- பிரிட்டீஷாரின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை இணைக்கும் ஒரு காரணியாகவே ரயில்வே உருவாக்கப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு மக்களை இணைக்கும் சாதனமாகவே இது விளங்கி வருகிறது. எத்தனை போக்குவரத்துகள் வந்தாலும் ரயில்வே போக்குவரத்தே வசதிக்கும், நம்பிக்கைக்கும், மகிழ்ச்சிக்கும் உரியதாக இருந்து வருகிறது.
- ரயில்வே, பயணத்துக்கு மட்டுமல்ல, சரக்குப் போக்குவரத்திற்கும் பெரிதும் பயன்படுகிறது.
- தேசிய ஒருமைப்பாட்டுக்கும், சமுதாய மேம்பாட்டிற்கும் இது ஒரு கருவியாகும். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை உடைத்து, சாதி மத வேறுபாடுகளைத் தகர்த்து நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு வழிகாட்டியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
- ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து உள்ளன. ஏழை, எளிய மக்கள் சிறு தொழில் மற்றும் வணிகம் செய்து பிழைப்பதற்கு வசதியாக இருக்கிறது.
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், அலுவலகங்களுக்கு நெடுந்தொலைவு செல்பவர்களுக்கும் பயணக் கட்டணச் சலுகைகள் இங்கேதான் உண்டு. வயது முதிர்ந்தவர்களும், நோயாளிகளும், மாற்றுத் திறனாளிகளும் இதனையே நம்பியுள்ளனர்.
- இப்படிப்பட்ட ரயில்வே துறையைக் கட்டிக் காக்க வேண்டிய அரசாங்கம், அதனைத் தனியாருக்குத் தாரை வார்த்திடத் துடிக்கிறது. இது எங்கு போய் முடியுமோ என்ற கவலை மக்களுக்கு வந்து விட்டது. மக்கள் நலம் நாடும் அரசு என்று கூறிக்கொள்ளும் மத்திய அரசு இதுபற்றிக் கவலைப்படவில்லை.
ரயில்வே துறையில் தனியார்
- மத்திய அரசு, ரயில்வே துறையில் தனியார் நிறுவங்களை அனுமதிக்க ஏற்கெனவே முடிவு செய்துவிட்டது.
- இதன் ஒரு பகுதியாக பயணிகள் ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- இதன்படி நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 தனியார் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.
- இதற்காக ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் கடந்த ஜூன் முதல் தேதி வெளியிட்டது.
- இது 35 ஆண்டுகள் ரயில்கள் இயக்குவதற்கான ஏலம். இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும். பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாரை அனுமதிக்கும் ரயில்வே அமைச்சகத்தின் முதல் திட்டமாகும் இது.
- 109 வழித்தடங்களும் 12 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 14 ரயில்கள் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- அவற்றில் 12 ரயில்கள் (இரு மார்க்கமாக சேர்த்து மொத்தம் 24 ரயில்கள்) தெற்கு ரயில்வேயின் சென்னைத் தொகுப்பின்கீழ் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னைத் தொகுப்பில் சென்னை - மதுரை, சென்னை-கோவை, சென்னை - திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் தினமும் ரயில்கள் இடம் பெற்றுள்ளன.
- முன் மொழியப்பட்ட தனியார் ரயில்களின் தற்காலிக அட்டவணையை ரயில்வே வாரியம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
- குறைந்த பராமரிப்பு தேவைப்படும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, சரக்குப் போக்குவரத்து நேரத்தைக் குறைப்பது, வேலை வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்குவது, மேம்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை வழங்குவது, பயணிகளுக்கு உலகத் தரமான பயண அனுபவத்தைத் தருதல் போன்றவைதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்று ரயில்வே வாரியம் தெரிவிக்கிறது.
- பிரிட்டனும், ஜப்பானும் தங்கள் ரயில்வே அமைப்புகளை பகுதியளவில் அல்லாமல் முழுமையாகவே தனியாருக்கு விட்டுவிட்டன.
- என்றாலும், பெரும்பாலான நாடுகள் ரயில்வே துறையை பொதுத் துறையாகவே வைத்துக் கொண்டுள்ளன.
