- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்துவந்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்றதும் அக்கொள்கையை நிராகரித்து, தமிழ்நாட்டுக்கான தனித்துவமிக்க கல்விக் கொள்கையை உருவாக்கும் என்று அறிவித்தது.
- இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, இந்த ஆண்டு இறுதிக்குள் அரசிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இக்குழு, முதல் கட்டமாகக் கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் எனப் பல தரப்பினரிடமிருந்து கருத்துக்கள், ஆலோசனைகளைப் பெற்றுவருகிறது; மின்னஞ்சல், அஞ்சல் மூலம் கருத்துக்களை அனுப்ப அக்டோபர் 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் கல்விக் கொள்கையில் முரண்படுவதற்கும் நிராகரிப்பதற்கும் பல அம்சங்கள் உள்ளன. கல்வியில் தனியார்மயத்தை முழுமையாக ஊக்குவிப்பதுடன், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கின்ற குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளையும் அது தளர்த்த நினைக்கிறது.
- தமிழ்நாட்டு உயர் கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்களே எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ளன. உயர் கல்வியில் தனியார்மயத்தை அனுமதித்ததன் விளைவாக ஒட்டுமொத்தச் சமூகத்திலும் அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் எதிர்மறையான தாக்கங்கள் ஏராளம்.
- இதன் காரணமாகத் தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற குரல்களும் தொடர்ச்சியாக எழுகின்றன. எனவே, தமிழக அரசு இவற்றைக் கணக்கில்கொண்டு தீர்வு காணும் வகையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடம் எழுந்துள்ளது.
தமிழக உயர் கல்வியும் தனியார் துறையும்
- தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள் உட்பட மொத்தம் உள்ள 2,610 கல்லூரிகளில் 2,002 சுயநிதிக் கல்லூரிகளும் 251 அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் உள்ளன. கடந்த ஆண்டு நிலவரப்படி, இக்கல்லூரிகளில் மொத்தமாக 22,75,290 மாணவர்கள் பயில்கின்றனர். இதில் சுயநிதிக் கல்லூரிகளில் 13,29,622 மாணவர்களும் உதவிபெறும் தனியார் கல்லூரிகளில் 4,82,160 மாணவர்களும் பயில்கின்றனர்.
- தமிழக உயர் கல்வித் துறையில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்கைத் தெளிவாக எடுத்துக்காட்டும் இந்தப் புள்ளிவிவரங்களின்படி 80%-க்கும் மேலான மாணவர்கள் தனியார் கல்லூரிகளில்தான் படிக்கின்றனர். கல்வியின் முக்கியப் பங்காளர்களான ஆசிரியர்களும் மாணவர்களும் இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்களில் சந்திக்கும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம்.
- தமிழக தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்றும் பலர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி, தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இல்லாமல் பெரும்பாலான கல்லூரிகள் செயல்படுவதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
- இக்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நவீன அடிமைகளைப் போல் நடத்தப்படுவது அறியப்பட்ட ஒன்றுதான். முனைவர் பட்டம் பெற்றும் ரூபாய் எட்டாயிரத்திற்கும் குறைவாகஊதியம் பெறும் நிலையே உள்ளது. சில பொறியியல் கல்லூரிகளில் 3, 6 மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கும் நிலை உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றிப் பணியிலிருந்து நீக்கப்படலாம் என்கிற அபாயத்துடன் பணிபுரிகின்றனர்.
சமூக இழுக்கு
- அலுவலகப் பணிகளைப்பார்க்க ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்படுவது, இக்கல்வி நிறுவனங்களில் இயல்பான ஒன்றாகும். அனுமதிக்கப்பட்ட 12 நாள் சாதாரண விடுப்பைக்கூட எடுக்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர் என்பதுதான் எதார்த்தம். இவற்றைப் பற்றிப் பேசுவதற்கான குறைந்தபட்ச ஜனநாயகக் கூறுகள்கூட, இந்தக் கல்வி நிறுவனங்களில் இல்லை.
