TNPSC Thervupettagam

தகுதியான தேர்வு

February 7 , 2024 340 days 324 0
  • பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான லால் கிருஷ்ண அத்வானிக்கு "பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறிது நாள்களுக்கு முன்பு சோஷலிசத் தலைவரும், முன்னாள் பிகார் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கு "பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டபோதே, அத்வானிக்கு அறிவிக்கப்படவில்லை என்று பாஜகவினர் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
  • கொள்கை ரீதியாக லால் கிருஷ்ண அத்வானியுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆனால், அவரது அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கை குறித்தும், மாற்றுக் கருத்தை மதிக்கும் உயர்ந்த பண்பு குறித்தும் சிலாகிக்காதவர்களே இருக்க முடியாது. "கொண்ட கொள்கையில் உறுதியும், அதே நேரத்தில் அரசியல் நாகரிகத்தில் நேர்மையும் எல்.கே. அத்வானியின் தனித்துவங்கள்' என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தே ஒருமுறை பாராட்டி இருக்கிறார் எனும்போது, அதைவிடப் பெரிய நற்சான்றிதழ் வேறு என்ன இருந்துவிட முடியும்?
  • 1927-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் பிறந்தவர் அத்வானி. ஜாதி ஏற்றத்தாழ்வில்லாத சிந்தி இனத்தைச் சேர்ந்த ஹிந்து என்று தன்னைக் கூறிக் கொள்வதில் அத்வானிக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. 1947 தேசப் பிரிவினையால் பாதிக்கப்பட்டு, இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஹிந்துக் குடும்பங்களில் அத்வானியின் குடும்பமும் ஒன்று.
  • ஹிந்து - முஸ்லிம் கலவரத்தைத் தனது 20 வயது இளம் பருவத்தில் எதிர்கொண்ட காரணத்தால், பாகிஸ்தானிலிருந்து இந்தியப் பகுதிக்குத் தப்பியோடி வந்த எல்.கே. அத்வானி ஆர்.எஸ்.எஸ்-இன் ஹிந்துத்துவக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதில் வியப்பில்லை. ஆர்.எஸ்.எஸ்-இல் தன்னை இணைத்துக் கொண்டதன் தொடர்ச்சியாக அதன் அரசியல் அமைப்பான ஜனசங்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
  • தில்லி மாநில ஜனசங்கத்தின் தலைவராக இருந்த எல்.கே. அத்வானி 1967-இல், தில்லி மாநகர மெட்ரோபாலிடன் கவுன்சில் என்று அழைக்கப்பட்ட மாநகராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவர் அரசியலில் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. 1970-இல் ஆர்.எஸ்.எஸ்-இன் தேசிய செயற்குழு உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.
  • அவசரநிலையின்போது நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது, அந்தப் பட்டியலில் முக்கியமானவராக இருந்தார் அத்வானி. சிறைவாசமும், இந்திரா காந்தியின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான அரசியல் ஒருங்கிணைப்பும் ஜனதா கட்சி உருவாக வழிகோலியது. ஏனைய கட்சிகளைப் போலவே எல்.கே. அத்வானி தலைமையிலான ஜனசங்கமும் ஜனதா கட்சியில் சங்கமமாகியது.
  • ஜனதா கட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டபோது, அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்தார் அத்வானி. இந்திரா படுகொலையைத் தொடர்ந்து நடந்த 1984 தேர்தலில் பாஜக வெறும் இரு இடங்களை மட்டுமே பெற்றது. வாஜ்பாயேகூடத் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. அப்போது கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எல்.கே. அத்வானி, அழிந்துவிட்டது என்று கருதப்பட்ட பாரதிய ஜனதா கட்சியை வலிமையான எதிர்க்கட்சியாக உருவாக்கிய வரலாற்றின் விளைவுதான் இப்போதைய நரேந்திர மோடி ஆட்சியும், அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலும்... சோமநாதபூரிலிருந்து அயோத்திக்கு அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை காரணமாக இந்திய அரசியல் மத ரீதியாகப் பிளவுபட்டது என்று குற்றம்சாட்டுவோர் உண்டு. அவர்கள், வி.பி. சிங்கின் மண்டல் கமிஷன் அறிவிப்பால், தேசம் ஜாதி ரீதியாகப் பிளவுபட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. எதிர்மறை அரசியலின் காலம் தொடங்கி இருந்தது. அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்தவர்கள் வி.பி. சிங்கும், எல்.கே. அத்வானியும். முன்னவர் தனது முயற்சியில் தோல்வியடைந்தார்; பின்னவர் வெற்றி பெற்றார் என்பது வரலாறு.
  • மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பான்மை ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன; போலி மதச்சார்பின்மைவாதத்தின் மூலம் சிறுபான்மை மக்களை வாக்குவங்கிகளாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாற்றியிருக்கின்றன; கொள்கை ரீதியாக மாறுபட்டாலும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கு பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல - எல்.கே. அத்வானியின் இந்த மூன்று கருத்துகளின் அடிப்படையில் அமைந்ததுதான் 1998 வாஜ்பாய் அமைச்சரவை.
  • 1992 டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை "வெட்கக்கேடான செயல்பாடு' என்று கூறிக் கைபிசைந்து நின்றவர்; 2002-இல் குஜராத் கலவரம் நடந்தபோது அன்றைய முதல்வர் நரேந்திர மோடியைக் காப்பாற்றியவர்; பிரிவினைக்குக் காரணமான முகமது அலி ஜின்னாவுக்கு "மதச்சார்பற்றவர்' என்று நற்சான்றிதழ் வழங்கியவர் - இப்படி அவர் மீது பலர் பல விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், இந்திய அரசியலின் போக்கை நிர்ணயித்ததில் பண்டித ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு முக்கியப் பங்கு வகித்தவர் எல்.கே. அத்வானி என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
  • குடியரசுத் தலைவராக்காத குறையைத் தனது குருநாதர் எல்.கே. அத்வானிக்கு "பாரத ரத்னா' விருது வழங்கித் தீர்த்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

நன்றி: தினமணி (07 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்