TNPSC Thervupettagam

தடை வேண்டாம் கருத்துரை தொடரட்டும்

December 9 , 2020 1503 days 690 0
  • ஒவ்வொரு சமூகத்திலும் "நீதி நூல்கள்' பலவாகின்றன. ஆனால், "சட்டம்' என்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒன்று மட்டுமாகிறது. ஒவ்வொரு சமூகத்திலும் காலமாறுதலுக்கேற்பவும், சமூகச் சூழலுக்கேற்பவும் சட்டங்களில் மாறுதல் ஏற்படலாம். ஆனாலும் அவையனைத்தும் அவ்வச் சமூக மக்கள் அனைவர்க்கும் பொதுவாகவே அமையும். நீதிநூல்கள் என்பவை எல்லாக் காலத்திலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்க்கும், அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவாக அமையும்.
  • திருவள்ளுவரின் "திருக்குறள்' முதல் பாரதியாரின் "புதிய ஆத்திசூடி'வரை, ஒவ்வொரு நீதிநூல் ஆசிரியரும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்க்குமாகவே பேசுகின்றனர். திருவள்ளுவர் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பதும், திருவள்ளுவரின் தோற்றம் கி.மு.31 ஆகலாம் என்பதும் சென்ற நூற்றாண்டில் அன்றைய சென்னை மாநில அரசு நியமித்த ஆய்வுக்குழுவின் முடிவாகின்றது.
  • திருக்குறள் "அறத்துப்பால்' "பொருட்பால்' "காமத்துப்பால்' என மூன்று பகுதிகளாக அமைகின்றது. அறத்துப்பாலின் முதல் நான்கு அதிகாரங்களும் "பாயிரம்' என்றும், அடுத்த இருபது அதிகாரங்களும் "இல்லறவியல்' எனவும், ஏனைய பதினான்கு அதிகாரங்களும் "துறவறவியல்' எனவும் கொள்ளுதல் உரையாளர் மரபாகின்றது.
  • திருக்குறள் அறத்துப்பாலுக்கு மட்டும் உரைவரைந்து பதிப்பித்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், திருக்குறளில் முதல் நான்கு அதிகாரங்களும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டவை அல்ல. பிற்காலத்திய "இடைச் செருகல்' என்பதற்குச் சில காரணங்களை முன்வைக்கின்றார். ஆனாலும், அவற்றையும் வள்ளுவர் வாக்காகக் கொள்ளுதலே உரையாளர் ஆய்வாளர் அனைவரின் கருத்தாகின்றது.
  • அச்சுமுறை வருவதற்கு முன்பே திருக்குறளுக்கு உரைவரைந்தோர் பலராவர். அச்சுமுறை ஏற்பட்ட பின்னர், கடந்த நூற்றாண்டின் உரையாளரும் பலராவர். அவருள் பரிமேலழகர் குறிப்பிடத்தக்கவர். காரணம், பரிமேலழகர் ஒவ்வொரு திருக்குறளின் தொடரமைப்பைக் கவனத்திற் கொண்டு அதற்கேற்ப பொருள் விளக்கம் அளிக்கின்றார். அதே சமயம், தாம் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டிற்கேற்ப உரை வரைதல் என்பது அவர் உரையின் குறைபாடாதலையும் மறுப்பதற்கில்லை.
  • முதலாவது, அறத்துப் பாலுக்கான முன்னுரையில், "அறமாவது மநு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம், அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரம்மசரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவ்வற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுதகுதல்' என விளக்கமளிக்கின்றார். திருக்குறளை மநு தர்மத்தின் வழி நூலாக்குகின்றார்.
  • ஆனால், உண்மை என்ன? திருவள்ளுவரின் சில கருத்துக்களில் சிலர் மாறுபடலாம். ஆனால், திருவள்ளுவர் ஒவ்வொரு திருக்குறளையும் மனித சமூகம் முழுமைக்குமாக கூறுகின்றாரேயன்றி, சமூகத்தின் இன்ன பிரிவினர்க்கு இதுதான் உரிய நெறி என்று கூறவில்லை. உலக மாந்தர் அனைவரையும் சம மதிப்பு உடையோராகவே பேசுகின்றார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்பது வள்ளுவர் வாக்கு.

