- நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி தவணைகளின் எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி நூறு கோடியைக் கடந்தது.
- அந்தச் சாதனையை மத்திய அரசு பல்வேறு விதங்களில் கொண்டாடியது. அக்கொண்டாட்டங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்பினர்.
- அவ்வாறு எழுப்பப்படும் கேள்விகள் சரியே என்றாலும், வேறொரு கோணத்தில் ஆராயும் போது இத்தகைய கொண்டாட்டங்கள் அவசியமே எனத் தோன்றுகிறது.
- ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது கரோனா நோய்த் தொற்று. கரோனா பரவலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
- அவற்றில் மிகவும் முக்கியமானது தடுப்பூசி. பல நாடுகள் தங்கள் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்தி வருகின்றன.
மக்கள் எதிர்பார்ப்பு
- இந்நிலையில்தான் நூறு கோடி கரோனா தடுப்பூசி தவணைகளைச் செலுத்தி, இந்தியா சாதனை படைத்தது. தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய ஒன்பது மாதங்களில் இந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்தியது.
- தடுப்பூசி தவணை எண்ணிக்கை நூறு கோடியைக் கடந்ததும் தில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
- நூறு கோடி தவணை கரோனா தடுப்பூசி சாதனை குறித்து அடுத்த நாளே சில பத்திரிகைகளில் பிரதமர் மோடி கட்டுரை எழுதினார்; நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்களின் தலைவர்களை நேரில் அழைத்தும் உரையாடினார்.
- மத்திய கலாசாரத்துறை இச்சாதனையை வெகு விமரிசையாகக் கொண்டாடியது. நாட்டில் உள்ள நூறு புராதனச் சின்னங்களில் தேசியக் கொடியின் மூவர்ண விளக்குகளை இந்தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) மிளிரச் செய்தது.
- பல்வேறு ரயில் நிலையங்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இச்சாதனையைப் பாராட்டி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
- நாட்டில் கரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டது, செயல்படுத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணப்படமும் பாடலும் தில்லி செங்கோட்டையில் வெளியிடப் பட்டது. தடுப்பூசி சாதனையைக் கொண்டாடும் வகையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது விமானத்தின் வெளிப்புறத்தில் பெரிய "ஸ்டிக்கர்' பதித்தது.
- இன்னும் சுமார் 150 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி தவணை செலுத்தவேண்டியிருக்கும் நிலையில் இத்தகைய கொண்டாட்டங்கள் அவசியம்தானா என பல்வேறு தரப்பினர் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. மத்திய அரசின் போக்கை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பத்திரிகையில் கட்டுரை எழுதினார்.
- அவரது விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அதிக பாதிப்பைச் சந்தித்தது சுற்றுலாத்துறையே.
- ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி, சுற்றுலாத்துறை சார்ந்த தொழிலாளர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்; சுற்றுலா மூலமாகக் கிடைக்கும் அந்நியச் செலாவணியும் குறைந்துவிட்டது.
- வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தர மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இருப்பினும் கரோனா தொற்றுப் பரவல் அச்சம் வெளிநாட்டினருக்கு இன்னும் முற்றிலுமாக அகன்றுவிடவில்லை.
- அவர்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமெனில், நூறு கோடி கரோனா தடுப்பூசி தவணை செலுத்தப்பட்ட சாதனையைக் கொண்டாட வேண்டியது அவசியம் தான் எனத் தோன்றுகிறது.
- கரோனா தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் செலுத்தப்பட்டால்தான் வெளிநாட்டவரிடம் நம்பிக்கை ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
- இத்தகைய கொண்டாட்டங்கள் வாயிலாக அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.
- கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் பணிகள் அளப்பரியவை. எத்தனையோ சுகாதாரப் பணியாளர்கள் சிறிதும் ஓய்வின்றி உழைத்தனர். கரோனா பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அதேபோல், இன்னும் சுமார் 150 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப் பட வேண்டியுள்ளது.
- இந்நிலையில், சுகாதாரப் பணியாளர்களை, தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கும் இத்தகைய கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன. தற்போது வரை 70 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.
- இன்னும் பலருக்கு கரோனா தடுப்பூசியின் மீது ஐயம் இருக்கிறது. அவர்களுக்கு தடுப்பூசி குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தவும் இத்தகைய கொண்டாட்டங்கள் துணைபுரியும்.
- இந்தக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், நடப்பாண்டுக்குள் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து, உற்பத்தியை துரிதப் படுத்துவது, மாநிலங்களுக்கு தடுப்பூசியைத் தேவையான அளவுக்கு விநியோகிப்பது உள்ளிட்டவற்றில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- வெளிநாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதியையும் மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளதால், உள்நாட்டில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
- இன்னும் இரண்டு மாதங்களில் சுமார் 150 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கு கடினமாக இருந்தாலும், பிரதமர் மோடி குறிப்பிட்டதைப் போல, கடினமான இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கான வழியைக் காட்டும் நாடாக இந்தியா தொடர்ந்து திகழ வேண்டும்.
- கொண்டாட்டங்களுடன் இணைந்த உத்வேகத்தையே மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி: தினமணி (30 - 10 - 2021)