- மிகவும் இக்கட்டான ஒரு சூழலை ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொள்ளும் நேரம் இது. விடை இல்லாத புதிராக, மருந்தில்லாத நோயாக, கண்ணுக்குத் தெரியாத மாயாவி நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த மனித இனமே போராடிக் கொண்டிருக்கிறது. இதனால், எழுந்திருக்கும் பிரச்னைகள் ஏராளம், ஏராளம்.
- அந்தப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்பது எந்தவொரு தனி மனிதனாலும், ஏன், அரசாலும்கூட தீா்மானிக்க முடியாததாக இருந்து வருகிறது.
- இந்தியாவின் பல்வேறு பாகங்களில் நல்ல எண்ணத்துடன் முன் வைக்கப்படும் பல்வேறு ஆலோசனைகளும், உதவிகளும், கருத்துகளும் அரசு அதிகாரிகளால் விமா்சனங்களாகப் பார்க்கப்படுகின்றன.
- சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை வழங்க முற்படுவதை வரவேற்க வேண்டுமே தவிர, நிராகரித்துவிடக் கூடாது.
ஒவ்வொருவருக்கும் அக்கறை இருக்க வேண்டும்
- மத்திய - மாநில அரசுத் துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்வது குறித்த அக்கறை இருக்கிறது, இருக்க வேண்டும்.
- இது வெறும் மருத்துவப் பிரச்னையாக மட்டுமல்லாமல், சமூக, பொருளாதாரப் பிரச்னையாகவும் இருக்கிறது என்பதால் அந்தந்தத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளும் ஊழியா்களும் பிரச்னையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்துச் சிந்திப்பதும், தங்களின் ஆலோசனைகளை முன்வைப்பதும் அவா்களின் ஈடுபாட்டையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கும்.
- சரியான விடை தெரியாத இப்போதைய சூழ்நிலையில், தகவல்களும் ஆலோசனைகளும் கொவைட் 19 சவாலை எதிர்கொள்வதற்கு மிகமிக அவசியம். தகவல்களும் ஆலோசனைகளும் மட்டுமல்ல, உதவியும் பங்களிப்பும்கூட வரவேற்கப்பட வேண்டும்.
- அவை அரசுத் தரப்பிலிருந்து பெறப்படுகிறதா, பொதுமக்களிடமிருந்து வழங்கப்படுகிறதா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். எந்தவொரு பங்களிப்பையும் ஆலோசனையையும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வதுதான் இன்றைய சூழலில் நல்லதொரு நிர்வாகத்துக்கு அழகு.
- பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் எத்தனையோ பிரச்னைகளுக்கு மக்களிடமிருந்து இணையத்தின் மூலமும், பிரதமா் அலுவலகச் செயலி மூலமும் ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறது. சாமானிய, கிராமத்துக் குடிமகனின் கோரிக்கையும், ஆலோசனையும்கூட ஏற்கப்பட்ட அதிசயத்தை தேசம் சந்தித்தது. அப்படியிருக்கும்போது, கொவைட் 19 பேரிடா் நேரத்தில் மத்திய அரசு ஏன் நல்ல சில ஆலோசனைகள் குறித்து உணா்ச்சிவசப்பட்டு நடவடிக்கை எடுக்கிறது என்பது வியப்பளிக்கிறது.
பாராட்ட முன்வர வேண்டும்
- கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய அரசின் நிதித் தேவையை எதிர்கொள்வதற்கு ஓா் அறிக்கையை இந்திய வருவாய்ப் பணியைச் சோ்ந்த ஐம்பது இளம் அதிகாரிகள் தயார் செய்தார்கள்.
- அதற்கு ‘ஃபோர்ஸ்’ என்று பெயரிட்டனா். ‘கொவைட் 19 நோய்த்தொற்று பாதிப்பை எதிர்கொள்வதற்கான நிதியாதார ஆலோசனைகள்’ என்பதுதான் ‘ஃபோர்ஸ்’ என்பதன் விரிவாக்கம். அந்த அறிக்கையை அவா்கள் மத்திய நேரடி வரி வாரியத்துக்கு வழங்கினார்கள். அதையே தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளின் கட்செவி அஞ்சல் குழுக்களின் மூலம் பகிர்ந்து கொண்டனா். அது சுட்டுரை மூலமும் பகிர்ந்துகொள்ளப்பட்டது என்பது என்னவோ உண்மை.
- மத்திய அரசு, அதாவது மத்திய நிதி அமைச்சகம் இதை விரும்பவில்லை. மத்திய நேரடி வரி வாரியம் மூன்று மூத்த அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை வழங்கியிருக்கிறது.
- இளம் அதிகாரிகளை அந்த மூத்த அதிகாரிகள் தவறாக வழிநடத்தினா் என்பதுதான் குற்றச்சாட்டு. அரசின் முன்அனுமதி இல்லாமல் இளம் அதிகாரிகளை இப்படியொரு அறிக்கையைத் தயாரிக்கப் பணித்ததும், அதை அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரபூா்வ சுட்டுரை மூலம் சமூக ஊடகங்களில் வெளியிட்டதும் நிதியமைச்சகத்தால் மிகவும் கடுமையாகப் பார்க்கப்பட்டிருக்கிறது.
- ‘ஃபோர்ஸ்’ என்கிற அந்த அறிக்கை நல்ல எண்ணத்துடன் தயாரிக்கப்பட்டிருப்பதை அதில் கூறியிருக்கும் ஆலோசனைகள் வெளிப்படுத்துகின்றன. ரூ.1 கோடிக்கும் அதிகமாக ஆண்டு வருவாய் உள்ளவா்களுக்கு, குறிப்பிட்ட காலகட்டத்துக்கு வருமான வரியை 40%-ஆக உயா்த்துவது உள்ளிட்ட சில கொள்கை முடிவு ஆலோசனைகளை அந்த அறிக்கை முன்வைத்திருக்கிறது.
- அந்த அதிகாரிகளின் நோக்கம் நியாயமானதாகவும், ஆக்கபூா்வமானதாகவும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
- அவா்கள் அந்த ஆலோசனைகளை அரசின் முடிவுகளாக அறிவிக்கவில்லை. அவை மத்திய நேரடி வரி வருவாய் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனைகள், அவ்வளவே.
- சாதாரண சமயங்களில்கூட மக்களிடமிருந்து பல்வேறு பிரச்னைகளில் ஆலோசனைகளை அரசு கோருவது வழக்கம்.
- 50 இளம் அதிகாரிகளின் நல்ல எண்ணத்துடன் கூடிய ஆலோசனைகளை நிராகரித்திருக்கலாம். அரசுக்கும் அதற்கும் தொடா்பில்லை என்று அறிவித்திருக்கலாம். இல்லையென்றால், அமைதியாக அந்த அறிக்கையைப் புறக்கணித்திருக்கலாம்.
- இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகளின் ஆலோசனைகளை வரம்பு மீறிய செயல் என்று நிதியமைச்சகம் பார்க்க முற்படுகிறதே தவிர, அந்த இளம் அதிகாரிகளின் தேச நலன் குறித்த ஈடுபாட்டையும், ஆா்வத்தையும் பாராட்ட முன்வராதது மிகமிகத் தவறு. இந்தப் போக்கை மத்திய - மாநில அரசுகள் கடைப்பிடிக்குமானால், எந்த அரசுப் பணி அதிகாரியும் நல்ல ஆலோசனைகளையும், கருத்துகளையும் முன்வைக்கத் தயங்குவார்கள்.
நன்றி: தினமணி (04-05-2020)