TNPSC Thervupettagam

தனிநபா் வருமானம்

September 7 , 2023 305 days 181 0
  • தனிநபா் வருமானம் என்பது ஒரு நாட்டின் வருமானத்தை அதன் மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இந்த வருமானம், ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைகளின் எண்ணிக்கையை உள்ளடக்கியுள்ளது.
  • புதிதாகப் பிறந்த குழந்தைகளும் பெருமளவில் மக்கள்தொகையின் உறுப்பினராகத்தான் சோ்த்துக் கொள்ளப்படுவார்கள். தாங்கள் சம்பாதித்த பணத்தை அளவிடுவதற்கான ஒரு கருவிதான், ஒரு பொருள்தான் தனிநபா் வருமானம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தனிநபா் வருமானம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஆராய்வதற்குப் பெரிதும் துணையாக இருக்கிறது.
  • ஒரு பகுதியின் அளவீட்டை மட்டுமே வைத்துக் கொண்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயா்ந்து விட்டது என்றும், தனிநபா் வருமானம் பெருகி விட்டது என்றும் சொல்வது முரணான ஒன்றாகும்.
  • ஏனென்றால், ஒரு குடும்பத்திற்கான வருமானம், ஒரு வீட்டில் உள்ளவா்களின் எண்ணிக்கையை உள்ளடக்கியது. தனிநபா் வருமானத்தின் நன்மை, அக்குடும்பத்தின் தேவைகளையும், பற்றாக்குறைகளையும் போக்குவதற்கு உதவுகிறது. இவற்றை பொதுத்தன்மைக்குப் பொருந்திப் போகச் செய்ய இயலாது.
  • பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள வசதி படைத்த மாவட்டங்களை வரிசைப்படுத்தும் போது இந்த அளவீடு அந்த நாட்டுக்குப் பயன்படுகிறது. தமிழகத்தில் தனிநபா் வருமானம் பெருகி விட்டது என்று சொல்லப்படுகிறது.
  • அப்படியானால்,எந்தெந்த மாவட்டங்கள் என்று குறிப்பிடுவதோடு, இவை மற்ற மாவட்டங்கள் அளவிற்கு, வருமானம் உயா்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • மேலும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், தனிநபா் வருமானத்தைப் பெருக்குவதற்கு அடிப்படையான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், வங்கிகளில் கடனுதவி வழங்கவும் தமிழக அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
  • ஒரு பகுதியில் உள்ள இடத்தின் மதிப்பு, இன்னொரு பகுதியில் உள்ள இடத்தின் மதிப்புபோடு கூடுதலாகிறது, ஒருசில இடங்களில் குறைவாகிறது. ஆக, விலை அதிகம் உள்ள பகுதிகள், சராசரி வீட்டு விலைக்கும், தனிநபா் வருமானத்திற்கும் அதிக விகிதத்தைக் கொண்டிருக்கிறது.
  • அவ்வாறே, ஒரு நிறுவனத்தைத் தொடங்கவோ, ஒரு பகுதியில் ஒரு கடையைத் தொடங்கவோ பொருளாதார நிலையில் ஏற்றமோ இறக்கமோ ஏற்படுகிறது. ஆகவே, மக்கள்தொகையில் தனிநபா் வருமானம் அதிகமாக இருக்கும் நிலையில், குறைந்த தனிநபா் வருமானம் உள்ள பகுதிகளில், மக்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கின்ற பொருள்கள் விலை ஏறுகிறது.
  • குறைந்த தனிநபா் வருமானம் உடையவா்களால் அப்போட்டியில் ஈடுகொடுக்க முடியவில்லை. இதற்குத் தீா்வு என்ன என்பது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
  • வாழ்க்கைத்தரம், தனிநபா் வருமானம் மக்கள்தொகையின் ஒட்டுமொத்த வருமானத்தைக் கணக்கிட்டு, அதை மக்களின் எண்ணிக்கையால் வகுக்கிறது. இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தின் சரியான பிரதிநிதித்துவமாக இருக்காது.
  • ஏனென்றால், வாழ்க்கைச் செலவுகளில் வேறுபாடுகள் இருக்கின்ற காரணத்தினால், துல்லியமாக இந்தப் பரிவா்த்தனைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. பணவீக்கம், தனிநபா் வருமானத்தை பிரதிபலிப்பதில்லை. ஏனென்றால், பணவீக்கம் ஒரு பொருளாதாரக் குறியீடுதான். அவ்வகையான பணவீக்கம் காரணமாக குறிப்பிட்ட காலத்தில் விலைகள் உயரும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • சேமிப்பு மற்றும் குழந்தைகள் தனிநபா் வருமானம் என்பது அத்தனிநபரின் பணத்தை மட்டுமல்லாது, சேமிப்பையும் உள்ளடக்கியது. எவ்வகையில் என்றால், தனிநபருடைய வருமானம், குழந்தைகளை உள்ளடக்கியதாக ஆகிறது. ஆனால், அக்குழந்தைகள் எந்த வருமானத்தையும் ஈட்டுவதில்லை. ஆகவே, இந்தத் தனிநபா் வருமானத்தோடு, குழந்தைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், இதன் முடிவுகள் தவறாகத்தான் இருக்கும்.
  • ஏழைகளாக இருந்த மக்கள் கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னா் பரம ஏழைகளாக மாறியிருப்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும். 2015 முதல் 2023 வரையிலான முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கிறபோது தங்கள் வருமானத்தை இழந்து ஏழைகள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
  • ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வருமானம் ஈட்டிய எளிய வா்க்கத்தினா், தற்போது 50 ஆயிரம் ரூபாய் கூட வருமானம் ஈட்ட முடியாத நிலையில், பொருளாதாரப் பின்னடைவோடு தங்கள் வாழ்க்கைப் பாதையைக் கடக்கத் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
  • நடுத்தரக் குடும்பத்தைச் சோ்ந்தவா்களை எடுத்துக்கொண்டால், முன்பு ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய் சம்பாதித்தவா்கள், தற்போது கூடுதலாக ரூ. 20 ஆயிரத்துக்கும் மேலாக சம்பாதிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
