தசை வலிமை ஏன் அவசியம்?
- நம் நாட்டில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகவும் சாதாரணம். போக்குவரத்து நெரிசலில் வாகனத்தைச் செலுத்தத் தசை வலிமை மிக அவசியம். குறைவான வேகத்தில் செல்லும் வாகனத்தின் சமநிலையைப் பேண அதிக சக்தியைப் பயன்படுத்த வேண்டும். வேகமாகச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்தைத் திடீரெனக் கட்டுப்படுத்த வேண்டிய சூழலில் வாகன ஓட்டிகளின் தசை வலிமை நன்றாக இருக்க வேண்டும்.
- போக்குவரத்தால் ஏற்படும் எதிர்பாராத சூழலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு ஏற்ப வாகன ஓட்டிகளிடம் இருந்து உடனடி எதிர்வினை வெளிப்பட வேண்டும். தசை வலிமை குறைவினால் எதிர்வினை ஆற்றும் நேரம் (Reaction Time) அதிகமாகும். இது மிகவும் ஆபத்தானது. வாகனத்தின் எடையைக் கையாள இயலவில்லை என்றால் அது விபத்துகளை விளைவிக்கும். மூட்டு இணைப்பு, தசைகளில் காயங்களை உண்டாக்கும். விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தாண்டிக் காயங்கள் மனித வாழ்வில் உண்டாக்கும் பொருளாதார, சமூகத் தாக்கங்கள் அதிகம்.
விபத்துகளிலிருந்து காக்க...
- இருசக்கர வாகனங்களின் சராசரி எடை 100 - 150 கிலோ இருக்கும். ஸ்கூட்டர் போன்ற சிறு ரக வாகனங்கள் 90 - 110 கிலோ இருக்கும். அதிகத் திறன் கொண்ட இன்ஜின் உள்ள இருசக்கர வாகனங்கள் குறைந்தது 130 கிலோ முதல் அதிகபட்சம் 200 கிலோ வரை இருக்கும். இவற்றைக் கையாளத் தசை வலிமை மிக அவசியம்.
- இருசக்கர வாகனங்களைக் கையாள ‘Core Muscles’ என்று சொல்லக்கூடிய அப்டாமினல், ஒபிலிக்ஸ், கீழ் முதுகுத் தசைகள் வலிமையாக இருக்க வேண்டும். உடல் ஸ்திரத்தன்மைக்கும் பக்கவாட்டில் உடலைத் திருப்பிப் பார்க்கவும், உடலை முன் பக்கவாட்டில் வளைத்து விழாமல் தடுக்கவும் மேற்சொன்ன தசைகள் உதவும். முதுகெலும்பு நமக்கான அதிர்ச்சி தாங்கியாகச் செயல்படும். முதுகுத் தசைகள் பலவீனமாக இருந்தால் முதுகெலும்பின் அதிர்ச்சி தாங்கும் திறன் குறைந்து, முதுகு வலிக்கு வழிவகுக்கும்.
- கால்களில் குவாடர்செப்ஸ் (Quadriceps), ஹாம்ஸ்டிரிங்ஸ் (Hamstrings), கெண்டைக்கால் தசைகள் (Calves), ஹிப் ஃப்ளெக்ஸார் (Hip Flexor) ஆகிய வற்றை வலிமைப்படுத்த வேண்டும். தரையில் இருந்து கால்களைத் தூக்கி வண்டி பெடல்களில் வைத்து கியர் மாற்ற, பிரேக் பிடிக்க, நெரிசலில் வண்டி மெதுவாகச் செல்லும்போது தரையில் கால்களை ஊன்றி வாகனத்தின் சமநிலையைப் பேணி நகர்ந்துகொண்டே இருக்க இந்தத் தசைகள் உதவியாக இருக்கின்றன. உடலின் மேல்பகுதியில் கைகளின் தோள்பட்டைத் தசைகள் (குறிப்பாக Deltoid) வாகனத்தின் ஹேண்டில் பாரை லாகவமாகக் கையாள மிக அவசியம். வாகனத்தைக் கையாளும்போது உடல் எடை, கைகளின் வழியாக வாகனப் பயன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- வாகன எடையை லாகவமாகக் கையாளத் தோள்பட்டைகளின் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம். தோள்பட்டை வலிமை குன்றி இருந்தால் அடிக்கடி கீழே விழக்கூடிய ஆபத்து நிச்சயம். கிரிப் தசைகள் (Grip Muscles), பைசெப்ஸ் (Biceps), டிரைசெப்ஸ் (Triceps) வண்டியின் ஹேண்டில் பாரைக் கையாளுவதற்கு உதவியாக இருக்கின்றன. மேலும், கழுத்தைச் சுற்றி உள்ள தசைகள் வலிமையாக, லகுவாக இருந்தால்தான் எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் வாகனங்களை உற்றுநோக்கி, விபத்துகளில் இருந்து வாகன ஓட்டிகள் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
விழிப்புணர்வை அதிகரிப்போம்:
- வலிமை எவ்வளவு தேவையோ அதே அளவு உடலில் உள்ள மூட்டு இணைப்புகள், தசைகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஆள்கள், வாகனங்கள், விலங்குகள் போன்ற தடைகளைத் திடீரெனச் சந்திக்கும்போது இருசக்கர வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சமநிலைக்கு வர வலிமையோடு கூடிய நெகிழ்வுத்தன்மை தேவை. சமதளமற்ற தரைத் தளத்தில் பயணிக்கும் போதும், கூரான வளைவுகளில் திரும்பும்போதும் கட்டுப்பாடுடன் கூடிய ‘Weight Shifting’ செய்ய முடிந்தால் வாகனத்தை விழாமல் ஓட்டிச்செல்ல முடியும்.
- இன்று நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் பரவலாக இருப்பதாலும், சிறு வயது உடற்பருமன் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டி ருப்பதாலும் தசைகள், மூட்டு இணைப்புகளில் தேய்மானம் விரைவில் தொடங்கி விடுகிறது. மூட்டு இணைப்புகள், மஸ்குலோஸ் கெலிட்டல் அமைப்பு களின் நெகிழ்வுத்தன்மை பாதிக்கப் படுகிறது. உடல் உழைப்பு குறைந்த வேலைகளில் மக்கள் ஈடுபடுவதால் மூட்டுத் தேய்மானம் அதிகரிக்கிறது. தேய்மானம் தசை பலவீனத்திற்கு இட்டுச்செல்கிறது. தொடர்ந்து இயக் கத்தில் இருக்கும்போது தசைகளில் சோர்வு, அவற்றின் இயல்புத்தன்மை பாதிக்கப்பட்டு, தேய்மானப் போக்கு விரைவுபடுத்தப்படும்.
- பொருளாதார, குடும்பத் தேவை களுக்கு வாகனங்களைத் தினசரி இயக்க வேண்டிய அவசியத்தைப் புறந்தள்ள முடியாது. தசை பலவீனத் தோடு வாகனங்கள் இயக்கப்படுவது தனிப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி, சமூக நலனுக்கும் எதிரானது. அதனால் உண்டாகும் விபத்து உள்பட அனைத்து விளைவுகளையும் அரசாங்கங்களும் சாலைப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அரசுசாரா அமைப்புகளும் புரிந்துகொண்டு தசை வலிமை முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 09 – 2024)