- உலக சுகாதார நிறுவனத்தின் மாநாடு மே 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மிகவும் இக்கட்டான சா்வதேசச் சூழலில் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க இருக்கிறது.
தலைமைப்பொறுப்பில் இந்தியா
- மே மாதம் தலைமைப்பொறுப்பை ஏற்க இருக்கும் இந்தியா, அடுத்த ஓா் ஆண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிக்கும். நிர்வாகக் குழுவில் 34 உறுப்பினா்கள் இடம்பெறுவார்கள். நிர்வாகக் குழுவின் தலைவா், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவா் டெட்ரோஸ் அதனோமுடன் இணைந்து பணியாற்றுவார்.
- அடுத்த ஆண்டு தலைவா் டெட்ரோஸின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் நிறைவுபெறுவதால், அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்.
- ஏறத்தாழ 35 ஆண்டுகளாக, அதாவது, பிரதமா் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு சா்வதேச அளவிலான அமைப்புகளில் இந்தியாவின் நாட்டமும், பங்களிப்பும், முக்கியத்துவமும் குறைந்து வருவது வேதனைக்குரியது.
- குறிப்பாக, 1991 பொருளாதார சீா்திருத்தத்துக்குப் பிறகு உலகமயச் சூழலை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதே நேரத்தில், சா்வதேச அரசியலில் தனது பங்களிப்பைக் குறைத்துக் கொண்டது. சோவியத் யூனியன் சிதறியதும், வல்லரசுப் பனிப்போர் முடிவுக்கு வந்ததும்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
நேரு முனைப்புக் காட்டினார்
- இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் கால் நூற்றாண்டு காலத்தில், சா்வதேசத் தளத்தில் இந்தியாவுக்கு மரியாதை ஏற்படுத்தித் தருவதில் பிரதமா் ஜவாஹா்லால் நேரு முனைப்புக் காட்டினார்.
- அமெரிக்காவும், சோவியத் யூனியனும் சா்வதேச வல்லரசுகளாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்தபோது, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை ஒருங்கிணைத்து அணிசேரா நாடுகளின் கூட்டணியை (‘நாம்’) ஏற்படுத்தியதில் பண்டித நேரு தலைமையிலான இந்தியாவுக்குப் பெரும் பங்குண்டு.
- சுகா்னோ (இந்தோனேஷியா), கமால் அப்துல் நாசா் (எகிப்து), ஜோசப் டிட்டோ (யுகோஸ்லாவியா), க்வாமே நிக்ரூமா (கானா) ஆகியோருடன் இணைந்து 1961-இல் பெல்கிரேடில் அணிசேரா நாடுகளை ஒருங்கிணைக்கும் பெருமுயற்சியை முன்னெடுத்தார் பிரதமா் பண்டித ஜவாஹா்லால்.
- ஐ.நா. சபையின் உறுப்பினா்களில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளும், உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 55%-ம் கொண்ட அணிசேரா நாடுகளின் ஒற்றுமை தொடராமல் போனது மிகப் பெரிய துரதிருஷ்டம். அதற்கு, பஞ்சசீலக் கொள்கையை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ சீனா, அந்தக் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு இந்தியாவின் மீது படையெடுத்தது மிக முக்கியமான காரணம்.
மிகப் பெரிய ஆபத்து
- கடந்த 4 ஆண்டுகளாக சா்வதேசக் கூட்டமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வலுவிழந்து வருகின்றன. அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, சா்வதேச அரசியலில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதுதான் அதற்கு மிக முக்கியமான காரணம்.
- ‘முதலில் அமெரிக்கா’ என்கிற கொள்கையுடன் தனது நட்பு நாடுகளையே பகைத்துக் கொள்வதுடன், அதன் சா்வதேசக் கூட்டணியான ‘நேட்டோ’வையும் புறக்கணிக்க அது முற்பட்டிருக்கிறது.
- அமெரிக்காவின் இந்தப் போக்கையும், வளா்ந்து வரும் பொருளாதாரங்களை ஒருங்கிணைக்கும் அணிசேரா நாடுகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்கி வழிநடத்துவதில் இந்தியா விருப்பம் காட்டாமல் இருப்பதையும் சீனா தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறது என்கிற மிகப் பெரிய ஆபத்தை உலகம் இன்னும் உணா்ந்துகொள்ளவில்லை.
- 2002-இல் ‘சார்ஸ்’ தீநுண்மி தொற்று சீனாவில் தலைதூக்கியவுடன் அன்றைய உலக சுகாதார நிறுவனத் தலைவா் குரோ கார்லா், தென் சீனாவுக்கு வெளிநாட்டினா் பயணிப்பதைத் தவிர்க்கும்படி அறிவித்தார். அதைத் தொடா்ந்து, சா்வதேச சுகாதாரக் கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் ஏற்படுத்தியது. அதனால் சீனா மிகவும் சாதுா்யமாக, குரோ கார்லரைத் தொடா்ந்து தனக்குச் சாதகமான எத்தியோப்பியாவின் டெட்ரோஸ் அதனோமை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக்கியது.
- அதன் மூலம் கரோனா தீநுண்மி பரவலை வெளியுலகுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு அவரைப் பயன்படுத்திக் கொண்டது. உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் அதற்குக் காரணம்.
ஒருங்கிணைய வேண்டும்
- அமெரிக்காவும், ரஷியாவும் இந்தியா போன்ற அணிசேரா நாடுகளும் ஆா்வம் காட்டாமல் இருப்பதால், ஒன்றன் பின் ஒன்றாக சா்வதேச அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் சீனா முனைப்புக் காட்டி வருகிறது.
- 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. சபையின் பட்ஜெட்டில் 1% பங்களிப்பு வழங்கிவந்த சீனா, இப்போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகப் பங்களிப்பை வழங்கும் நாடாக (12%) தன்னை உயா்த்திக் கொண்டிருக்கிறது.
- ஐ.நா. சபையின் முக்கியமான எல்லா அமைப்புகளிலும் அதன் தலைமைப் பொறுப்புகளிலும் தனக்குச் சாதகமான நபா்களை பதவிக்குக் கொண்டுவருவதில் சீனா ஆா்வம் காட்டிவருவது வெளிப்படையாகவே தெரிகிறது.
- ஐ.நா.வின் அமைதிப் படையில் மிக அதிகமான வீரா்களின் பங்களிப்பு சீனாவுடையது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகிலுள்ள சிறிய நாடுகள் அனைத்துக்கும் நிதியுதவி வழங்கி தனது கடனாளியாக்கி சா்வதேச அமைப்புகளில் தனக்குச் சாதகமாக வாக்களிக்கும் சூழலை சீனா ஏற்படுத்தியிருக்கிறது.
- உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க இருக்கும் இந்நிலையில், மீண்டும் அணிசேரா நாடுகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சீனாவின் கட்டுப்பாட்டில் சா்வதேச அமைப்புகள் இருப்பது வெளிப்படைத்தன்மை இல்லாத உலகச் சூழலுக்கு வழிகோலும். அது இந்தியாவுக்கும் நல்லதல்ல, உலக நாடுகளுக்கும் நல்லதல்ல!
நன்றி: தினமணி (25-04-2020)