெளிப்படும் நகரப் பகுதிகள் ஒவ்வொன்றின் கட்டுமானத்தின் பின்னணியிலும் ஓர் அயல்நாட்டு மூளையும் தொலைநோக்கும் அமர்ந்திருப்பதே நிதர்சனம். நம்முடைய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் கணிசமானோர் கிராமப்புறப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பதும், கலாரசனைக்கும் அவர்களுக்குமான தொடர்பு மிக அரிதாகவே - சண்டிகர் போன்று - நகரக் கட்டுமானத்தில் இங்கே வெளிப்பட்டிருக்கிறது என்பதும்கூட ஒரு காரணம் என்பது என் எண்ணம்.
- டெல்லியைப் பற்றி பேசுகையில், ஒரு தமிழருக்குச் சென்னையைப் பற்றியோ கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லையைப் பற்றியோ நினைவுக்கு வராமல் இருக்க முடியாது. நகரத் திட்டமிடலில் நாம் நிறைய பின்தங்கித்தான் இருக்கிறோம். கடந்த கால வரலாற்றைத் தூக்கிக்கொண்டு வருவதைக் காட்டிலும் எதிர்காலத் திட்டமிடல் தொடர்பில் நம்முடைய அக்கறை எப்படி இருக்கிறது என்ற கேள்வியை ஆழமாகக் கேட்டுக்கொள்ளலாம்.
- சென்னையையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் எவ்வளவோ சீரழித்திருக்கிறோம். தானாக விரியும் பகுதிகளை விடுங்கள்; அண்ணா நகர், அசோக் நகர் போன்று அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரப் பகுதிகள் என்ன நிலையில் இன்று இருக்கின்றன? தமிழ்நாடு முழுவதும் வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட பகுதிகள் என்ன நிலையில் உள்ளன? இங்கெல்லாம் கடந்த காலங்களில் இருந்த பசுமை எப்படி தொலைந்தது? ஏன் மரங்களைப் பற்றியோ பொது இடங்களைப் பற்றியோ நாம் கவலை கொள்வதே இல்லை?
- சென்னையோ, தஞ்சையோ, நெல்லையோ நகரம் விரிந்துகொண்டேதான் செல்லும். அடுத்த பத்தாண்டுகளில் எவ்வளவு தூரம் விரியும் என்ற கேள்விக்கான துல்லியமான பதில் எவரையும்விட நம்முடைய அரசியலர்களுக்குத் தெரியும். ஏன் அப்படிக் கணிக்கும் பிராந்தியத்தில் ஒரு பெரும் நிலப்பரப்பை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, திட்டமிட்டு நகரை, நகர விஸ்தீரனத்தை அங்கே மேற்கொள்ளக் கூடாது?
- உருவாகும் நெருக்கடிகளுக்கு எதிர்வினையாற்றுவது மட்டுமே நகர வளர்ச்சிப் பணி ஆகிவிடாது. ஊர் என்பது பிழைப்புக் களம் மட்டுமே கிடையாது. நம்முடைய அரசியலர்களோடு, அதிகாரிகளுக்கும் சேர்த்தே இதைச் சொல்லத் தோன்றுகிறது: ஓர் ஊரின் அழகியலும் மேம்பாடும் உங்களுடைய செறிவான கற்பனையைக் கோருகின்றன!
நன்றி: அருஞ்சொல் (31– 08 – 2023)