TNPSC Thervupettagam

தடுப்பூசி திட்டம் குறித்த தலையங்கம்

January 21 , 2022 927 days 448 0
  • உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பொதுநல வழக்கொன்றில், ‘விருப்பத்துக்கு விரோதமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரையும் கட்டாயப் படுத்தவில்லை’ என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
  • அதேபோல எந்தவொரு செயல்பாட்டுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கவில்லை என்பதையும் கூறியிருக்கிறது. தடுப்பூசி சான்றிதழ் காட்டுவதிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் பொதுநல வழக்கு.
  • ஒருபுறம் கொள்ளை நோய்த்தொற்றின் ஒமைக்ரான் பரவல் சில மாநிலங்களில் வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த திங்கள்கிழமை காணப்பட்ட 2.38 லட்சம் பாதிப்புகள் தான் கடந்த ஒரு வாரத்தில் மிகக் குறைந்த அளவு பாதிப்பு என்றாலும், அடுத்த சில வாரங்களில் ஒமைக்ரான் பாதிப்பால் ஏற்படும் மூன்றாவது அலை உச்சக்கட்டத்தை எட்டக்கூடும் என்று பரவலாக எதிா்பாா்க்கப்படுகிறது.

உரிமையும் தேவையும்!

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆா்.) இணைய தளத்தில் பல மாநிலங்களிலும், ஒன்றியப் பிரதேசங்களிலும் பரிசோதனைகள் குறைந்திருப்பது பதிவாகியிருக்கிறது.
  • கடந்த வாரம் ஐ.சி.எம்.ஆா். வெளியிட்ட புதிய வழிகாட்டுதல் நடைமுறையில், பாதிக்கப் பட்டவா்களுடன் தொடா்பானவா்களுக்கு பரிசோதனைகள் தேவையில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.
  • அதனடிப்படையில் இப்போதைய நோய்த்தொற்றுப் பரவலுக்கு பரிசோதனைகளை முழு வீச்சில் முடுக்கிவிட வேண்டியதில்லை என்கிற அபிப்பிராயம் எழுந்திருக்கலாம்.
  • ஐ.சி.எம்.ஆா்.-இன் வழிகாட்டுதல் நடைமுறைக்குப் பிறகுதான் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பதால் அதை காரணமாக்கத் தோன்றுகிறது.
  • கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் தனிமனித உரிமைகளைவிட பொதுசுகாதாரம் குறித்தக் கவலை முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
  • தேவைக்கேற்ப பரிசோதனைகளை அதிகரிப்பதும், தடுப்பூசி திட்டத்தை அனைவருக்கும் விரிவுபடுத்துவதும், பொது நன்மையைக் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கை என்பதால், தனிமனித உரிமை அடிப்படையில் அவற்றை எதிா்கொள்வது சரியான அணுகுமுறையாகத் தோன்றவில்லை.
  • சட்ட விதிமுறைகளின்படி, எந்த இடத்திற்கும் செல்வதற்கோ, செயல்படுவதற்கோ தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லைதான். நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்கு குறைந்தது ஒருமுறை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கின்றன.
  • அதிகமான நோய்த்தொற்றுப் பரவல் காணப்படும் மும்பை, தில்லி மாநகரங்களும் அது போன்ற அறிவிப்பை வெளியிடுவது குறித்து யோசித்து வருகின்றன. இது இந்தியாவில் மட்டுமே கையாளப்படும் நடவடிக்கை அல்ல.
  • தடுப்பூசி கட்டாயப்படுத்தலை கடைசி முயற்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதற்குக் காரணம், தனிமனித உரிமை அல்ல. தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயப்படுத்துவது சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு வழிகோலக்கூடும் என்பதால்தான்.
  • அதே நேரத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்துதல் தனிமனித உரிமைக்கு எதிரானது என்றால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நினைத்துப் பாா்க்க வேண்டும்.
  • 18 வயது மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி கட்டாயப்படுத்துவது ஆஸ்திரியா, ஈக்வடாா், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சில பிரச்னைகளை எழுப்புகின்றன. ஆனாலும், வற்புறுத்தப்படுகிறது. வேறுசில நாடுகளில் கூட்டம் கூடும் உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்கு தடுப்பூசி போடுதல் கட்டாயப்படுத்தப்படுகிறது.
  • பிரான்ஸ், ஸ்காட்லாந்து, சிங்கப்பூா், தென்கொரியா, ஸ்விட்சா்லாந்து உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் நோய்த்தொற்றுப் பரவலைக் கணிசமாகவே குறைத்திருக்கிறது.
  • பரவலாக தடுப்பூசி போடுவதால் அவசர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்படுபவா்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவதை அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் இருக்கும் ஒப்பாய்வு வெளிப்படுத்துகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவா்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள அமெரிக்காவில், அவசர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப் படுபவா்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது என்றால், பெரும்பாலானவா்களுக்கு தடுப்பூசி போட்டிருக்கும் பிரிட்டனில், அவசர சிகிச்சைப் பிரிவுக்கான தேவையில்லாமலே ஒமைக்ரான் உருமாற்றம் எதிா்கொள்ளப்படுகிறது.
  • பொதுப்போக்குவரத்து, சந்தைகள், மால்கள், அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிற்குச் செல்பவா்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அரசோ, தனியாா் நிறுவனங்களோ கட்டாயப்படுத்துவதை தவறென்று கொள்ள முடியாது. அரசு அலுவலா்களுக்கும், அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்குக்கூட இது பொருந்தும்.
  • அதே நேரத்தில், மக்கள் நலத் திட்டங்களுக்கு தடுப்பூசி சான்றிதழை கட்டாயப்படுத்துவது சரியான அணுகுமுறையாகத் தெரியவில்லை. மத்திய பிரதேசத்தில் பொது விநியோகப் பொருள்களை வாங்குவதற்கும், கேரளத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்களுக்கு அரசு மருத்துவமனை சிகிச்சை மறுக்கப்படுவதும் விசித்திரமாக இருக்கிறது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு விதிவிலக்கு வழங்குவதுபோல, மக்கள்நலத் திட்டங்களுக்கும், அடித்தட்டு மக்களின் அத்தியாவசியங்களுக்கும் வற்புறுத்தல்கள் கூடாது. தனிமனித உரிமைக்கும் சில வரம்புகள் உண்டுதானே!

      நன்றி: தினமணி  (21 - 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்