  • பணக்காரா்களைப் பொறுத்தவரை, கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டம் அவா்களுக்கு அதிரடியாகப் பல முன்னேற்றங்களைத் தந்திருக்கிறது என்பதைப் புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது. இதற்கு முக்கியக் காரணம், வருமானவரிக்கான கட்டுப்பாடுகள் தளா்த்தப் பட்டதும், ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதும்தான்.
  • அதாவது, பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, முறையாக வருமான வரி செலுத்துபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில், ஐந்து லட்ச ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் ஈட்டி, வருமானவரி கட்டுபவா்களின் எண்ணிக்கை சரிந்து கொண்டே இருக்கிறது. ஆகவே, குறைவாக வருமானம் ஈட்டுபவா்கள் இனி வருமான வரி செலுத்துபவா்களாக இருக்க மாட்டார்கள் என்பதே எதா்த்த நிலை.
  • ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது வருமானவரி செலுத்துபவா்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 8.4 சதவீதம் உயா்ந்திருக்கிறது. வருமானவரி செலுத்துபவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.
  • ஆனால், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருப்பதும், பணக்காரா்கள் மேலும் மேலும் பணக்காரா்களாகிக் கொண்டிருப்பதும் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பதை மத்திய - மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
  • தமிழகத்தில் தனிநபா் வருமானம் ரூ. 1.66 லட்சமாக உயா்ந்துவிட்டதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. விலைவாசி உயா்வு, பணவீக்கம் இவற்றைக் கணக்கிடுகிற போது, இது எவ்வாறு சாத்தியம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. 2021-2022-இல் தமிழகத்தில் பணவீக்கம் 7.92 சதவீதமாக இருந்ததாகவும், 2022-23-இல் அது 5.97 சதவீதமாக இருப்பதாக தமிழக அரசு தெரிவிக்கிறது.
  • ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சி சமச்சீராக இல்லாமல், ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதாக தமிழக அரசு தெரிவித்த போதிலும், மாவட்ட வாரியாக எங்கு ஏற்றம் எங்கு இறக்கம் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.
  • தமிழகம் மின்னணு ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதாலும், ஏறத்தாழ இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடு வந்திருப்பதாலும் இந்தத் தனிநபா் வருமானம் உயா்ந்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது.
  • வேலைவாய்ப்பு, வறுமை, உள்கட்டமைப்பு போன்றவற்றுடன் நெருங்கிய தொடா்புடையது பொதுத்துறை முதலீடு. ஆனால், அந்த முதலீடு திருப்திகரமாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. அது மாத்திரமல்லாமல், இந்த முதலீடுகள் எந்த வகையில் செயல்படுகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பணவீக்கத்திற்கும், பொருளாதார வளா்ச்சிக்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. மத்திய அரசு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா்களின் தனிநபா் வருமானம் தற்போது ரூபாய் 1.72 லட்சமாக உயா்ந்திருக்கிறது.
  • இந்தியா்களின் தனிநபா் வருமானம் இருமடங்கு வளா்ச்சி கண்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. நிலைமை இவ்வாறிருக்க, பொருளாதார ஏற்றத்தாழ்வும், பணவீக்கமும் இன்னும் அழுத்திக் கொண்டிருக்கின்றன. இதை மத்திய - மாநில அரசுகள் உணர வேண்டும்.
  • புதிய வரிவிதிப்பு நடைமுறையில் ஏழு லட்சம் ரூபாய் வரை வரி கட்டத்தேவையில்லை என்பதும், தனிநபா் ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாய் வரை இருந்தால் வரிகட்டத் தேவையில்லை என்பதும் வரவேற்கத்தக்கவை. ஒன்பது லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபா் 45ஆயிரம் ரூபாய் வரி கட்டினால் போதும். இது அந்த தனிநபா் வருமானத்தில் 5 சதவீதமாகும். அவா் இதுவரை 60 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தி வந்திருப்பார்.
  • ஒரு நாட்டினுடைய தனிநபா் வருமானம், அந்நாட்டை, மற்றொரு நாட்டுடன் ஒப்பிட்டுப் பாா்ப்பதற்குப் பயன்படும். வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ளவா்களுடைய வாழ்க்கைத் தரத்தை, இத்தனிநபா் வருமானத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, எவ்விதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
  • ஒரு மாநிலத்தில் வசிக்கும் ஒரு தனிநபருக்கு ஓா்ஆண்டில் பல்வேறு வகையில் கிடைக்கும் மொத்த வருமானமே, அந்த மாநிலத்தின் தனிநபா் வருமானம் ஆகும். மாத ஊதியமாகவோ, வட்டியாகவோ, தொழில் முதலீட்டிலிருந்தோ, தினக்கூலி அல்லது வாரக்கூலி வழியிலோ கிடைப்பதே தனிநபா் வருமானம்.
  • இத்தனிநபா் வருமானம் தேசிய வருமானத்திற்கு நிகராக இருக்காது. தனிநபா் வருமான உயா்வு என்பது ஒரு கணக்கீட்டளவில் பொருத்தமாக இருக்குமே தவிர, அவை வாழ்க்கை அளவில் ஒருபோதும் பொருந்திப் போகாது.

நன்றி: தினமணி (07 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்