வேலை நடந்து கொண்டிருக்கிறது
- இந்தியாவில் ஒப்பந்தம் செய்து கொள்வது மூலம் தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்யும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
- இரண்டு கட்டமாக இது நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்புடைய நிறுவனங்களின் பொருளாதார வசதியைப் பொருத்து இறுதி செய்யப்படும்; உறுதி செய்யப்படும். ஒட்டுமொத்த வருமானம் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தங்கள் அமையும்.
- ரயில்வே பெட்டிகளை வாங்கி 16 பெட்டிகளை ஒன்றாக இணைப்பதும், அவை இயங்கக் கூடிய 10 பெரிய ரயில்வே நிலையங்களில் அவற்றைப் பராமரிப்பதுமே முதன்மையான பணியாகும்.
- ஏற்கெனவே இருக்கும் பணிமனைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும். என்றாலும் நடைமுறையில் பெரிய சிக்கலை ஏற்படுத்தவே செய்யும்.
- போதுமான வசதிகள் இல்லாத இடங்களில் தனியார் நிறுவனங்கள் அத்தகைய வசதிகளை உருவாக்க பண முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதற்கு ரூ.30 ஆயிரம் கோடி வரை செலவாகும். ஒவ்வொரு நிலையத்திலும் செய்யப்படும் முதலீடுகள் ரூ. 2,300 முதல் ரூ.3,500 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ரயில்வே வாரியத்தால் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தனியாரால் பராமரிக்கப்படும் அந்த ரயில்களில் ரயில்வே பணியாளர்களே பணிபுரிவார்கள்.
- ரயில்வேக்குச் சொந்தமான மற்றக் கட்டமைப்புகளைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். இவ்வாறு முதலீட்டாளர்களின் பொறுப்பு என்பது கொள்முதலுடனும், பராமரிப்புடனும் முடிந்து போய் விடுகிறது.
- ரயில்களை சரியாக இயக்குவது, அவற்றை முறையாகப் பாதுகாப்பது, ஒவ்வொரு நாளும் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது இவையெல்லாம் ரயில்வே துறையைச் சார்ந்த பொறுப்புகள்.
- விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டால் யார் அதற்குப் பொறுப்பு ஏற்பது? ஏனென்றால் பெட்டிகள் தனியாருக்குச் சொந்தமானவை. ஆனால், ரயில்களை இயக்குவது ரயில்வே துறையல்லவா? இதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தீர்வு காண வேண்டிய பிரச்னைகளும் உள்ளன.
வருத்தத்துக்கு உரியது
- இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரயில் பெட்டிகள் 20 ஆண்டுகள் பழமையானவை. அவை நிச்சயமாக உலகத் தரத்தில் இருக்க வாய்ப்பில்லை.
- அண்மைக்காலமாக ரயில் பெட்டிகள் வடிவமைப்பில் உலக அளவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்பங்களை ஏற்று ரயில்வே தன் தயாரிப்பின் வழிமுறைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
- ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க வேண்டும். அதற்கேற்றாற் போல கட்டுமானங்களையும் புதுப்பித்து, வலுப்படுத்திட வேண்டும்.
- இந்நிலையில், நாடு முழுவதும் தனியார் ரயில்களின் பெட்டிகள் பராமரிப்புக்காக பணிமனைகளைத் தயார் செய்யும் நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.
- இதன்படி சென்னை தொகுப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் தனியார் ரயில்களுக்காக சென்னையில் தனியாக பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- தனியார் ரயில் பராமரிப்பிற்காக ஒரு பணிமனையை அமைப்பது தனியார் நிறுவனத்தின் பொறுப்பாக இருந்தாலும், அதற்கான இடத்தை மண்டல ரயில்வேதான் வழங்க வேண்டும்.
- எனவே இது தொடர்பாக ஓர் அறிக்கையை ரயில்வே மண்டல தலைமையகம் வரும் ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் ஆணையிட்டது.
