TNPSC Thervupettagam

தனித்தமிழ்த் திருவாட்டி நீலாம்பிகை அம்மையார்

November 19 , 2023 417 days 1123 0
  • நூற்றாண்டுக்கு முன் நம் தமிழ் மொழியில் பிறமொழிக் கலப்பு மிகுதியாக இருந்தது. குறிப்பாக வடமொழிக் கலப்பு அதிகமாகி மணிப்பிரவாள நடை சரளமாய்ப் புழங்கியது. அச்சமயத்தில் தமிழ்க்கடல் மறைமலையடிகளாரும் அவருடைய திருமகள் நீலாம்பிகை அம்மையாரும் தோற்றுவித்ததே தனித்தமிழ்க் கொள்கை. திருவருட்பா பாடலான ‘பெற்றதாய்தனை மக மறந்தாலும்’ இதற்கு வித்தானது. இன்று தனித்தமிழ் நம் சொத்தானது. நீலாம்பிகை அம்மையார் குறித்து எழுதும்போது வரலாற்றுப் பிழைகளோடு சிலர் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். பல இடங்களில் நீலாம்பிகை அம்மையார் இருட்டடிப்பு செய்யப்படுகிறார். உண்மை வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டியதும் நம் கடமை.
  • நீலாம்பிகை அம்மையார் மறைமலையடி களாரின் மகளாக 6.8.1903 அன்று சென்னை, பல்லாவரத்தில் பிறந்தார். நாகை நீலாயதாட்சி என்கிற பெயரே அவருக்குச் சூட்டப்பட்டது. அரசன் சண்முகனார், பாண்டித்துரையார் போன்றோரின் பேரன்பைப் பெற்று அறிவுக் குழந்தையாய் வளர்ந்த அம்மையாரை அடிகளார் தம்போல் தமிழ்ப் புலமை மிக்கவராய் ஆக்கக் கருதி இலக்கண இலக்கியங்களை இளவயதில் கற்பிக்கத் தொடங்கினார். தமிழ்க் கருவூலங்களான நன்னூல், தண்டியலங்காரம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என எல்லாவற்றையும் கற்றுத் தந்து ஆகச்சிறந்தவராய் உருவாக்கினார்.
  • பலரும் வியக்க அம்மையார் 13 வயதிலேயே தந்தை எழுதித்தந்த ‘பெற்றோள் கடமை’ என்கிற கட்டுரையை மேடையில் சொற்பொழிவாக ஆற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார். சைவ சமயத் தொண்டு, மகளிர் மேம்பாடு, தமிழுக்கான தனிப்பெரும் பணி, நூலாக்கப் பணிகள் எனத் தம் வாழ்நாளைப் பயனுள்ள வகையில் செலவிட்டவர்.

  • தமிழாசிரியராகவும் பணியாற்றியவர். தனித் தமிழ்த் திருவாட்டி, மொழிப்போர் வீராங்கனை, தம் எழுத்துகளால் பெண்கல்வியை உயர்த்தியவர், பன்முக வித்தகர், மும்மொழிப் புலமையர் என நீலாம்பிகை அம்மையாரின் பெருமைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
  • தமிழ்க்கடல் மறைமலையடிகளாருடைய மகள் என்பதால் தந்தையிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தவர். 42 ஆண்டு கால உலக வாழக்கையில் 15க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர். ‘வடசொல் தமிழ் அகராதி’ என்கிற அம்மையாரின் நூல் அகராதிப் பணிக்கு முன்னோடியாகும். பிழை நீக்கி எழுதும் முறை, மக்கள் பெயர் அகரவரிசை, இல்லப் பெயர் அகரவரிசை, ஆராய்ந்தெடுத்த 600 பழமொழிகள் - அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்ப்பு ஆகியவை இன்றளவும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர், மேனாட்டுப் பெண்மணிகள் போன்ற பல நூல்கள் அம்மையாரின் அறிவுசால் பெருமையை உணர்த்துவன.
  • எப்போதும் முப்போதும் தப்பேதுமில்லா கற்றலும் எழுதலுமே தன் உயிர்மூச்சாகக் கொண்டு இலங்கியவர். தமிழ்ச்சொற்களை அழியாமல் காத்திட அரும்பாடுபட்டவர் அம்மையார். பிறமொழிக் கலப்பை அறவே விரும்பாதவர். ஆனால், எம்மொழியைக் கற்பதும் தவறில்லை என்கிற கொள்கை கொண்டவர். அவரே தமிழ், ஆங்கிலத்தோடு வடமொழியையும் ஐயந்திரிபரக் கற்றுத் தெளிந்தவர். எனவேதான் அம்மையாரால் மொழிபெயர்ப்பிலும் சிறந்தொளிர முடிந்தது.
  • நீலாம்பிகை அம்மையார் நூல்கள் நல்ல நடையில் சிறு சிறு தொடர்களால் எளிதில் புரியும் வண்ணம் எழுதப்பட்டன. பயனற்ற சொற்களோ சொற்றொடர்களோ அவரது நூல்களில் இருப்பதில்லை. அம்மையாரின் துணைவர் சைவநெறியாளர் திருவரங்கனார் அவரது எழுத்துப் பணிக்குப் பெருந்துணை புரிந்தார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவி அறிவுப் பெருக்கும் பல்லாயிரக்கணக்கான நூல்களைப் பதிப்பித்தவர். அடிகளார் மீது பெரும்பற்றுதல் கொண்ட அரங்கனார், நீலாம்பிகை அம்மையாரை 10 ஆண்டு காலம் விரும்பி மணம் புரிந்தவர். அம்மையார் மணவாழ்வில் பெற்ற பிள்ளைச் செல்வங்கள் 11 பேர்.
  • 1938 நவம்பர் 13 அன்று ஒற்றை வாடை நாடக அரங்கில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய அம்மையார், ‘தமிழ்நாடும் தமிழ்மொழியும் முன்னேறுவது எப்படி?’ எனத் தலைமையுரையைப் பேருரையாக நிகழ்த்தினார். இம்மாநாட்டில் டாக்டர் தர்மாம்பாள், தோழர் மீனாம்பாள் சிவராஜ், தோழர் தாமரைக்கண்ணி அம்மையார் போன்ற ஆகச் சிறந்த பெண் ஆளுமைகள் ஒன்றிணைந்து பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.இராமசாமிக்கு ‘பெரியார்’ என்கிற பட்டத்தை வழங்கினர். இச்செய்தி அன்றைய ‘குடிஅரசு’ இதழில் வெளியானது.
  • 1944 இல் தன் கணவர் திருவரங்கனார் மறைவு அம்மையாருக்குப் பேரிடியானது. அடுத்த ஆண்டு 1945 ல் அம்மையாரும் உடல்நலம்குன்றி மறைந்தார். அம்மையாருக்கு சுந்தரத்தம்மை, முத்தம்மை, வயிரமுத்து, வேலம்மை, சங்கரியம்மை, பிச்சம்மை, மங்கையர்க்கரசி, திருநாவுக்கரசு எனப் பிள்ளைகள் இருந்தனர். மக்கள் செல்வத்தைப் பெரிதும் விரும்பிய அம்மையார் இளம்பருவத்தில் அவர்களை விட்டுப் பிரிந்ததை எண்ணி தமிழுறவுகள் துயருற்றனர். மக்கள் செல்வத்தை மட்டுமல்ல நூல் செல்வங்களையும் தமிழ் மக்களுக்காக விட்டுச்சென்றவர் அம்மையார். தமிழ் உள்ள அளவும் அவரது பணி நினைத்தற்குரியது!

நன்றி: இந்து தமிழ் திசை (19 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்