TNPSC Thervupettagam

டெல்லி யாரிடம் அதிகாரம்

August 14 , 2023 470 days 276 0
  • தேசியத் தலைநகரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் – சுருக்கமாகச் சொன்னால் தில்லி பிரதேச மக்கள் – பிரதிநிதித்துவ அரசு பெறத் தகுதியுள்ளவர்கள்.  இந்திய நாடாளுமன்றம் அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் 239ஏஏ என்ற சட்டப் பிரிவைச் சேர்த்தது. அது முதல், தில்லி தேசியத் தலைநகர பிரதேசத்துக்கு (ஜிஎன்சிடிடி) உரிய காலத்தில் தேர்தல் நடைபெற்றுவருகிறது. முதல் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றது, காங்கிரஸ் கட்சி அடுத்த மூன்று முறை வென்றது.
  • பாரதிய ஜனதா சார்பில் மதன் லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் (1993-98) முதல்வர்களாகப் பதவி வகித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஷீலா தீட்சித் (1998-2013) மூன்று முறை முதல்வராக இருந்தார். அவர்கள் காலத்தில் அரசமைப்புச் சட்டத்தின் 239ஏஏ பிரிவின்படி துணைநிலை ஆளுநருடன் இணைந்து பணி செய்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.

யாரிடம் கட்டுப்பாடு?

  • மக்களவைக்கு 2014இல் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை மனதில் கொண்டும், காங்கிரஸ் – ஆம்ஆத்மி கட்சிகளை தேர்தல் களத்தில் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கிலும் தில்லி பிரதேச சட்டப்பேரவைக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவோம் என்று 2013இல் வாக்குறுதி அளித்தது பாரதிய ஜனதா. ஆனால், தேர்தலில் அது தோற்றுவிட்டது, ஆம் ஆத்மி கட்சி 2014இல் தில்லி சட்டப்பேரவையைக் கைப்பற்றிவிட்டது.
  • இருந்தாலும் தில்லி பிரதேசத்தைத் தொடர்ந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் தக்கவைத்துக்கொள்ள முடிவுசெய்தது பாரதிய ஜனதா. அதன்படி அதிகாரமும் செலுத்தியது. 239ஏஏ பிரிவுக்கு ஒன்றிய பாஜக அரசு அளித்த விளக்கத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், பிரதேசத்தை நிர்வகிக்கும் உண்மையான அதிகாரம் மாநில அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவிடம்தான் இருக்கிறது, துணைநிலை ஆளுநரிடம் அல்ல என்று தீர்ப்பளித்தது (2018).
  • அந்தத் தீர்ப்புக்குப் பிறகும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாத பாஜக, ‘சேவைகள் துறை’ (அரசு அதிகாரிகள்) மீதான கட்டுப்பாடு துணைநிலை ஆளுநருக்குத்தான் என்று மீண்டும் வாதாடியது. 2023 மே 11இல் இதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ‘சேவைகள் துறை’ மீது தில்லி பிரசேத தலைநகர அரசுக்கே சட்டம் இயற்றும் உரிமையும் நிர்வாகம் செலுத்தும் உரிமையும் இருக்கிறது என்று மீண்டும் வலியுறுத்தியது.
  • இந்தத் தீர்ப்பு வெளியான சில நாள்களுக்கெல்லாம் சேவைகள் துறை மீதான கட்டுப்பாட்டை துணைநிலை ஆளுநர் வைத்திருக்க அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மழைக்கால கூட்டத் தொடரில் அவசரச் சட்டத்துக்குப் பதிலாக சட்ட மசோதாவைத் தயாரித்து அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே ஒப்புதலைப் பெற்று நிறைவேற்றியிருக்கிறது.
  • தில்லி பிரதேச நிர்வாக மசோதா மீதான விவாதம் எதிர்பார்த்தபடிதான் நடந்து முடிந்திருக்கிறது. ‘அரசமைப்புச் சட்டப்படி’ என்ற வார்த்தைக்கு மிகக் குறுகிய விளக்கத்தையே பாரதிய ஜனதா அளித்தது. இந்த மசோதா பல விதங்களிலும் அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டன.  இதில் எது சரி என்று தீர்ப்பளிக்கும் முடிவை உச்ச நீதிமன்றத்திடம் விட்டுவிடுவோம்.

வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரி

  • இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் மரத்தைப் பற்றி மட்டுமே பேசி வனத்தை மறந்துவிட்டது என்பதே என்னுடைய கருத்து. எந்த வகையிலான அரசு என்பது பல்வேறு வகைப்பட்டது, ராணுவ சர்வாதிகாரம் (சமீபத்திய உதாரணம், நைஜர்), ஒரே-கட்சி சர்வாதிகாரம் (சீனம்), அதிபர் தலைமையிலான அரசு (அமெரிக்கா), அதிபரும் நாடாளுமன்றமும் பலம் வாய்ந்த அரசு (பிரான்ஸ்), பல கட்சி ஆட்சி முறை (ஐரோப்பியக் கண்டத்தில் பல நாடுகள்), தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம் (ஹங்கேரி), முழுமையான நாடாளுமன்ற ஜனநாயகம் (பிரிட்டன்). அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது இவற்றில் எந்த மாதிரியை இந்தியா தேர்ந்தெடுத்தது? சந்தேகத்துக்கே இடமில்லாமல், பிரிட்டனில் கடைப்பிடிக்கப் படும் நாடாளுமன்ற ஜனநாயக முறையை (வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரி) தேர்ந்தெடுத்தது.
  • நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே அடிப்படை எதுவென்றால், ஒற்றைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம், பிரதமர் அல்லது முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் குழு (நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்துக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டது), மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்ட நாடாளுமன்றம்.
  • ஜனநாயகம் பழுதில்லாமல் செயல்படுவதற்கு அவசியமான இதர அமைப்புகள் அரசமைப்புச் சட்டம் மூலம் உருவாகின்றன – உதாரணத்துக்கு உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், பொதுத் தேர்வாணையம் போன்றவை. சிவில் சர்வீஸ் என்று அழைக்கப்படும் நிர்வாகப் பிரிவு அரசின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படுகிறது. அரசு நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகள் அமைச்சர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
  • குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பங்கு என்ன?  இப்பதவிகளில் அமரும் அவர் அல்லது அவள், அரசின் தலைமை நிர்வாகி ஆவார். தலைமை நிர்வாகியாக இருக்கும் அவர் முறையான அதிகாரத்துக்கு அடையாளமே தவிர உண்மையில், அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் அவருக்கு இல்லை.

