தங்க நாற்கர மனிதர்
- - - - - - - - - - - -
அடல் பிகாரி வாஜ்பாய்
- வாஜ்பாய் டிசம்பர் 25, 1924 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை குவாலியரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்.
- வாஜ்பாய் தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார். இவர் தனது நண்பனின் மகளான நமீதா பட்டாச்சாரியாவை தத்தெடுத்து வளர்த்தார்.
- இவர் தன் இளம் வயதில் 1939 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் (Rashtriya Swayamsevak Sangh – RSS) இணைந்தார். இவர் 1947-ல் அச்சங்கத்தின் முழுநேரப் பணியாளராக பணியாற்றினார்.
- இந்திய அரசியல் தலைவரான இவர் இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.
- இந்திய தேசியக் காங்கிரஸின் சார்பாக அல்லாமல் பிரதம அமைச்சரின் பதவிக் காலமான 5 வருடத்தை முழுமையாக நிறைவு செய்த முதலாவது இந்தியப் பிரதமர் இவராவார்.
- இவர் வயோதிக பிரச்சனை காரணமாக 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி மறைந்தார்.
- முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தி இந்தியாவில் நூறு ஆறுகளில் கரைக்கப்படும் என்று அவரது கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
- ஆகஸ்ட் 19ம் தேதி அவரது அஸ்தியின் ஒரு பகுதி ஹரித்வாரில் கங்கை நதியில் அவரது வளர்ப்பு மகளான நமீதாவால் கரைக்கப்பட்டது
இளமைப் பருவம்
- வாஜ்பாய் குவாலியரில் உள்ள சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார்.
- அதன்பின்னர் இவர் குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் (லட்சுமிபாய் கல்லூரி) தனது கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். இவர் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
- இவர் கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் அரசியல் அறிவியலில் எம்.ஏ முதுகலைப் படிப்பை நிறைவு செய்தார். இவர் எம்.ஏ முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
- இவருடைய அரசியல் வாழ்க்கை ஆரிய சமாஜத்தின் இளைஞர் அணியான ஆர்ய குமார் சபாவுடன் தொடங்கியது. இவர் 1944 ஆம் ஆண்டு இச்சபாவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.
- இவர் 1939 ஆம் ஆண்டில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் சுயம்சேவாக் அல்லது தன்னார்வலராக இணைந்தார். இவர் 1940-1944 ஆகிய ஆண்டுகளில் பாபாசாகிப் ஆப்தே அவர்களின் ஊக்கத்தைப் பெற்று RSS பிரிவின் அதிகாரிகளின் பயிற்சி முகாமில் பங்கு பெற்றார். இவர் 1947 ஆம் ஆண்டு பிரச்சாரக் ஆக (RSS-ல் முழு நேரப் பணியாளர் என்று பொருள் கொண்ட) உருவெடுத்தார்.
- இவர் 1942 ஆம் ஆண்டில் தன்னுடைய 16 வயதில் RSS-ன் செயல் உறுப்பினரானார்.
- 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின்போது இவர் மற்றும் இவருடைய அண்ணனான பிரேம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு 24 நாட்கள் சிறையில் இருந்தனர். ஆங்கில அரசு 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ல் பட்டேஸ்வரில் இவரிடம் தான் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருந்ததாகவும் தீவிரவாத நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்கவில்லை என்று எழுதி வாங்கிய பின்னரே இவரை விடுதலை செய்தது.
அரசியல் பயணம்
- 1951-ல் பாரதிய ஜன சங்கத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். மேலும் இவர் அச்சங்கத்தின் உறுப்பினராகவும் இணைந்தார்.
- இவர் பன்ச்சன்யா - இந்தி வார இதழ், ராஷ்டிரதர்மா - இந்தி மாத இதழ் மற்றும் சுவதேஷ், வீர் அர்ஜீன் ஆகிய தினசரிகள் போன்றவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- வாஜ்பாயின் வாழ்நாளில் 1957 ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டாகும். அவர் 1957-ல் முழு நேர அரசியலில் நுழைந்தார்.
- வாஜ்பாய் 1957-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் லக்னோ, மதுரா மற்றும் பல்ராம்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்டார். இத்தேர்தலில் மதுரா மற்றும் லக்னோ ஆகிய இரு தொகுதிகளில் வாஜ்பாய் தோல்வியுற்ற போதிலும், பல்ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தின் உறுப்பினரானார்.
- இவர் 1969 முதல் 1972 வரை பாரதீய ஜன சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.
