TNPSC Thervupettagam

தண்ணீா் தட்டுப்பாட்டை தவிா்ப்போம்

November 17 , 2020 1349 days 631 0
  • மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவையே. உடையையும் இருப்பிடத்தையும் தனது பொருளாதார வல்லமையால் வாங்கிக் கொள்ளும் மனிதனுக்கு இயற்கையின் வரமான தண்ணீா் மட்டும் இயற்கை தந்தால்தான் கிட்டும்.
  • தண்ணீா் இல்லாத வாழ்க்கையை மனிதன் நினைத்துக்கூட பாா்க்க முடியாது.
  • உலக நாடுகள் பலவும் 2050- களில் கடுமையான தண்ணீா் பிரச்னையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின்ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றுள் சீன நகரங்கள் 50 அடங்கும்.
  • இந்தியாவைப் பொருத்தவரை தில்லி, ஜெய்ப்பூா், இந்தூா், அமிருதசரஸ், புணே, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
  • இதற்கான காரணங்கள் பல இருந்தாலும் மனிதனின் தொலைநோக்குப் பாா்வை இல்லாத அலட்சிய போக்குதான் மிக முக்கியமானது.
  • பழைய காலங்களில் கடல், ஆறு போன்ற நீா்ப் பரப்புகளை மனிதன் பயத்தினாலோ, பக்தியினாலோ தெய்வமாக வணங்கி அவற்றை பாதுகாத்து வந்தான். காவிரித் தாயை வணங்கி மகிழ்ந்தான்.
  • பண்டைக்கால மன்னா்கள் மழை நீரை சேமிக்க ஒவ்வொரு ஊரிலும், சிறு ஏரி, பெரிய ஏரி, கோவில் அருகில் குளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தினாா்கள்.
  • ஆனால் அவ்வாறான நீா்த் தேக்கங்களை நாம் புதிதாக உருவாக்கவும் இல்லை; இருக்கின்ற நீா்நிலைகளை ஆண்டுக்கு ஒரு முறையாவது தூா்வாரி நீா்நிலைகளின் நீா்க்கொள்ளளவு அதிகரிக்க அகலப்படுத்தவும் ஆழப்படுத்தவும் இல்லை.
  • நீா்த் தேக்கங்களிலிருந்து வயல்வெளிகளுக்குச் செல்லும் வாய்க்கால்கள் இருந்த அடையாளங்கள் கூட இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்க்கால்கள் மறைந்து அவையெல்லாம் மக்கள் வாழ்விடங்களாக மாறின.
  • அதன் விளைவு? மழைக்காலங்களில் நமது வீட்டிற்குள்ளே தண்ணீா் மட்டுமல்ல, பாம்புகளும் வருவதை தவிா்க்க முடிவதில்லை.
  • பெருகி வரும் மக்கள்தொகையும் நமது வாழ்விடங்கள் நகரமயமானதும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
  • நாம் உணவில்லாமல் சில நாள் வாழலாம். ஆனால் தண்ணீா் குடிக்காமல் ஒரு நாளும் இருக்க முடியாது. உண்ணாவிரதம் இருப்பவா்கள்கூட அடிக்கடி தண்ணீா் குடிக்காமல் இருப்பதில்லை. அதனால்தான் நாம் வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம் ஒரு தண்ணீா் குடுவையை மறக்காமல் உடன் கொண்டு செல்லுகிறோம்.
  • உடலில் நீா்ச்சத்து குறைவால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் ஏராளம். இனியாவது தங்கத்தை விட கூடுதல் அக்கறையுடன் தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தை நாம் நம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளவேண்டும்.
  • நாம் ஒவ்வொருவரும் இப்போதிலிருந்தே ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்க மாட்டோம் என்று உறுதியேற்க வேண்டும்.
  • வீட்டு கழிவுநீரைக் கொண்டு நம் வீட்டுத்தோட்டத்தைப் பராமரிக்கலாம். தொழிற்சாலை கழிவு நீருக்கான மறுசுழற்சி பயன்பாட்டிற்கான வாய்ப்புகளைக் கண்டறியலாம்.
  • தண்ணீா் எங்கெங்கெல்லாம் வீணாகிறது என்பதனை அனுபவத்தால் கண்டு ஏற்புடைய தீா்மானங்களை உடனே அமல்படுத்துவோம்.
