TNPSC Thervupettagam

தண்ணீரைச் சேமிப்போம்!

June 6 , 2019 1999 days 1252 0
பல் துலக்க
  • பல் துலக்கும்போது குழாயைத் திறந்துவிட்டுத் துலக்குவதால் ஏராளமான தண்ணீர் வீணாகிறது. கோப்பையில் தண்ணீரைப் பிடித்துப் பல் துலக்கலாம். இதையே முகச் சவரத்துக்கும் பின்பற்றினால் நிறைய தண்ணீரை மிச்சப்படுத்த முடியும்.
கழிப்பறையில்
  • இந்திய பாணிக் கழிப்பறையில் சிறுநீர் கழித்துவிட்டு ஒரு கோப்பைத் தண்ணீரை ஊற்றினால் போதும். ஆனால், மேற்கத்திய பாணிக் கழிப்பறையில் ஒரு முறை ஃப்ளஷ் செய்தால் 13 லிட்டர் தண்ணீர் வரை செலவாகும். இதனால், ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு சுமார் 100 லிட்டர் தண்ணீர் வரை செலவாகிறது. இந்திய பாணிக் கழிப்பறையைப் பின்பற்றினால் 80 லிட்டர் வரை தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
ஒவ்வொரு சொட்டும்
  • கசியக்கூடிய தண்ணீர்க் குழாயாக இருந்தால் உடனடியாகச் சரிசெய்துவிட வேண்டும். சொட்டுசொட்டாகத்தானே விழுகிறது என்று அலட்சியமாக இருந்தால் ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் வரை வீணாகிவிடும். இப்படி இரண்டு லட்சம் வீடுகளில் தண்ணீர் கசிந்தால் ஒரு நாளைக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் வீணாகும்.
குளியலறையில்
  • பெரிய கோப்பையில் மொண்டு குளிப்பதைத் தவிர்க்கலாம். சிறிய கோப்பையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு குளியலுக்கும் 57 லிட்டர் வரை சேமிக்கலாம். பாத்-டப் குளியலுக்கும், ஷவர் பயன்பாட்டுக்கும் கண்டிப்பாகத் தடைவிதித்துக்கொள்வோம்.
சமையலறையில்
  • குழாயைத் திறந்துவிட்டுப் பாத்திரம் கழுவுவதைத் தவிர்த்துவிட்டு ஒரு வாளியில் தண்ணீரைப் பிடித்துவைத்து ஒவ்வொரு பாத்திரமாக விளக்கலாம்.
துவைப்பதற்கு
  • வாஷிங்மெஷினில் துவைப்பதென்றால் முழுக் கொள்ளளவும் பிடிக்கும் வகையில் துணிகளைப் போட்டுத் துவைக்கவும். குறைவான அளவு துணி என்றால் கூடுமான வரை கையால் துவைப்பதே சிறந்தது.
தோட்டத்தில்
  • அரிசி, காய்கறி கழுவிய தண்ணீரையும் ஆர்.ஓ. சுத்திகரிப்புச் சாதனத்தின் கழிவுநீரையும் வீட்டில் உள்ள செடிகளுக்கு ஊற்றலாம். செடிகளுக்கு ரப்பர் குழாயைக் கொண்டு நீர் பாய்ச்சுவதைத் தவிர்த்துவிட்டு, வாளியில் மொண்டு நீர் ஊற்றலாம்.
மழைநீர் சேகரிப்பு
  • மழைக்காலம் நெருங்கும்போதும் சரி, ஏனைய காலங்களில் மழை அறிவிப்பு வரும்போதும் சரி, வீட்டில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நன்றாகப் பராமரித்துவைக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள், ஏனைய கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். மழை பெய்யும்போது வீதிகளில் ஓடும் மழைநீர் சாக்கடையில்தான் கலக்கிறது. சாலையோரங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அரசு அமைக்க வேண்டும்.
வாகனங்களுக்கு
  • ஒவ்வொரு முறையும் கார் கழுவும்போது 570 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. ஆகவே, காரை உறை கொண்டு மூடிவைக்கலாம். காரில் படிந்துள்ள தூசியை பிரஷ்ஷால் துடைத்துவிட்டு, துணியை நீரில் நனைத்துத் துடைக்கலாம். பைக்குக்கும் இதே மாதிரியான வழிமுறையைப் பின்பற்றலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (05-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்