TNPSC Thervupettagam

தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை

May 4 , 2023 572 days 327 0
  • கல்வித் துறையில் திமுக அரசு முன்னெடுத்த குறிப்பிடத்தக்க பணிகள் என இரண்டைக் குறிப்பிடலாம். முதலாவது, கல்விக் கொள்கை உருவாக்கக் குழு ஒன்றை அமைத்தது; மற்றொன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர் உள்ளிட்டோருக்கான நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின்கீழ் கொண்டுவருவதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது.
  • கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவின் பணி ஓராண்டு என வரையறுக்கப்பட்டது. இது ஓராண்டில் முடியக்கூடிய பணியல்ல. இதன்துணைக் குழுக்கள் ஓராண்டு கழித்து அமைக்கப் பட்டது வியப்புக்குரியது. அதேபோல, நலப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் எப்படிக் கொண்டுவருவார்கள் எனத் தெரியவில்லை.
  • இதற்கான அரசாணைகளும் இன்னும் வெளியாகவில்லை. ஒருங்கிணைந்த கல்வி, எல்லோருக்குமான கல்வி, சமச்சீர் கல்வி, சமூகநீதி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு மறுபுறம் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளுக்கு என்று தனி அதிகார அமைப்பை உருவாக்குவது மிக மோசமானதாகும்.

முரணான நிலைப்பாடுகள்:

  • பொதுப் பட்டியலில் இருக்கும் கல்விக்கு எப்படி மத்திய அரசு மட்டும் கொள்கை வகுப்பதும் மேலாதிக்கம் செய்யவும் முடிகிறது எனும் கேள்வி எழுந்திருக்கிறது. கல்வித் திட்டங்கள் பலவற்றில் மத்திய அரசின் நிதியுதவி இருப்பதால், அதன் கொள்கைகளை வலிந்து திணிப்பதையும் யாரும் எதிர்ப்பதில்லை.
  • நவோதயா பள்ளிகளை மறுத்துவிட்டோம்; எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ, சமக்ர சிக்க்ஷா போன்று மத்திய அரசின் திட்டமாக வரும் பிஎம்ஸ்ரீ பள்ளிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. புதிய கல்விக் கொள்கையின்படி, இப்படி நாடெங்கும் 14,500 பள்ளிகள் வரப்போகின்றன.
  • திமுக அரசைப் பொறுத்தவரை, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பை ஒருபுறமும், அதன் அம்சங்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயல்படுத்தும் போக்கினை மறுபுறமும் காண முடிகிறது. கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்கிறோம் என்று முன்பு சொன்ன நிலையில், தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் அதன் நல்ல கூறுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • ‘இல்லம் தேடிக் கல்வி’, தன்னார்வலர்கள், வலதுசாரி அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’, தகைசால் பள்ளிகள், ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் திமுக அரசின் திசைவழியை உணர்த்தி நிற்கின்றன. மேற்சொன்ன திட்டங்கள் அனைத்தும் புதிய கல்விக் கொள்கையை நகலெடுப்பவை.

தொடரும் குழப்பம்:

  • தொடக்கநிலை வகுப்புகளில் ‘எண்ணும் எழுத்தும்’ அறிவைப் பெறவைப்பது ஓர் அடிப்படைப் பணியாகும். இதை ஒரு திட்டமாக அறிவிப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. இப்பணி சரியாக நடைபெறாததற்கு, அடிப்படை வசதிகளின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கற்பித்தல் சாராத பிற பணிச்சுமைகள், மழலையர் கல்வி மறுப்பு, மாற்றுப் பணிகளுக்காக ஆசிரியர்கள் விடுவிப்பு எனப் பல்வேறு காரணிகளைப் பட்டியலிட முடியும்.
  • ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ ஆகிய இரண்டு மட்டுமே தற்போது பள்ளிக் கல்வியின் முகமாகக் காட்டப்படுகின்றன. ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் கரோனா காலத்தில் செய்திருக்க வேண்டியது. தற்போது அதற்கு அவசியமில்லை. இதற்கென ஆயிரக்கணக்கில் ஆசிரியர்களை மாற்றுப் பணியில் வைத்திருப்பது கல்வியைப் பாழாக்குகிறது. ‘எண்ணும் எழுத்தும்’ உள்ளிட்ட இன்னும் எத்தனை திட்டங்கள் வந்தாலும் இதைச் சரிசெய்ய இயலாது.
  • மழலையர் வகுப்புகளைத் தொடக்கக் கல்வியுடன் வைத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதில் இந்த அரசுக்குக் குழப்பம் உள்ளது. மழலையர் கல்வி பயின்ற - பயிலாத இரு வர்க்கங்கள் சமூகத்தில் உள்ளன. புதிய கல்விக் கொள்கையின்படி மூன்றாண்டு மழலையர் கல்வியை மத்திய அரசு கட்டாயமாக்குகிறது. அரசுப் பள்ளிகளில் இதற்கான முறையான வாய்ப்புகள் இல்லாத நிலையில், தனியாருக்குச் சேவை செய்யும் முயற்சியாகவே இதைக் கருத முடியும்.

