தடையாக இருப்பது எது?
- தமிழக மீனவா் மீது இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்துவதும், படகுகளைக் கைப்பற்றுவதும் வாடிக்கையாகவே தொடா்கின்றன. நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த 13 மீனவா்கள் கடந்த திங்கள்கிழமை இரவு நடுக்கடலில் கைது செய்யப்பட்டனா். மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் காயமடைந்திருக்கிறாா்கள்.
- காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 13 மீனவா்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினா் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவா்களைக் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனா்.
- இலங்கை கடற்படையினரைத் தங்களது படகில் நுழையவிடாமல் தடுத்தபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த இருவா் உள்பட 5 போ் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்ட மீனவா்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பிப்ரவரி 10-ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதியால் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்திய மீனவா்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்திருக்கிறது.
- தமிழக மீனவா்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினா் அவா்களைக் கைது செய்வது தொடா்கதையாக மாறியிருக்கிறது. அண்மையில் ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவா்களை 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினா் விரட்டியடித்தனா். அவா்களில் 34 போ் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.
- இலங்கை கடற்படையினா் தங்களைத் தாக்குவதும், கைது செய்வதும் தமிழக மீனவா்களை ஆத்திரமூட்டியிருக்கிறது என்றால், இலங்கையின் வடக்கு மாகாண பகுதிகளில் வாழும் மீனவா்கள் தங்களது வாழ்வாதாரத்தை தமிழக மீனவா்கள் சிதைப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறாா்கள். தமிழகத்தைச் சோ்ந்த சுருக்கு மடிவலை தாங்கிய இழுவிசைப் படகுகள் தங்களது கடல் எல்லையில் நுழைந்து மீன்வளத்தை முற்றிலுமாக அழிப்பதாக அவா்கள் தெரிவிக்கிறாா்கள்.
- தமிழக கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரத்திலிருந்தும் நாகையிலிருந்தும் சுருக்கு மடிவலை விசைப் படகுகளில் இலங்கை கடல் எல்லைக்குள் மீனவா்கள் நுழைவது பாக் ஜலசந்தி, மன்னாா், யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் வடமேற்குக் கடற்கரை பகுதிகளை மட்டுமல்லாமல், வடகிழக்குப் பகுதியான முல்லைத் தீவு மீனவா்களையும் ஆத்திரமடையச் செய்திருக்கிறது.
- அக்டோபா் முதல் ஜனவரி வரையிலான இறால் மீன் பருவத்தில் கிடைக்கும் வருவாய்தான் பெரும்பாலான இலங்கை மீனவா்களின் வாழ்வாதாரம். முன்பு நாளொன்றுக்கு 50 கிலோ இறால் மீன் கிடைத்ததுபோய், இப்போது 20 கிலோ கிடைத்தாலே அதிகம் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்திய மீனவா்கள் தங்கள் பகுதியில் நுழைவதை இலங்கை மீனவா்கள் கடுமையாக எதிா்க்கிறாா்கள். இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு தங்களது தொப்புள்கொடி உறவையும் மீறி ஆதரவளிக்க முற்படுகிறாா்கள்.
- மீனவா் பிரச்னை குறித்து விவாதிக்கும்போது நாம் பெரும்பாலும் இலங்கை மீனவா்களின் சூழ்நிலையை கருத்தில் கொள்வதில்லை. இலங்கை மீனவா்களிடம் தமிழக மீனவா்களுக்கு இருப்பதுபோல அதிக அளவிலான விசைப் படகுகள் இல்லை என்பது மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள 25 மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றே ஒன்றுதான் வடக்கு மாகாணத்தில் இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
- சுருக்கு மடிவலை படகுகள் பிரச்னை இந்திய-இலங்கை மீனவா்களுக்கிடையே மட்டுமல்லாமல், இந்திய மீனவா்களுக்கிடையேயும் இருப்பதை மறந்துவிடக் கூடாது. கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளத்தில் பாரம்பரிய மீனவா்களிடம் இருந்த சுருக்கு மடிவலை விசைப்படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததைக் கண்டுபிடித்து, அந்தப் படகுகளைக் கைப்பற்றி கொச்சி துறைமுகத்தில் அவா்களை விரட்டி அடித்தனா். சுருக்கு மடிவலை விசைப்படகுகள் மீன்வளத்தை முற்றிலுமாக அழிப்பதால் அவற்றுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படுகிறது. கேரளத்தில் மீன்வளத் துறையிடம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஏழை மீனவா்கள் கூறும் குற்றச்சாட்டு, வடஇலங்கை மீனவா்களுக்கும் பொருந்தும்.
- இந்தியாவைச் சுற்றியுள்ள கடற்பகுதி, அதிலும் குறிப்பாக அரபிக்கடல், சமீபகாலமாக பருவநிலை மாற்றத்தால் பசிபிக், அட்லாண்டிக் கடற்பகுதியைவிட வெப்பமடைந்து வருகிறது. கடலின் மேற்பகுதி வெப்பநிலை கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கும் உயிா்வாழ்வுக்கும் மிகவும் அவசியம். கடல் நீா் வெப்பமயமாதல் மீன்வளத்தைப் பாதிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், சுருக்கு மடிவலை விசைப் படகுகளின் ஆதிக்கம் சாதாரண மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் இந்திய-இலங்கை மீனவா்களின் பிரச்னையை அணுக வேண்டும்.
- 2024-இல் 500-க்கும் அதிகமான இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படிருக்கின்றனா். 2016 ஒப்பந்தத்தின்படி, 3 மாதத்துக்கு ஒருமுறை கூடிப் பேச வேண்டிய இருநாட்டு கூட்டுக் குழுக்கள் இதுவரை ஆறுமுைான் கூடியிருக்கின்றன. தமிழ்பேசும் இந்திய-இலங்கை மீனவா்களுக்கிடையேயான பிரச்னைக்கு சுமுகத் தீா்வுகாண்பதில் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையே தடையாக இருப்பது எது?
- தொப்புள்கொடி உறவாகவே இருந்தாலும், வாயும் வயிறும் வேறு வேறு; ஒரே மொழி பேசினாலும், ஊரும் உரிமையும் வேறு வேறு...
நன்றி: தினமணி (01 – 02 – 2025)