TNPSC Thervupettagam

தடுமாறுகிறதா சீனப் பொருளாதாரம்?

July 31 , 2019 1991 days 812 0
  • குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களையும் அதிக அளவிலான ஏற்றுமதியையும் அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலம் செழித்துக்கொண்டிருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறது. ஆண்டின் இரண்டாவது பாதியில், சீனாவின் பொருளாதாரம் 6.2% மட்டுமே வளர்ச்சியடைந்திருப்பதாக சீனாவின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன. 27 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி இது என்பதுதான் இந்தத் தரவை முக்கியத்துவப்படுத்துகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4% ஆகவும், 2018 முழுவதுமாக 6.6% ஆகவும் வளர்ச்சி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.

காரணங்கள்

  • தற்போதைய மந்தத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போய்க்கொண்டிருக்கும் வர்த்தகப் போர் காரணமாக ஜூன் மாதம் ஏற்பட்ட மந்தநிலை முதல் காரணம். அடுத்ததாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கைக் குறைவு காரணமாகக் கட்டிடத் துறையில் ஏற்பட்டிருக்கும் சரிவு. வருகிற காலாண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகும் என்றும் பெரும்பாலான பொருளியலாளர்கள் கருதுகிறார்கள்.
  • வளர்ச்சி தடுமாறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதிக ஏற்றுமதி வரிகள் காரணமாக வீழ்ச்சியடைந்திருக்கும் சீன ஏற்றுமதியை உள்நாட்டுத் தேவைகள் ஈடுகட்டிக்கொண்டிருக்கின்றன என்று தரவுகள் கூறுகின்றன. ஆனால், ஏற்றுமதியையே சீனா பெரிதும் நம்பியிருப்பதாலும், அமெரிக்காவுடனான அதன் வர்த்தகப் போருக்கு முடிவு ஏதும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் தெரியவில்லை என்பதாலும், சீனாவின் வளர்ச்சி மீதான நெருக்கடி இன்னும் சில காலத்துக்கு இருக்கவே செய்யும்.

சவால்கள்

  • சீனாவின் முன் பெரிய சவால்கள் பல இருக்கின்றன. அதில் முக்கியமானது சீனப் பொருளாதாரத்தையே மறுகட்டமைப்பு செய்வது. அரசை மையப்படுத்திய முதலீடுகள், ஏற்றுமதிகள் போன்றவற்றிலிருந்து சந்தைமையப்படுத்தியதாகப் பொருளாதாரம் மாற வேண்டும். பொருளாதாரத்தில் சீன வளர்ச்சியின் வசந்த காலம் அந்த அரசால் தாராளமாகக் கொடுக்கப்பட்ட நிதியாலும் மாபெரும் தொழிலாளர் திரளாலும், குறிப்பாக குறைந்த ஊதியத்துக்கு உழைப்பைச் செலுத்திய அந்தத் திரளாலும், சாத்தியமானது. இதனால்தான், ஏற்றுமதியில் உலக அளவில் பெரும் சாம்ராஜ்யமாக சீனா உருவெடுத்திருந்தது.
  • வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட சீனாவின் வளர்ச்சி மாதிரியானது, தடம் மாறி முதலீடுகளும் வற்றிப்போன நிலையில், சீனாவானது இதைவிட நீடிப்புத்தன்மை கொண்ட ஒரு மாதிரியை உருவாக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால், எதிர்காலத்தில் சீனா உருவாக்க உத்தேசித்திருக்கும் இரட்டை இலக்க வளர்ச்சி குறித்த நம்பிக்கைகளை இழக்க நேரிடும்.
  • தற்போது சீன அதிகாரத் தரப்பானது இந்தப் பிரச்சினையை ஆழமாக நோக்கி எந்த மாற்றங்களையும் செய்யும் முனைப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. பெரிய அளவிலான பொருளாதார மாற்றங்களைக்கூட செய்யத் தேவையில்லை. ஆனால், உள்நாட்டு நுகர்வை அதிகப்படுத்தாமலும் ஏற்றுமதியை அளவுக்கதிகமாக நம்பியும் இருந்தால் சீனாவின் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடரவே செய்யும்.

நன்றி: இந்து தமிழ் திசை(31-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்