தெளிவின்மை:

  • குழந்தைகள் எத்தனை மொழி களை வேண்டுமானாலும் கற்றுக்கொள்வார்கள் என்று சொல்பவர்கள், முதல் வகுப்புச் சேர்க்கைக்கு ஆறு வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்று சொல்வது முரண். இந்தியை மறைமுகமாகத் திணிக்க மும்மொழிக் கொள்கை பயன்படும் என்பதால்தான் தமிழ்நாட்டில் அது எதிர்ப்புக்கு உள்ளாகிறது.
  • ஆனால், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் 1-8 வகுப்புகளில் இந்தியை ஒரு பாடமாகத் திணிப்பதை மாநில அரசு கண்டுகொள்வதில்லை. இதற்கெனத் தனியே பாடவேளைகள் இல்லாத நிலையில் பிற பாடங்கள், உடற்கல்வி போன்றவற்றுக்கு ஒதுக்கப்படும் நேரம் களவாடப்படுகிறது. இதைக் கண்டுகொள்ளாத மாநில அரசு, மும்மொழிக் கொள்கையை எவ்வாறு எதிர்க்கப்போகிறது எனத் தெரியவில்லை.
  • செயல்வழிக் கல்வி பாடநூல்களைத் தவிர்த்து, அட்டைகளைப் பயன்படுத்தத் தொடங்கியபோது இதை விரும்பாத பெரும்பாலான பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடத் தொடங்கினர். இப்போது ‘எண்ணும் எழுத்தும்’ அதே பாணியைப் பின்பற்றுகிறது. எனவே, இத்திட்டங்கள் முறையான ஆய்வுகளுக்குப் பிறகே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். கற்பித்தல் முறைகளை மேலிருந்து திணிப்பது தவறு. ஒரே கற்பித்தல் முறை அனைத்துக்கும் பொருந்தி வராது.
  • 2 பொதுத் தேர்வில் சுமார் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது பற்றி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இதற்கான உண்மைக் காரணங்கள் ஆராயப்பட்டனவா? அனைத்து வகுப்புகளிலும் இடைநிற்றல் உண்டு. குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒருங்கிணைந்த செயல்திட்டங்கள் எந்த அரசிடமும் இல்லை.

எதிர்பார்ப்புகள்:

  • கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 1-8 வகுப்புகளில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பிலும் அனைவருக்கும் தேர்ச்சியே வழங்கப்படுகிறது. இந்தச் சூழலில், முதன்முதலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளை ஏதோ போட்டித் தேர்வுபோல் நடத்துவது நியாயமல்ல.
  • போட்டித் தேர்வுகளுக்குத் தனியே பயிற்சிகள் தரலாம். தேர்வுகள் அனைவரும் பங்கேற்கும் விதமாக எளிமையாக அமைய வேண்டும். 1, 2 வகுப்புகளில் வழங்கப்படும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 10ஆம் வகுப்புக்கும் வழங்கப்பட வேண்டும்.
  • பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக இருப்பதற்காகவும், நீட் போன்ற பொது நுழைவுத் தேர்வுகளுக்காகவும் பாடச்சுமையை அதிகரிப்பதை ஏற்க இயலாது. தேவைப்படுவோருக்கு வேண்டுமானால் அவற்றைத் துணை நூலாக வழங்கலாம். பள்ளிப் பாடநூல்கள் அனைவருக்குமானதாக அமைய வேண்டும்.
  • 1, 2 வகுப்புகளில் செய்முறைத் தேர்வுகள் உள்ள பாடங்களில் 15 மதிப்பெண்களும் பிற பாடங்களில் 25 மதிப்பெண்களும் எடுத்தால் போதும் என்கிற நிலையில், பாடச்சுமையே மாணவர்களைப் பள்ளியைவிட்டுத் துரத்தக் காரணமாகிறது. இத்தகைய நோக்கில் கல்வித் துறை சிந்திப்பதில்லை என்பது வேதனை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்புகள் பெரும்பாலும் தொடர்பின்றி இருப்பதைக் காண முடிகிறது.
  • மாணவர்களிடையே பரவும் சாதிய மனநிலை, போதைப் பழக்கம் போன்றவை கவலை அளிப்பவை. இவற்றைச் சரிசெய்வது ஆசிரியர்களால் மட்டும் முடியக்கூடிய காரியமல்ல. குழந்தைத் திருமணங்கள், குழந்தைத் தொழிலாளர்கள், பள்ளிக் குழந்தைகள் தொடர்பாகப் பதிவான போக்சோ வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்களோ இவற்றைத் தடுக்கக்கூடிய செயல்திட்டங்களோ பள்ளிக் கல்வித் துறையிடம் இல்லை. இவை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்க்கமான தீர்வு காண வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை!

நன்றி: தி இந்து (04 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்