- மத்தியத் தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா நியமிக்கப்பட்டிருக்கிறார். தகவல் ஆணையங்களில் நிலவும் காலிப் பணியிடங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.
- 2005இல் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசு தொடர்பான பல்வேறு தகவல்களை அரசு அலுவலகங்களிலிருந்து குடிமக்கள் கேட்டுப் பெற வழிவகுத்தது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், அதன் இலக்கை முழுமையாக அடைவதற்குப் பல வகையான தடைகள் நிலவுகின்றன. உரிய நேரத்தில் ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, அவற்றில் ஒன்று.
- அரசு அலுவலகங்களில் இருந்து தகவல்களைப் பெறுவதில் மக்களுக்கு ஏற்படும் தடைகளுக்கு எதிராகப் புகார் அளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையங்களும், மத்தியில் மத்தியத் தகவல் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆணையங்களில் தலைமைத் தகவல் ஆணையர் ஒருவரும் அதிகபட்சம் 10 தகவல் ஆணையர்களும் இருப்பார்கள்.
- இந்நிலையில், மத்திய ஆணையத்திலும் மாநில ஆணையங்களிலும் ஆணையர்கள் ஓய்வுபெற்ற பிறகு உருவாகும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு எதிராகச் சமூகச் செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜார்க்கண்ட் மாநிலத் தகவல் ஆணையம் 2020 மே மாதத்திலிருந்து 11 உறுப்பினர் காலியிடங்களும் நிரப்பப்படாமல் செயல்படா நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
- இதேபோல் தெலங்கானா, திரிபுரா மாநிலத் தகவல் ஆணையங்களில் அனைத்துத் தகவல் ஆணையர் பதவிகளும் 2021லிருந்து காலியாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு, “ஆணையர் பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பாமல் இருப்பதால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் ‘உயிரற்ற சட்ட’மாக ஆகிவருகிறது” எனக் கடந்த அக்டோபர் 30 இல் தெரிவித்திருந்தது.
- அதோடு, மாநிலத் தகவல் ஆணையங்களில் காலியாக இருக்கும் ஆணையர் பணியிடங்கள், 2024 மார்ச் 31வரை ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்கள், ஆணையங்களில் நிலுவையில் இருக்கும் புகார்கள் ஆகியவை குறித்த தகவல்களைத் திரட்டி மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
- இதையடுத்து, மத்தியத் தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையராக இருந்த ஹீராலால் சமாரியாவுக்குத் தலைமைத் தகவல் ஆணையராக நவம்பர் 6 அன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதற்கு முன் இப்பதவியில் இருந்த வி.கே.சின்ஹா அக்டோபர் 3 அன்று ஓய்வுபெற்றிருந்தார். ஒரு மாத காலம் இந்தப் பதவி நிரப்பப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தற்போது, ஆனந்தி ராமலிங்கம், வினோத் குமார் திவாரியா ஆகிய இருவரும் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தற்போது மத்தியத் தகவல் ஆணையத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் ஆணையர் பணியிடங்கள் 6ஆகக் குறைந்துள்ளன.
- இதேபோல் மத்தியத் தகவல் ஆணையத்திலும் மாநிலத் தகவல் ஆணையங்களிலும் நிலவும் காலிப் பணியிடங்கள் அனைத்தும் விரைவாக நிரப்பப்பட வேண்டும். இதோடு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகள் அனைத்தையும் தடுத்துநிறுத்த நீதிமன்றமும் அரசும் கைகோத்துச் செயல்பட வேண்டும். குடிமக்களின் தகவல் அறியும் உரிமை என்றென்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 - 11 – 2023)