- மேலும், ரயில்கள் ஒவ்வொரு ஏழாயிரம் கிலோ மீட்டர் தொலைவு ஓடிய பின்னர், அவற்றை முறையாக சுத்தம் செய்யவும் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்வதற்காகவும் ரயில்வே பெட்டி பராமரிப்புப் பணிமனைகளில் சுத்தப்படுத்தும் பாதைகளில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த ரயில்களின் நேரங்களுக்கு ஏற்ப நிலையங்களுக்கு வந்து செல்வது, இடங்களை ஒதுக்குவது தொடர்பாக அடையாளம் காண ரயில்வே மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நம் நாட்டில், மும்பை, தில்லி, ஹவுரா, சண்டீகர், பாட்னா, பிரயாக் ராஜ், ஜெய்ப்பூர், செகந்திராபாத், பெங்களூர் உள்பட 11 இடங்கள் தனியார் ரயில்களுக்கு பெட்டிகளின் பராமரிப்பு பணிமனை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- அங்கெல்லாம் அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- இவ்வாறு ரயில்வேயில் தனியாரைப் புகுத்தும் போக்கில் காணப்படும் சில வழிமுறைகள் விசித்திரமானவை. பயணிகளுக்கான கட்டணத்தைத் தீர்மானிப்பதில் ரயில்வே துறைக்கோ, அரசுக்கோ தொடர்பு இல்லை என்கிற செய்தி பயணிகளைத் திடுக்கிட வைக்கிறது.
- இதை அரசும் அதிகாரிகளும் எப்படி ஒப்புக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை. கட்டணம் தீர்மானிப்பதில் தனியார் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளது.
- பேருந்தை ஒப்பிடும்போது ரயிலில் கட்டணம் குறைவு என்பதே பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதற்கு முக்கியக் காரணம்.
- தனியாரால் ரயில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டால் என்ன செய்வது? ரயிலில் மட்டுமே செல்லக்கூடிய பகுதிகளில் இருப்பவர்களின் நிலை என்ன? இவற்றையெல்லாம் அரசு கருத்தில் கொள்ள வேண்டாமா? ரயில் கட்டணங்கள் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டால் மக்கள் ரயில்வேயிலிருந்து விலகுவதற்கு அது காரணமாகி விடும் என்று அஞ்சப்படுகிறது.
- அத்துடன் ரயில்வே துறையில் நியாயமாக செய்யப்பட வேண்டிய செலவினங்களைக் குறைப்பதிலும் தனியார் நிறுவனம் முன்னணியில் நிற்கும்.
- இதன் முதல் கட்டமாக வேலைவாய்ப்புகள் குறைக்கப்படும். இத்தனை காலம் இதனை நம்பி வாழ்ந்து வரும் நிரந்தரத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும்.
- அவர்கள் குடும்பத்துக்கு வேறு வருவாய் இல்லாத நிலையில் அவர்களின் குடும்பத்தின் கதி என்ன?
- ரயில்வே என்பது நமது தேசத்துக்குச் சொந்தமான மாபெரும் நிறுவனமாக இருக்கிறது. இனியும் அப்படியே இருக்கும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு அது நெருக்கமாக உறவாடுகிறது.
- அது அவர்களின் வசதியையும், தேவையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ரயில்வே என்பது மிகப்பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது. ஆகவே அவர்களின் நல்வாழ்வு பற்றி அது அக்கறை கொள்ள வேண்டும்.
- மனித உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் குருதியைக் கொண்டு செல்லும் நாடி நரம்புகளைப் போல நாட்டின், வடகோடியிலிருந்து தென்கோடி வரை மக்களை இந்த ரயில்வே ஒன்று சேர்க்கிறது. அதனைத் தனியாருக்கு விற்பனை செய்வது குருதி ஓட்டத்தையே சிதைப்பது போன்றதாகும்.
- இதுவரை மக்களின் சொத்தாக இருந்து வந்த ரயில்வே தனியாருக்கு உரிமையாக்கப்படுவது வருத்தத்துக்கு உரியதுதான். இந்திய ரயில்வே என்பது, பயணிகளையும், சரக்குகளையும் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் வெறும் போக்குவரத்து அமைப்பு மட்டுமல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை வாழும் மக்களை அன்றாடம் இணைக்கும் மிக நீண்ட சங்கிலியாகும்.
நன்றி: தினமணி (16-09-2020)