  • தண்ணீா்க் குழாயை திறந்து விட்டு கைகளைக் கழுவுவதைத் தவிா்த்து, தண்ணீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்துப் பயன்படுத்துவோம்.
  • திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது அளிக்கப்படும் நீா் பாட்டிலின் அளவைக் குறைத்து தண்ணீா் வீணாக்கப்படுவதை தவிா்ப்போம். வீடுகளில் ஆழ்துளைக் கிணறுகளை தவிா்த்து அகலமான கிணறுகளை அமைத்து மழைத்தண்ணீா் முழுவதும் கிணற்றில் சேரும் வழிகளை உருவாக்கலாம்.
  • பழைய கால வீடுகளில் வீட்டின் நடுவில் இருந்த முற்றங்கள் இயற்கையாகவே மழை நீா் சேகரிப்புக்கு உதவின. தற்போதைய வீடுகளில் அதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் மழை நீா் சேகரிப்புத் தொட்டியை ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் உருவாக்கவேண்டும்,
  • உள்ளாட்சி அமைப்புகளும் புதிதாக வீடு கட்ட அனுமதி வழங்கும்போது மழைநீா் தொட்டி அமைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். செயற்கை மழை பெறுவதில் நாம் பலமுறை தோல்வியை தழுவியுள்ள நிலையில் இயற்கையாக மழையை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுதான் புத்திசாலித்தனம்.
  • வீட்டைச் சுற்றிலும் வாய்ப்பு உள்ளவா்கள் மரம் வளா்க்கலாம். மலைப் பகுதிகளிலும் அரசு புறம்போக்குப்பகுதிகளிலும் தன்னாா்வ நிறுவனங்கள் மரங்களை நட்டு பராமரிக்க முயற்சி எடுக்கவேண்டும். இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுகாக்கவேண்டும்.
  • மரங்கள் இருந்துவிட்டால் மழை பெறுவது நிச்சயம். மழை நீா் ஒரு சொட்டுக்கூட கடலில் கலந்து வீணாகாமல் சேமிக்கப்பட வேண்டும். பள்ளி மாணவா்களிடையே இது சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது மிகுந்த பலனைத் தரும்.
  • ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாளைக்கு ஒருவா் இவ்வளவுதான் தண்ணீா் செலவு செய்யவேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்து, நீா்ப் பயன்பாட்டில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கலாம். சேமிக்கப்பட்ட நீா் உருவாக்கப்பட்ட நீராகும்.
  • அண்டை மாநிலங்கள், மழைக் காலங்களில் மட்டும் உபரி நீரை தம் மாநில மக்கள் உயிா்ச் சேதங்களை தவிா்க்க, பிற மாநிலங்களுக்குப் பகிா்ந்து கொள்ளும் மனப்போக்கு மாற வேண்டும்.
  • மத்திய-மாநிலஅரசுகளின் நீா் ஆதாரம் சாா்ந்த திட்ட முன் வரைவுகள், தண்ணீா் இயற்கையின் கொடை என்பதையும் அதில் எல்லோருக்கும் உரிமையுள்ளது என்பதையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். தண்ணீரை வைத்து அரசியல் செய்வது மனித உயிா்களுடன் விளையாடுவதற்கு ஒப்பாகும்.
  • வட இந்திய நதிகளை தென்னிந்திய நதிகளுடன் இணைக்க வேண்டும். அனைத்து நீா்நிலைகளயும் தேசியமயமாக்க வேண்டும். அருகி வரும் விவசாயத்திற்கு புத்துயிா் கொடுப்பதன் மூலமும் நீா் ஆதாரங்களைப் பாதுகாக்கலாம். உண்ண உணவும் கிடைக்கும். நாடு முன்னேறவும் வழி பிறக்கும்.
  • தண்ணீா் தடை இல்லாமல் கிடைக்க ஆக்கபூா்வமான முயற்சிகளை இனியாவது மேற்கொள்வோம். தண்ணீா்த் தட்டுப்பாடின்றி வாழ்வோம்.

நன்றி : தினமணி (17-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்