- மக்களவையில் இவர் ஆற்றிய சொற்பொழிவைக் கண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு வியப்படைந்தார். எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் பதவி வகிப்பார் என்று ஜவஹர்லால் நேரு அப்போதே கணித்தார்.
நெருக்கடிநிலையின் போது
- 1977: 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடிநிலையின் போது மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வாஜ்பாயும் கைது செய்யப்பட்டார்.
- 1977-ல் நெருக்கடிநிலை திரும்பப் பெறப்பட்ட பிறகு இந்திய தேசியக் காங்கிரஸை எதிர்ப்பதற்காக ஜன சங்கம் இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஜனதா கட்சியைத் தொடங்கியது.
- 1977-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் தலைமையில் அரசு அமைந்தது. மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதலாவது காங்கிரஸ் அல்லாத பிரதம அமைச்சர் ஆவார். அவரது அமைச்சரவையில் வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக பணயாற்றினார்.
- 1977-ல் வெளியுறவுத்துறை அமைச்சரான வாஜ்பாய் ஐ.நா. பொதுச் சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் நபர் ஆவார்.
பாரதீய ஜனதா கட்சி (BJP)
- 1980 : 1977-ல் பிரதம அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் பதவி விலகியதையடுத்து ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. 1980-ல் வாஜ்பாய், L.K. அத்வானி, பைரோன் சிங் செகாவத், இதர RSS உறுப்பினர்கள் மற்றும் ஜன சங்க உறுப்பினர்கள் இணைந்து பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினர். பாரதீய ஜனதா கட்சியின் முதலாவது தலைவராக வாஜ்பாய் பொறுப்பேற்றார்.
- 1984 : 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தக் காலங்களில் வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி RSS-ன் ராம் ஜன்மபூமி மந்திர் இயக்கம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றை ஆதரித்தது.
வாஜ்பாய் – பிரதம அமைச்சர்
முதல் முறை
- 1996-ல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக BJP உருவெடுத்தது.
- இந்தியக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா வாஜ்பாயை அரசு அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
- இந்தியாவின் 10-வது பிரதமாக வாஜ்பாய் பதவி ஏற்றார். ஆனால் மக்களவையில் BJP பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டது.
- அரசு அமைக்க போதிய பலம் இல்லாததையடுத்து வாஜ்பாய் 13 நாட்கள் கழித்து பதவி விலகினார்.
இரண்டாவது முறை
- 1998 : 1998-ல் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டு வாஜ்பாய் மீண்டும் இந்தியாவின் 13வது பிரதமரானார்.
- 13 மாதங்களாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கியதையடுத்து வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது.
மூன்றாவது முறை
- 1999-ல் வாஜ்பாய் மூன்றாவது முறை மற்றும் இறுதியாக இந்தியாவின் 14 வது பிரதமராக பதவி ஏற்றார். வாஜ்பாய் தனது பதவிக் காலமான 5 வருடத்தை முழுமையாக நிறைவு செய்தார்.
- இவரது பதவிக்காலத்தின்போது 1999 டிசம்பரில் கந்தகார் விமானக் கடத்தல் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்தது.
- 2000 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்காவின் அதிபரான பில்கிளிண்டன் வருகை தந்தார். 1978 ஆம் ஆண்டிற்குப் பிறகு 22 ஆண்டுகள் கழித்து முதலாவது அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் வருகை புரிந்தார்.1978 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜிம்மி கார்ட்டர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
இந்தியாவின் பிரதமாக வாஜ்பாயின் சாதனைகள்
அணுஆயுத சோதனை – 1998
- 1998 ஆம் ஆண்டில் இந்தியா ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனத்தில் நிலத்திற்கு அடியில் 5 அணுக்கரு சோதனைகளை (ஆப்பரேசன் சக்தி) நிகழ்த்தியது. 1974-ல் இந்தியா முதலாவது அணுஆயுத சோதனையை (புத்தர் சிரித்தார்) நிகழ்த்தியது.
- இரண்டு வாரங்கள் கழித்து, பாகிஸ்தான் தனது அணு ஆயுத சோதனையை நிகழ்த்தி அணு ஆயுதத் திறனை நிரூபித்தது. பிரான்சு போன்ற சில நாடுகள் இந்தியாவின் அணு ஆயுத சோதனையை ஆதரித்த போதிலும் அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியாவின் தகவல், வளங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தடைகளை விதித்தது.
- இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விதித்த தடைகளை 6 மாதம் கழித்து அமெரிக்கா நீக்கியது.
