TNPSC Thervupettagam

தனது நோக்கத்திலிருந்து ‘ஜி-20’ விலகக் கூடாது

July 4 , 2019 1972 days 1021 0
  • இப்போதெல்லாம் ‘ஜி-20’ அமைப்பின் உச்சி மாநாடானது அதன் தீர்மானங்களைவிட, அந்த நிகழ்ச்சிக்கு வரும் தலைவர்களிடையே நடக்கும் சந்திப்புகளுக்காகவும், துணுக்குச் செய்திகளுக்காகவும் மிகவும் கவனமாகப் பார்க்கப்படும் நிகழ்வாக மாறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியமும் 19 நாடுகளும் இடம்பெற்றுள்ள இந்த அமைப்பினுடைய உறுப்புகளின் மொத்த உற்பத்தி மதிப்பைக் கூட்டினால், உலக உற்பத்தி மதிப்பில் 85% அது. அத்தகு முக்கியத்துவம் மிக்க இந்த அமைப்பு ஆக்கபூர்வச் செயலாற்றினால் பெரும் மாற்றங்களை உண்டாக்க முடியும். ஆனால், ஏமாற்றங்களே மிஞ்சுகின்றன.
ஜி-20
  • ஜப்பானின் ஒசாகாவில் சமீபத்தில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் 20 சந்திப்புகளில் பங்கேற்ற பிரதமர் மோடி பல முக்கியமான பிரச்சினைகளை எழுப்பினார். பொருளாதாரக் குற்றங்களை இழைத்துவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பியோடி புகலிடம் தேடும் கோடீஸ்வரர்களை அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவது; பருவநிலை மாறுதலைத் தடுக்க கரிப்புகை வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்த வளர்ந்த நாடுகள் பங்களிப்பது தொடர்பான இரு வலியுறுத்தல்கள் அவற்றில் முக்கியமானது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அழைப்பு விடுத்தும் டிஜிட்டல் பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி மறுத்துவிட்டார். ‘மனிதர்களைப் பற்றிய தரவுகளைத் தடையில்லாமல் நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த மாநாட்டின் கருப்பொருள். ‘இந்தியர்கள் தொடர்பாகத் திரட்டப்படும் தரவுகள் இந்திய நாட்டுக்குள்ளேயே வைத்துப் பராமரிக்கப்பட வேண்டும்’ என்று இந்திய முடிவில் உறுதிகாட்டினார் பிரதமர். இவை யாவும் சரியான முன்னெடுப்புகள்.
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
  • மாநாட்டில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது ட்ரம்ப் - ஜி ஜின்பிங் இடையிலும், ட்ரம்ப் - மோடி இடையிலுமான சந்திப்புகள். காரணம் அமெரிக்கா, சீனா, இந்தியா இடையில் வர்த்தக உறவு சுமுக நிலையிலிருந்து விலகி, பரஸ்பரம் காப்பு வரியை உயர்த்தும் அளவுக்கு முற்றியதுதான். ஆனால், இச்சந்திப்புகளுக்குப் பிறகு தீர்வுகளோ, பெரிய பேரங்களோ கை கூடிவிடவில்லை; பதற்றம் தணிந்தது என்பதுடன் இத்தலைவர்கள் சுமுகமாகவே பேசிக்கொண்டார்கள் என்பதே பெரிய செய்தியாகிவிட்டது. முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டாலும் பெரிய தீர்வுகளை உடனடியாக எட்ட முடியாததற்கு ‘ஜி-20’ தன் இலக்குக்கு வெளியிலும் அதிகம் பயணிப்பதே முக்கியமான காரணம்.
  • அடுத்த மாநாடு 2022-ல் இந்தியாவில் நடக்கும்போது, ‘குன்றாத வளர்ச்சி, நிதி நிலையில் ஸ்திரத்தன்மை’ எனும் தன் மூல லட்சியத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்ற கேள்வியை ‘ஜி-20’ நாடுகள் கேட்டுக்கொள்ள வேண்டும். இந்தியா அதை நோக்கி ஏனைய நாடுகளைத் தள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை(04-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்