TNPSC Thervupettagam

தங்கத்தை போல் உச்சம் தொடும் வெள்ளி: கிலோ ரூ.1 லட்சம் தாண்டியது

June 3 , 2024 223 days 169 0
  • கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. ஆனால், தங்கத்தைவிடவும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது ஓர் உலோகம். அதுபற்றி பெரிதாக பேசப்படுவதில்லை. ஆம், வெள்ளியின் விலை உயர்வுதான் தங்கத்தையே விஞ்சி நிற்கிறது. கடந்த 2023-ம் ஆண்டில் வெள்ளியின் விலை 7.19% உயர்ந்தது. தங்கத்தின் விலை 13% உயர்ந்தது.
  • ஆனால் இந்த ஆண்டில் தங்கத்தை விட வெள்ளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.80 ஆயிரமாக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து, ரூ.1 லட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. மே 29-ம் தேதி ரூ.1,02,200 ஆக உயர்ந்தது. கடந்த 5 மாதங்களில் சுமார் 25% உயர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இரண்டே மாதங்களில் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்துள்ளது.
  • 22 காரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை கடந்த ஜனவரி 1-ம் தேதி ரூ.5,910 ஆக இருந்தது. இது மே 29-ம் தேதி ரூ.6,775 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 5 மாதங்களில் தங்கம் விலை சுமார் 15% அதிகரித்துள்ளது. தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளியின் விலை சுமார் 10% கூடுதலாக அதிகரித்துள்ளது.
  • இதுபோல இந்த ஆண்டில், சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் (28 கிராம்) வெள்ளியின் விலை சுமார் 35% உயர்ந்து, மே 29-ம் தேதி சுமார் 32 அமெரிக்க டாலராக (ரூ.2,666) இருந்தது. அதேநேரம், 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 14% உயர்ந்து, சுமார் 2,350 அமெரிக்க டாலராக (ரூ.1,95,826) இருந்தது. அதாவது சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை தங்கத்தைப் போல 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

திடீர் விலை உயர்வு ஏன்...?

  • கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர், 6 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் காஸா-இஸ்ரேல் போர் உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. இதனால், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவிக்கின்றன.
  • குறிப்பாக சீனா முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தை அதிக அளவில் வாங்குகிறது. மேலும் பாதுகாப்பான முதலீடு என்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஆபரணங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் தங்கத்துக்கான தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வருகிறது.
  • தொழிற்சாலைகளில் 50% வெள்ளி.. சர்வதேச அளவில் வெள்ளியின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 50 சதவீதம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்துவதில் வெள்ளி சிறப்பாக செயலாற்றுவதே இதற்குக் காரணம்.
  • சூரிய மின் உற்பத்தியில் உலக நாடுகள் அதிக கவனம் செலுத்துகின்றன. இதனால் சோலார் பேனல் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த சோலார் பேனல் (போட்டோவோல்டாயிக்ஸ்) தயாரிப்பில் வெள்ளி முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது.
  • இது மட்டுமல்லாமல் மின்னணு சாதனங்கள் (மதர் போர்டு, எலக்ட்ரிக்கல் தொடர்புகள்), வாகனங்களில் (பேட்டரி, எலக்ட்ரிகல் வயரிங்) வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மின் வாகனங்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால், தொழிற்சாலைகளில் வெள்ளிக்கான தேவை முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருகிறது.
  • மருத்துவத் துறையிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில், சர்வதேச அளவில் வெள்ளிக்கான தேவை உற்பத்தியைவிட அதிகமாக இருக்கும் என தி சில்வர் இன்ஸ்டிடியூட் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில்தான் வெள்ளியின் விலை தங்கத்தைவிட அதிகமாக உயர்ந்து வருகிறது.

17.4 லட்சம் டன்:

  • உலகம் முழுவதும் இதுவரை சுமார் 17.4 லட்சம் டன் வெள்ளி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் புள்ளி விவரம் கூறுகிறது. இன்னும் 27 லட்சம் முதல் 31 லட்சம் டன் வெள்ளி பூமியில் இருப்பதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் கணித்துள்ளனர்.
  • உலகிலேயே அதிக அளவில் வெள்ளியை கையிருப்பு வைத்திருக்கும் நாடு பெரு (1.1 லட்சம் டன்). 94 ஆயிரம் டன்னுடன் ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும் 92 ஆயிரம் டன்னுடன் ரஷ்யா 3-ம் இடத்திலும் உள்ளது.
  • உலகம் முழுவதும் 757 பெரிய வெள்ளி சுரங்கங்கள் இப்போது செயல்பாட்டில் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதில் 6 பெரிய சுரங்கங்கள் இந்தியாவில் உள்ளன. இதுதவிர சிறிய அளவிலான சுரங்கங்களும் உள்ளன.
  • உலக அளவில் 2-வது பெரிய நிறுவனமாகவும் இந்தியாவின் மிகப்பெரிய வெள்ளி உற்பத்தி நிறுவனமாகவும் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த இந்துஸ்தான் ஜிங்க் உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு விலை இரண்டே மாதத்தில் 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் ராஜஸ்தான்.. இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வெள்ளி வெட்டி எடுக்கப்படுகிறது. கடந்த 2019-20-ம் ஆண்டில் இந்தியாவில் 76 டன் வெள்ளி உற்பத்தி செய்யப்பட்டதாக இந்திய சுரங்க அமைப்பின் புள்ளி விவரம் கூறுகிறது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் மட்டும் 43 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 60 சதவீதம் ஆகும்.
  • இந்தியாவில் வெள்ளிக்கான வருடாந்திர தேவை 6 ஆயிரம் டன்னாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருப்பதால் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக 35% நகைகளுக்காக வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.
  • முதலீடு (26%), தொழிற்சாலை (20%), பாத்திரங்கள் (19%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலக அளவில் வெள்ளியை அதிக அளவில் நுகரும் நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக சூரிய மின் உற்பத்தி, மின் வாகன உற்பத்தி மற்றும் மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
  • இது மட்டுமல்லாமல் வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்களுக்கான தேவையும் இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும் ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட்டைவிட கூடுதல் வருவாயைக் கொடுக்கும் என்பதால் வெள்ளியில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் இந்தியாவிலும் வெள்ளிக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்