லாகூர் தீர்மானம்
- தெற்கு ஆசியாவில் இராணுவ நடவடிக்கைகளை குறைப்பதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லாகூர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையேயான மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப்பின் பிப்ரவரி 21-ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் லாகூர் தீர்மானம் கையெழுத்தானது.
கார்கில் போர்
- கார்கில் போர் 1999 ஆம் ஆண்டு மே, ஜீன், ஜூலை ஆகிய மாதங்களில் ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் நடைபெற்றது.
- பாகிஸ்தான் பிரதம அமைச்சர் நவாஸ் செரிப்பின் தலையீடு இல்லாமலேயே அந்நாட்டுத் தலைமை இராணுவத் தலைமை தளபதியான பர்வேஸ் முஷராப்பின் தூண்டுதலின் பேரில் இப்போர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
- இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தானின் இராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் நுழைந்ததையடுத்து இப்போர் ஏற்பட்டது.
- இந்திய இராணுவம் “விஜய் நடவடிக்கையைத்” தொடங்கியது.
- இந்திய இராணுவம் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதாக 1999 ஆம் ஆண்டு ஜூலை 26-ல் அறிவித்தது. அப்போதிலிருந்து கார்கில் விஜய் திவாஸ் தினமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா இத்தினத்தை அனுசரிக்கிறது.
- கார்கில் போர் முடிவடைந்த அடுத்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இந்தியா அதிகப்படுத்தியது.
2001 – பாராளுமன்ற தாக்குதல்
- 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13-ல் தீவிரவாதிகள் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
- இத்தீவிரவாத தாக்குதலில் லஷ்கர்-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்கள் பங்கு பெற்றன.
தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சித் திட்டம்
- இந்தியாவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த, வளப்படுத்த மற்றும் விரிவுபடுத்த தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சித் திட்டத்தை (National Highways Development Project) இந்தியா அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் 1998-ல் அப்போதைய பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
- தங்க நாற்கரத் திட்டச் சாலை – தில்லி, சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய 4 முக்கிய நகரங்களை இணைக்கிறது. மேலும் வடக்கு - தெற்கு மற்றும் கிழக்கு - மேற்கு பாதையில் 981 கிலோ மீட்டரைக் கொண்டிருக்கிறது.
புத்தகங்கள்
வாஜ்பாய் எழுதிய புத்தகங்கள்
- தேசிய ஒருமைப்பாடு (1961)
- திறந்தவெளி சமூகத்தின் இயக்கம் (1977)
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் புதிய பரிமாணங்கள் (1979)
- உறுதியான நாட்கள் (1999)
- ஆசியான் மற்றும் ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியாவின் கண்ணோட்டம் (2003)
சுயசரிதைகள்
- இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள்: புதிய பரிமாணங்கள் (1977)
- அஸ்ஸாம் பிரச்சனை : ஒடுக்குமுறை ஒரு தீர்வு அல்ல (1981)
- வாஜ்பாயின் விழுமியங்கள், தொலைநோக்கு மற்றும் கவிதைகள் : இந்திய மனிதனின் தலையெழுத்து (2001)
புத்தகங்கள் மற்றும் கவிதைகளின் தொகுப்பு
- மேரி இக்யவானா கவிதேயம் (1995)
- மேரி இக்யவானா கவிதேயம் (இந்திப் பதிப்பு, 1995)
- கிரேஷ்தா கபிதா (1997)
- நயி திஷா – ஜஹித் சிங்குடன் ஒரு தொகுப்பு (1995)
- கிய கோயா கிய பாயா : அடல் பிகாரி வாஜ்பாய், வாக்திதுவ ஆர் கவிதேயம் (இந்திப் பதிப்பு, 1999)
- சம்வேந்தனா – ஜஹித் சிங்குடன் ஒரு தொகுப்பு (1995)
- இருபத்தொன்று கவிதைகள் (2003)
அடல் பிகாரி வாஜ்பாய் - விருதுகள்
- பத்ம பூஷன் – 1992
- 1993 – ஆம் ஆண்டில் கான்பூர் பல்கலைக்கழகம் இலக்கியத்திற்கான முனைவர் பட்டத்தை வழங்கியது.
- சிறந்த பாராளுமன்றத்தினருக்கான விருது – 1994
- லோக்மான்ய திலகர் விருது – 1994
- பாரத ரத்னா – 2015
- வங்காள தேசத்தின் விடுதலைப் போருக்கான கௌரவ விருதை வாஜ்பாயிற்கு வங்காள தேசமானது ஜுன் 7, 2015-ல் வழங்கியது.
- - - - - - - - - - - - - - -