TNPSC Thervupettagam

தடை செய்ய தாமதம் ஏன்?

August 1 , 2022 738 days 506 0
  • மக்களவையில் கிரிப்டோகரன்சி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நிதியமைச்சர் எழுத்து பூர்வமாக பதிலளித்திருந்தார். அதில் "கிரிப்டோகரன்சி தடை செய்யப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. கிரிப்டோகரன்சிகள் வரையறையின்படி எல்லையற்றவை. அவற்றை ஒழுங்குமுறைப்படுத்த  சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
  • எனவே, ஒழுங்குமுறைப்படுத்த அல்லது தடை செய்வதற்கான எந்தவொரு சட்டத்தையும், பொதுவான வகைபிரித்தலையும் தரநிலைகளின் அபாயங்களையும் நன்மைகளையும் கருத்தில் கொண்டு குறிப்பிடத்தக்க சர்வதேச ஒத்துழைப்புக்குப் பிறகு நடைமுறைப்படுத்துவதுதான் பயனுள்ளதாக இருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
  • அல்ஜீரியா நாடு, 2018-ஆம் ஆண்டு, கிரிப்டோகரன்சி பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. அந்நாடு 2018-ஆம் ஆண்டில் ஒரு நிதிச்சட்டத்தை இயற்றியது. அதன்படி, மெய்நிகர் நாணயங்களை வாங்குவது, விற்பது, பயன்படுத்துவது, வைத்திருப்பது அனைத்தும் சட்டவிரோதமானவை. 2014 முதல் பொலிவியாவில் பிட்காயின் பயன்பாட்டிற்கு முழுமையான தடை உள்ளது. 2021-ஆம் ஆண்டு முழுவதும் கிரிப்டோகரன்சிகள் மீது சீனா கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
  • டிஜிட்டல் சொத்து சந்தையில் இருந்து விலகி இருக்குமாறு சீன அரசின் அதிகாரிகள் அதன் மக்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று, "பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சைனா' அந்நாட்டில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை முற்றிலும் தடை செய்தது.
  • கொலம்பியா, எகிப்துஇந்தோனேஷியா, ஈரான் போன்ற பல நாடுகள் கிரிப்டோகரன்சிக்கு பல வித தடைகளை விதித்துள்ளன. எனவே மற்ற நாடுகளுடன் கலந்து பேசிய பிறகே, ஒருமித்த கருத்துடன் கிரிப்டோகிரன்சியை தடை செய்வோம் என்கிற நிதி அமைச்சரின் வாதம் ஏற்புடையதல்ல.
  • நிதி அமைச்சரின் கூற்றுப்படி ரிசர்வ் வங்கி கிரிப்டோகிரன்சியை தடை செய்ய விரும்புகிறது என்றால், அரசு உடனடியாக அவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே சரியான வழிமுறையாக இருக்கும்.
  • கடந்த மே மாதத்தில், உலக அளவில் கிரிப்டோகிரன்சிகள் வீழ்ச்சி அடைந்தபோது அது குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் "கிரிப்டோகரன்சிக்கு அடிப்படை (மதிப்பு) ஒன்றும் இல்லை. அதை ஒழுங்குபடுத்துவது என்பதில் நிறைய கேள்விகள் உள்ளன. எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. இது இந்தியாவின் பணவியல், நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆகியவற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்' என்று கூறினார்.
  • ஒரு புள்ளிவிவரத்தின்படி 2021-ஆம் ஆண்டில் மட்டும், நமது நாட்டில் சுமார் 200 லட்சம்  மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 530 கோடி டாலர் ஆகும். கிரிப்டோகரன்சிகள் இந்திய முதலீட்டாளர்கள் அகராதியின் ஒரு பகுதியாக மாறியுள்ள நிலையில், அரசின் தாமதம் பல முதலீட்டார்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • கிரிப்டோ சொத்துகளின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம், அதன் நவம்பர் 2021 உச்சமான டாலர் 3 டிரில்லியனில் இருந்து டாலர் ஒரு டிரில்லியனுக்கும் கீழே இறங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு சொத்து பகுப்பு டாலர் ஒரு டிரில்லியனுக்கும் குறைவாக மதிப்பு இருந்தது அதுவே முதல் முறையாகும்.
  • உலக அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தினாலும் அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ள வட்டி விகிதத்தினாலும், உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழ்நிலையில் கிரிப்டோகரன்சிகள் மேலும் வீழ்ச்சி அடைய வாய்ப்புண்டு என்றே பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
  • நமது நாட்டில் உள்ள பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீட்டில் உள்ள அபாயங்கள் குறித்து நன்கு உணர்ந்து முதலீடு செய்பவர்கள் அல்ல. அவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் கவரப்பட்டு தவறான நபர்களிடமும், தவறான திட்டங்களிலும் தங்கள் பணத்தை இழந்து வந்துள்ளனர். எவ்வளவுதான் அரசு அறிவுறுத்தினாலும் அவர்களை மீட்பது கடினம். கிரிப்டோகரன்சியை முழுவதுமாக தடை செய்வதே நமது சாமானிய மக்களைக் காப்பாற்றும் வழியாகும்.
  • ஏப்ரல் 2018-இல் ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சியை தடை செய்ய முடிவெடுத்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இதனால் பாதிப்படைந்த "இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா' நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
  • வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்னவென்றால், அது மெய்நிகர் நாணயங்களை தடை செய்யவில்லை. மேலும், இரண்டு வரைவு மசோதாக்கள் உட்பட பல திட்டங்களுடன் பல குழுக்கள் வந்தாலும், இந்திய அரசால் இது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை. இரண்டு வரைவு மசோதாக்களும் எதிர்நிலைகளை ஆதரித்தன. ஆதலால் எடுக்கப்பட்ட நடவடிக்கை விகிதாசாரமானது (ப்ரொபஷனேட்) என்று எங்களால் கொள்ளமுடியாது' என்று கூறியது.
  • இந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால், இன்றைய தேதியில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதற்கோ, அதன் மூலம் பரிமாற்றம் செய்வதற்கோ எந்தவொரு தடையும் இல்லை.
  • நீதிமன்றத் தீர்ப்பை உற்று நோக்கினால் அரசும், ரிசர்வ் வங்கியும் சரியான கொள்கை முடிவு எடுக்காதது தெரிய வரும். எனவே அரசும் ரிசர்வ் வங்கியும் உடனடியாக செய்யவேண்டியது கிரிப்டோ கரன்சியை தடை செய்வதே.
  • கடந்த  நான்கு ஆண்டுகளில் இந்த கிரிப்டோகரன்சிகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் நன்கு வெளிப்பட்டுள்ளன. கிரிப்டோகரன்சிகளை அனுமதிப்பது நாட்டின் இறையாண்மைக்கே பெரிய சவாலாகும். எனவே அரசு கிரிப்டோகரன்சிகளை முழுவதுமாக தடை செய்வதே நல்லது.

நன்றி: தினமணி (01 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்