  • அதாவது, உலகில் ஒவ்வொரு சமூகத்தாரின் வாழ்வியல் வேறுபடலாம். ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் வாழ்வியல் தொழில்கள் வேறுபடலாம். ஆனாலும் பிறப்பு என்பது அதாவது ஒரு பெண் பத்து மாதம் சுமந்து பெறுதல் என்பது உலகம் முழுமைக்கும் மாந்தர் அனைவருக்கும் பொதுவானது. எனவே மாந்தராவார் அனைவரும் சமமதிப்பு உடையவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.
  • பிறப்பு ஒத்த தன்மையாகலாம். ஆனால் மாந்தர் செய்யும் தொழில்கள் வேறுபடுகின்றனவே எனலாம். அவையனைத்தும் சமூகத்தின் தேவையை ஒட்டியே அமைகின்றன. ஒவ்வொரு சமூகத்தின் ஒழுங்கு முறையைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தலைமை என்பது கடப்படாகின்றது.
  • அந்தத் தலைமை பரம்பரையடிப்படையில் இருந்தபோது "மன்னன்' என்கிறோம். பரம்பரை அடிப்படையைத் தவிர்த்து அவ்வப்போது மக்களால் தேர்வு செய்யப்படுவோர் "ஆட்சித் தலைவர்' என்றான நிலையில் "தலைமை அமைச்சர்', குடியரசுத் தலைவர்' என்கிறோம்.
  • ஆக, எவ்வகையிலேனும் தலைமை என்பது இல்லையேல் சமூக அமைப்பு சீர்குலைந்து போகும். அதனால்தான் "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்றார் சங்க காலப்புலவர் மோசிகீரனார்.
  • சரி, சமூகத்தில் துப்புரவுத் தொழிலை எடுத்துக்கொள்வோம். துப்புரவுத் தொழில் இல்லையானால் என்னாகும்? மக்கள் நோய்வாய்ப்பட்டு அழிவர். எனவே, ஒரு சமூகத்திற்குத் தலைமை என்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்குத் துப்புரவுத் தொழிலும் அவசியமாகிறது.
  • இந்நிலையில், ஆட்சித்தலைமை உயர்வானது, ஆட்சித்தலைவர் மதிப்புக்குரியவர். துப்புரவுத் தொழில் அசுத்தமானது, தாழ்வானது. எனவே துப்புரவுத் தொழிலாளி தாழ்வானவர் மதிப்புக்குறைவானவர் எனலாமோ?
  • எனவேதான் திருவள்ளுவர் ஆட்சித் தலைமை, துப்புரவுத் தொழில் இரண்டுமே சமூகத்திற்கு அவசியமானவை சமமதிப்பு உடையவை. எனவே, ஆட்சித்தலைவர் துப்புரவுத் தொழிலாளி இருவரும் சமமதிப்பு உடையவர்கள் என்கிறார். இதுதான் திருவள்ளுவர் முதல் பாரதியார் வரை கொண்ட தமிழ் மரபு.
  • இக்குறட்பாவுக்குப் பழைய உரையாளர்கள் இக்கால ஆய்வாளர்கள் அனைவரும் "மக்கள் அனைவரும் பிறப்பில் ஒத்த தன்மையர்; ஆனால் அவரவர் செய்யும் தொழில் முறையால் உயர்வு தாழ்வுக்கு உரியராகின்றனர்' என்பதாகவே விளக்கமளிக்கின்றனர். இவ்விளக்கமும் மறைமுகமாக மநு தர்ம சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்துவனவாகின்றனவாதலின் ஏற்கத்தக்கதல்ல. திருவள்ளுவர் வருணாசிரம வாதியல்லர்.
  • இந்நிலையில், மநு தர்ம சாத்திரம் என்பது என்ன? அதுகூறும் வாழ்வியல் வரையறை என்ன? பாரதம் முதலிய வீர காவியங்களில் மநு ஸ்மிருதியிலுள்ள சுலோகங்கள் காணப்படுகின்றன. மகாபாரத வீரர்களையும், நிகழ்ச்சிகள் சிலவற்றையும் மநு ஸ்மிருதி குறிப்பிடுகிறது. பாரதத்தின் பழம்பகுதி மநு ஸ்மிருதி உருவாகிய பின்னர் ஆக்கப்பட்டதெனவும் கூறலாம்.
  • "மநு ஸ்மிருதி கி.மு 200-க்கும் கி.பி.200-க்கும் இடையில் உருவாகியிருக்க வேண்டும்' என்கிறார் நவாலியூர் நடராசன் தமது "வடமொழி இலக்கிய வரலாறு' என்னும் நூலில். இதில் சில முரண்பாடுகள் உள்ளமை ஒருபுறமிருக்க, மநு ஸ்மிருதியின் சாராம்சம் என்ன?
  • கடவுள் இந்த உலகத்தைப் படைக்கும் போதே, மனிதகுலத்தை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு பிரிவுகளாகப் படைத்ததாகவும், பிராமணனுக்கு ஓதுவித்தல், ஓதல், யாகம் செய்தல், செய்வித்தல், தானம் கொடுத்தல், வாங்குதல், என்பனவும், சத்திரியனுக்கு மக்களைப் பாதுகாத்தல், தானம் கொடுத்தல், வேதம் ஓதுதல், பாட்டு, கூத்து, பெண் முதலியவற்றில் மனம் செல்லாமை என்பனவும், வைசியனுக்குப் பசுவைப் பாதுகாத்தல், தானம் கொடுத்தல், வேதம் ஓதுதல், வியாபாரம் செய்தல், யாகம் செய்தல் என்பனவும், சூத்திரனுக்கு மேற்படி மூன்று வருணத்தார்க்கும் பணி செய்தலை முக்கிய கருமமாகவும் ஏற்படுத்தினார் என்கிறார் (மநு தர்ம சாத்திரம்: 1: 88-91).
  • ஆனால், தற்போது பிராமணர், சூத்திரர், பஞ்சமர் என்றும் மூன்று பிரிவுகளே நடைமுறையாகின்றன. அன்றியும், வேதம் ஓதுதல் மட்டுமே பிராமணர்க்கு மட்டுமான தொழிலாகிறது. மற்றபடி கால வளர்ச்சிக்கேற்ப, தொழில்கள் பற்பலவாகி விட்டபடியால் எல்லாத் தொழில்களையும், எல்லாரும் செய்யலாம் என்றாகி விட்டது. ஆனாலும், வேதம் ஓதுதல் சூத்திரர்க்கு மறுக்கப்படுகிறது. உழு தொழில் செய்ய பிராமணர்க்கு அனுமதியில்லை. அதாவது உழவுத் தொழில் பிராமணர் செய்தலாகாத இழிதொழில் என்பது மநு தர்மம்.
  • ஆனால் வள்ளுவர் என்ன கூறுகிறார்?

