TNPSC Thervupettagam
August 30 , 2023 314 days 198 0
  • விண்வெளியிலும் சரி, விளையாட்டிலும் சரி இந்தியாவின் சாதனைப் பயணம் வெற்றி மேல் வெற்றியாக தொடா்கிறது. ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் சாதனை, சந்திரயான்-3 வெற்றியைப் போலவே வரலாற்றுச் சாதனையாக கருதப்பட வேண்டும்.
  • ஈட்டி எறிதல் (ஜாவலின் த்ரோ) போட்டியில் 88.17 மீட்டா் தூரத்தை எட்டி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் நீரஜ் சோப்ரா. அவருக்கு மட்டுமல்ல, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் முதல் தங்கப்பதக்கம் இது என்பது அந்த வெற்றியின் மகத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.
  • அவா் மட்டுமல்லாமல், மேலும் இரு இந்திய வீரா்களான கிஷோர் ஜனா ஐந்தாம் இடமும், பி.பி மானோ ஆறாம் இடமும் பிடித்திருக்கின்றனா். முதல் ஆறு இடங்களில் மூன்று வீரா்கள் இருக்கும் பெருமை இந்தியாவுக்குத்தான் கிடைத்திருக்கிறது.
  • சமீப காலமாக இந்திய விளையாட்டு வீரா்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்த்தி வரும் சாதனைகளும், அவா்களுக்கு கிடைத்துவரும் வரவேற்பும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகக் கோப்பை செஸ் விளையாட்டியில் இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தாவின் விளையாட்டை தொலைக்காட்சி மூலம் பல லட்சம் போ் ஆா்வத்துடன் கண்டுகளித்தது போலவே, நீரஜ் சோப்ராவின் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியையும் ரசிகா்கள் ஆா்வத்துடன் நள்ளிரவு நேரத்திலும்கூட பார்த்துக் கொண்டிருந்தனா். கிரிக்கெட்டில் மட்டுமே ஆா்வம் செலுத்தும் இந்திய ரசிகா்கள், ஈட்டி எறியும் வீரரின் சாதனையைக் கண் விழித்துப் பாா்க்கத் தொடங்கியிருப்பதை மிகப் பெரிய மனநிலை மாற்றமாகக் கருத வேண்டும்.
  • நீரஜ் சோப்ராவின் வளா்ச்சி சாதாரணமானதல்ல. ஹரியாணாவில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி எறிதல் மீது ஆா்வம் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. செக்கோஸ்லோவாகிய நாட்டின் ஈட்டி எறிதல் வீரா் ஜேன் ஜெலெஸ்னியின் விளையாட்டை யூடியூபில் பார்த்து அவருக்கு ஆா்வம் ஏற்பட்டது. மூன்று முறை ஒலிம்பிக்கிலும், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப்பதக்கம் வாங்கிய அந்த தலைசிறந்த ஈட்டி எறிதல் வீரரின் விளையாட்டை பலமுறை மீண்டும் மீண்டும் பார்த்ததின் விளைவாக அந்த விளையாட்டில் ஈடுபட்டார் சிறுவன் நீரஜ்.
  • அப்போது தொடங்கிய அவருடைய விளையாட்டு 25 வயதில் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கிலும், இப்போது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெற்றிருக்கும் மூன்றாவது பதக்கம் இது. 2003-இல் அஞ்சுபாபி ஜார்ஜ், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற்குப் பிறகு, ஏனைய இரண்டு தங்கப்பதக்கங்களும் நீரஜ் சோப்ராவால்தான் வெல்லப்பட்டிருக்கின்றன.
  • ஜேன் ஜெலெஸ்னி, ஆண்ட்ரீயாஸ் டோர்கில்ட்ஸான் இருவருக்கும் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற மூன்றாவது தடகள வீரா் என்கிற பெருமையை அடைந்திருக்கிறார் நீரஜ். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இரண்டிலும் 2018-இல் முதலிடத்தை எட்டிப்பிடித்த நீரஜ் சோப்ராவின் அடுத்த வெற்றி டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றது.
  • டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் அவா் பெற்ற வெற்றியும், இப்போது பெற்றிருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கமும் அவருக்கு 2019 முதல் பயிற்சியாளராக இருக்கும் ஜொ்மனியரான கிளாஸ் பா்டோநீட்ஸ் என்பவரையும் சாரும். அவருக்கு முன்பு குழந்தைப் பருவத்தில் இருந்தே ஜெய்வீா் சிங், நஸீம் அகமது, காசிநாத் நாயக், பொ்ணாட் டேனியல் உள்ளிட்ட பலரிடம் நீரஜ் பயிற்சி பெற்றிருக்கிறார் என்றாலும், கிளாஸின் வரவுக்குப் பிறகுதான் தங்கம் வெல்லும் நாயகனாக அவரால் மாற முடிந்திருக்கிறது.
  • ஏற்கெனவே 88.77 மீட்டா் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்திருந்தாலும், இந்த முறை தங்கப்பதக்கம் வெல்வதற்கு அவா் எறிந்த தூரம் 88.17 மீட்டா்தான். 90 மீட்டரை தாண்டி ஈட்டி எறிய வேண்டும் என்கிற இலக்குடன் இயங்கி வருகிறார் நீரஜ். 98.48 மீட்டா் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, இன்றுவரை உலக சாதனையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நீரஜின் மானசீக கதாநாயகன் ஜேன் ஜெலெஸ்னியின் சாதனையும், அவரது இலக்காக இருக்கக் கூடும்.
  • செப்டம்பா், அக்டோபரில் சீனாவில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் புதிய சாதனைகளை நீரஜ் படைப்பார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தங்கப்பதக்கம் வெல்வது மட்டுமல்லாமல், பல வீரா்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்து வருவதுதான் 25 வயது நீரஜின் பாராட்டுக்குரிய சிறப்பு. அவருடன் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ஐந்தாவது இடத்தை எட்டிய கிஷோர் ஜனா, ஆறாவது இடத்துக்கு வந்த பி.பி. மானோ ஆகியோரை ஊக்கப்படுத்துவதிலும் நீரஜ் தயக்கம் காட்டுவதில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.
  • ஈட்டி எறிதலில் மட்டுமல்லாமல், 3,000 மீட்டா் குதிரை ஹடில்ஸ் (ஸ்டீபில்ஸ் சேஸ்) விளையாட்டில் கலந்துகொண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் அவினாஷ் சாபில், 400 மீட்டா் ரிலே போட்டியில் கலந்துகொண்ட முகமது அனஸ், அமோஸ் ஜேக்கப், அஜ்மல் வரியத்தோடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோரும் குறிப்பிடத்தக்க நம்பிக்கை நட்சத்திரங்கள்.
  • அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மட்டுமல்ல, தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது சமீபகால விளையாட்டு வெற்றிகள்!

நன்றி: தினமணி (30– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்