அறிவிக்கப்பட்ட சட்டம்

  • அமைச்சர்களுக்குத்தான் உண்மையான அதிகாரம், அரசின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் வெறும் அடையாளம்தான் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறதா என்ற கேள்வி எழும். இதற்கு பதில் ‘ஆம்’, அது ‘உதவி மற்றும் ஆலோசனை’ என்ற மூன்று மந்திர வார்த்தைகளில் பொதிந்திருக்கிறது.
  • அரசமைப்புச் சட்ட வரலற்றில் இந்த மூன்று வார்த்தைகளுக்கு தனிப் பொருள் இருக்கிறது. உதவி என்பது ஓடிச் சென்று செய்யும் உதவி பற்றியது அல்ல, ஆலோசனை என்பது கேட்டாலும் கேட்காவிட்டாலும் அளிக்கப்படும் அறிவுரை என்பதில்லை. உதவி மற்றும் ஆலோசனை என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியமான சாராம்சமாகும்.
  • இந்த மந்திர வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தின் 74, 163, 239ஏஏ பிரிவுகளில் பிரதமர் - குடியரசுத் தலைவர், முதலமைச்சர் – ஆளுநர், தேசியத் தலைநகர பிரதேசம் – துணைநிலை ஆளுநர் ஆகியோரின் அதிகாரம், உரிமை ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது. “ஆலோசனைக்குப் புறம்பாக குடியரசுத் தலைவரால் ஏதும் செய்ய முடியாது – அவர்களுடைய ஆலோசனை இன்றியும் செயல்பட முடியாது” என்று இந்த வார்த்தைகளுக்குப் பொருள் கூறி விளக்கினார் அம்பேத்கர்.
  • குடியரசுத் தலைவர், ஆளுநர் தொடர்பான இந்தச் சட்டம், அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரப்படி குடியரசுத் தலைவரும் ஆளுநரும் தங்களுடைய கடமைகளை அமைச்சரவைகளின் ஆலோசனைப்படி மட்டும் – விதி விலக்கான சில அசாதாரணமான தருணங்களைத் தவிர – செயல்பட வேண்டும் என்று நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஒரு வழக்கின்போது உத்தரவிட்டார்.
  • நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேறிய மசோதாவானது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரைக் கொண்ட மூன்று உறுப்பினர் குழுதான் அரசு ஊழியர்களின் எல்லா அம்சங்களையும் கட்டுப்படுத்தும். இதில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் இருவரையும் துணைநிலை ஆளுநர்தான் நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்.
  • அரசு ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் தொடர்பான கூட்டங்களைத் தலைமைச் செயலாளர் தான் கூட்டுவார், கூட்டத்துக்கு இரண்டு பேர் வந்தால்கூடப் போதுமானது, முடிவுகள் செல்லுபடியாகும். பெரும்பான்மை உறுப்பினர்கள் முடிவுகளை எடுப்பார்கள். மூன்று பேரும் ஒரு மனதாக எடுக்கும் முடிவுகளைக்கூட நிராகரிக்கும் உரிமை துணைநிலை ஆளுநருக்கு உண்டு.
  • அதிகார வர்க்கம்தான் ஆட்டிப் படைக்கிறது என்பதை கேலியாக சித்தரித்த தொலைக் காட்சித் தொடரில் வந்த கதாபாத்திரத்தைப் போல, ‘ஆமாம் – செயலர் அவர்களே’ என்றுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இனி சொல்ல வேண்டி வரும். ‘தில்லி பிரதேச தேசியத் தலைநகர (வைஸ்ராய் நியமன) மசோதா 2023’ என்ற பெயர்தான் இதற்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.
  • தில்லியின் 3,29,42,309 பேர் (2023) நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது விழுந்த ‘ஜிஎன்சிடிடி மசோதா’ என்ற இந்த அடியை தில்லி மாநகரின் 3,29,42,309 பேர் (2023) நேரிலேயே பார்த்தனர். பலத்த காயம்பட்ட ‘நாடாளுமன்ற ஜனநாயக முறை’ இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது; உச்ச நீதிமன்றம் இதைக் காப்பாற்றட்டும் என்று தில்லி மாநகர மக்கள் தீவிரமாக இனி தீவிரமாகப் பிரார்த்தனை செய்வார்கள்.

நன்றி: அருஞ்சொல் (14  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்