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

உழவினார் கைம்மடங்கின் இல்லை

விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.

என்கிறார்.

உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செய்வோம் வீணில்

உண்டுகளித் திருப்போரை

நிந்தனை செய்வோம்

என்கிறார் பாரதியார்.

  • ஆக, மனித குலம் முழுவதையும் சமமாகப் பாவித்தலும், வாழ்வியல் நெறிகளை மக்கள் அனைவர்க்குமாகப் பொதுமைப் படுத்துதலும் திருக்குறளின் நோக்கமாகிறது. மக்களை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனவேறுபடுத்தலும், அதனடிப்படையில் வாழ்வியல் நெறிகளை வகைப்படுத்துதலும் மநு தர்மமாகிறது.
  • இன்னொன்று, "எல்லாம் கடவுள் படைப்பு' என்போரும், "கடவுள் என்று இல்லை' என்போருமாக இருதிறத்தார் ஆதல் பண்டு தொட்டு இன்றளவும் நீடிக்கின்றது. அது மட்டுமல்ல, "எல்லாம் கடவுள் செயல்' என்பதை நம்புவோரும், மநு தர்மத்தை ஏற்போர் மறுப்போர் என இருதிறத்தார் ஆகின்றனர். பதினெண் சித்தர்களும், வடலூர் வள்ளலாரும் கடவுள் மறுப்பாளர் அல்லர். ஆனால் மநு தர்ம மறுப்பாளராகின்றனர்.

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

என்கிறார் திருமூல நாயனார்.

சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ

பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்து ஒன்றலோ

காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன்

ஒன்றலோ

சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன

தன்மையே

என்கிறார் சிவவாக்கியர்.

  • எனவே, இவற்றில் எது பின்பற்றத்தக்கது? உலகின் பிறபகுதி மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது பற்றி கருத்துமாறுபாடுகள் விவாதங்கள் தொடர்தல் இயல்பு. அவரவரும் தத்தமது கருத்துக்களைப் பரப்புரைசெய்யலாம். அதற்குத் தடை கூடாது. தடை ஏற்படுத்துதல் தவறு. எனவே, "திருக்குறளைத் தடை செய்யவேண்டும்', "மனு தர்மத்தைத் தடை செய்யவேண்டும்' என்னும் மோதல் தேவையற்றது.
  • தமிழ்நாடெங்கும் திருக்குறள் மன்றங்கள் நடைபெறுகின்றன. கருத்தரங்குகள் மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வள்ளுவர் கூறும் வாழ்வியல் மலரவேண்டும் என்றும் பிரசாரம் நடைபெறுகிறது. ஆனால், மநு தர்மம் மீளவேண்டும். இந்தியா நால்வருண வகைப்பாடாக வேண்டும் என வெளிப்படையாக பேசும் துணிவு யாருக்கும் இல்லை.
  • எனவே, எதையும் தடை செய்யத் தேவையில்லை. கருத்துரை தொடரட்டும்; மனித குல ஒற்றுமையும், சமத்துவமும் உருவாகட்டும்.

நன்றி :தினமணி (09-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்