TNPSC Thervupettagam

தடுமாறும் தமிழகம்

April 12 , 2021 1382 days 606 0
  • சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று, முடிவுக்காக தமிழகம் காத்துக் கொண்டிருக்கிறது.
  • ஆளுங்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் அள்ளி வீசியிருக்கும் வாக்குறுதிகளை, எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் நிறைவேற்றுவது சுலபமாக இருக்கப்போவதில்லை. தமிழக அரசின் நிதி நிலைமை தங்களுக்கு சாதகமாக இல்லை என்பது குறித்து அவர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
  • கடன் தள்ளுபடி, இலவசங்கள் என்றெல்லாம் தேர்தல் பரப்புரைகளில் வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு ஆட்சியில் அமரும்போதுதான் அவற்றை நிறைவேற்றுவது ஒன்றும் எளிதானதல்ல என்பது அவர்களுக்குத் தெரியப்போகிறது.
  • உடனடியாக சில கடுமையான நிதி நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு புதிதாக ஆட்சியமைக்கும் கட்சி தள்ளப்படும்.
  • 2011-12 நிதியாண்டுக்கும் 2018-19 நிதியாண்டுக்கும் இடையில் நிதிப் பற்றாக்குறையை 3% அளவிலும், கடன் அளவை மாநில ஜிடிபியின் 25% அளவிலும் தமிழகம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
  • 2019-20 இல் பல மாநிலங்களில் பொருளாதாரம் பின்னடவை எதிர்கொண்டது. தமிழகத்திலும், நிதிப் பற்றாக்குறை அனுமதிக்கப்பட்ட 3% என்கிற அளவைக் கடந்து 2019-20-இல் 3.24%-ஆக அதிகரித்தது.

தமிழகத்தின் வருவாய்

  • தமிழகத்தின் வருவாய், இரண்டு வகையிலிருந்து பெறப்படுகிறது. மத்திய தொகுப்பிலுள்ள ஜிஎஸ்டி பங்கும், மத்திய அரசின் உதவித் தொகைகளிலிருந்தும் முதலாவது வகை வருவாய் கிடைக்கிறது.
  • மாநிலத்தின் சொந்த வருவாயிலிருந்து இரண்டாவது வகை பெறப்படுகிறது. மாநிலங்களின் சராசரி சொந்த வருவாய் 54% என்றால், தமிழகத்தில் அதுவே 69%.
  • மாநிலத்தின் சொந்த வருவாயில் பெரும்பகுதி கலால் வரியிலிருந்து கிடைக்கிறது.
  • சமீப காலமாக சொந்த வருவாய் குறைந்து மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கான ஜிஎஸ்டி பங்கை அதிகம் நம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
  • பத்திரப் பதிவு, டாஸ்மாக் விற்பனை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைந்துவிட்டதுதான் இதற்குக் காரணம்.
  • ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தமிழகம், மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி இழப்பீடு பெற்று வருகிறது.
  • 2018-19 முதல் ஜிஎஸ்டி இழப்பீட்டிலிருந்து 3% அளவிலான வருவாய் கிடைத்து வந்தது. ஜூன் 2022-க்குப் பிறகு ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்படும். அப்போது தனது வருவாயில் மிகப் பெரிய துண்டு விழுவதை தமிழகம் எதிர்கொள்ள வேண்டும்.
  • 2013-14-க்கும் 2018-19-க்கும் இடையில் மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை மாநில ஜிடிபி-யின் 0.2%-லிருந்து 1.4%-ஆக அதிகரித்தது.
  • 2019-20-இல் அது மேலும் அதிகரித்து 1.9%-ஆக உயர்ந்திருக்கிறது. மாநில அரசின் செலவினங்களை எதிர்கொள்ளும் அளவில் மாநில வரி வருவாய் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
  • அதிகரித்து வரும் வருவாய் செலவினங்களை ஈடுகட்டும் அளவுக்கு தமிழகத்தின் வரி வருமானம் உயரவில்லை.
  • தேவைக்கேற்ற வருவாய் இல்லாத நிலையில், செலவினங்களை ஈடுகட்ட அரசு கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
  • தன்னுடைய அன்றாட செலவினங்களுக்காகக்கூட கடன் வாங்கும் நிலையில், மூலதனச் செலவுகளுக்கு மாநிலத்துக்கு வழியில்லாத நிலைமை ஏற்படுகிறது. புதிய வளர்ச்சித் திட்டங்கள் எதையும் மேற்கொள்ள முடியாத தேக்கநிலை ஏற்படுவதன் அறிகுறிதான் இது.
  • மாநிலத்தின் மூலதனச் செலவுகள் 2011-12-இல் மாநில ஜிடிபியில் 2.9% என்றால், 2018-19-இல் அதுவே 1.9%-ஆக குறைந்துவிட்டது.
  • மாநில அரசு கடன் வாங்குவதற்கான அளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் மூலதனச் செலவுகளுக்கு மிகக் குறைவாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மின் வாரியம்

  • தமிழகத்தின் நிதி நிலைமை தடுமாற்றம் காண்பதற்கு மிக முக்கியமான காரணம், தமிழக அரசின் மின் வாரியம்.
  • இலவச மின்சாரம், மின்சார வாரியம் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை, பகிர்மான இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக மின் வாரியம் நிதி நெருக்கடியில் தொடர்கிறது.
  • 2015-16 நிதியாண்டுகளில் தமிழக அரசு மின் வாரியத்தின் ரூ.22,815 கோடி கடனை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • அதனால் மாநிலத்தின் நிதி நிலைமையும் பாதிக்கப்பட்டது. 2020-இல் மின் வாரியம் கொடுக்க வேண்டிய பாக்கிக்காக ரூ.30,230 கோடிக்கு தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது.
  • தமிழக மின் வாரியத்தின் கீழ் 2 கோடி வீட்டு மின் இணைப்புகள், 36 லட்சம் வணிகம் சார்ந்த மின் இணைப்புகள், 7 லட்சம் தொழிற்சாலைகள், 21 லட்சம் விவசாய மோட்டார் இணைப்புகள், 11 லட்சம் குடிசைகளுக்கான இணைப்புகள் என்று மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன.
  • ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திலும் மின் வாரியம் ரூ.2 இழந்து கொண்டிருக்கிறது. இப்படியே போனால் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடியும் என்பது தெரியவில்லை.
  • 2021-22 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மாநில ஜிடிபியில் 4%-ஆகவும், கடன் அளவு 28.1%-ஆகவும் உயரும் என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது கடனைத் திருப்பி அடைக்கவும், கடனுக்கான வட்டியைக் கொடுப்பதற்கும்கூட தமிழக அரசு தடுமாற வேண்டிய நிலை ஏற்படப் போகிறது.

நன்றி: தினமணி  (12 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்