- தனியார் கல்லூரிகளில் உதவிபெறும் பிரிவில் பணிபுரியும் சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மட்டுமே பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவை கிடைக்கின்றன. ஆனால், அதைப் பெறுவதற்கும் பல லட்சங்கள் செலவிட வேண்டியிருக்கிறது. இதனால், தமிழகத்தின் தனித்துவமாகப் பார்க்கப்படும் சமூக நீதி பாதிக்கப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- ஆசிரியர்களின் இந்த நிலை, மேம்பட்ட சமூகத்துக்கு இழுக்கு. இப்படியொரு மிக மோசமான பணிச்சூழலில் ஒருவரிடம் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்; இந்தச் சூழலில் ஆசிரியர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் தொடர்ந்து தங்களைப் புதுப்பித்துக்கொள்வதற்கும் எப்படி முனைவார்கள்? உயர் கல்வித் துறையில் பெரும்பான்மையான மாணவர்கள் பயில்கின்ற தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள இந்தப் பிரச்சினைகள், தமிழகத்தின் கல்வித் தரத்தைப் பெரிதும் பாதித்து, உயர் கல்வியையே ஆட்டம் காணச் செய்துவிடும்.
- இந்த அபாயத்தை அரசு உணர வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் கல்வியில் நாம் முன்னேற முடியாது என்பதைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு உருவாக்கும் கல்விக் கொள்கையானது, தனியார் கல்வி நிறுவனங்களை உரிய வகையில் ஒழுங்குபடுத்தும் நோக்கில் அமைவது அவசியமான ஒன்றாகும்.
தீர்வு என்ன?
- கல்லூரிக் கல்வி இயக்குநரகமும் அதன் மண்டல அலுவலகங்களும் தமிழகத்திலுள்ள 908 கலை, அறிவியல் கல்லூரி, 620 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் கண்காணிப்பு அமைப்புகளாகும். ஆனால், இவை தங்கள் பணியைச் சரிவரச் செய்யாததன் விளைவால் அரசு வகுத்துள்ள விதிகளை மீறி மாணவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுதும், மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் இருப்பதும் நடக்கின்றன.
- பாதிக்கப்படும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் பாதிப்புக்குள்ளாகும்போது இந்த அலுவலகங்களைத்தான் நாட வேண்டியுள்ளது; ஆனால், அவற்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றன. எனவே, நம்முடைய கண்காணிப்பு அமைப்புகளின் குறைபாடுகளைக் களைந்து உடனடியாக மேம்படுத்த வேண்டும். கல்லூரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்த அலுவலங்களின் எண்ணிக்கையும் அதன் பணியாளர்களும் அதிகரிக்கபட வேண்டும்.
- தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு உதவிபெறும் பிரிவில் பணிரியும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களைத் தவிர்த்து, 2.5 லட்சம் பேருக்கு எவ்விதப் பணிப் பாதுகாப்பும் இல்லை. எனவே, தமிழ்நாடு தனியார் கல்வி ஒழுங்காற்றுச் சட்டம்-1976 சுயநிதிப் பிரிவு, சுயநிதிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் வகையில் சில மாற்றங்களை உடனடியாகச் செய்ய வேண்டியது அவசியம்.
- மேலும், தற்காலிக ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிப்பதை விடுத்து நிரந்தரப் பணியாளர்களை மட்டுமே அரசு நியமிக்க வேண்டும். பணிப் பாதுகாப்பு இல்லாமல் பல ஆயிரம் பேர் அரசு கௌரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும்போது, தனியார் கல்வி நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் முயற்சி நகைப்புக்குரியதாக அமையும் என்பதை உணர்ந்து அரசு இந்தத் தற்காலிகப் பணி முறையை உடனடியாகக் கைவிட வேண்டும்.
ஊதியம் நியாயமா?
- ஒரே வேலைக்கு இரண்டு விதமான ஊதியம் வழங்குவது அநீதியாகும். எனவே, அரசு-அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும் நிரந்தர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு இணையாக சுயநிதிக் கல்லூரி, பிரிவுகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அது அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தில் 70%ஆவது இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- இத்துடன் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிரந்தரப் பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்பு, சமூகப் பாதுகாப்பு போன்ற அனைத்தும் சுயநிதிக் கல்லூரி, பிரிவுகளில் பணிபுரியும் அனைவருக்கும் எந்தத் தடையுமின்றி கிடைக்கச் செய்வது அவசியமாகும்.
- இறுதியாக, தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்-மாணவர் சங்கங்கள் செயல்படுவதில் பெரும் தடை உள்ளது. இத்தகைய தடைகளைக் களைந்து கல்வி நிலையங்களில் ஜனநாயக மாண்புகளை மலரச் செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் கல்விக் கொள்கை முழுமையான தனியார்மயத்தை ஊக்குவிப்பதுடன் இருக்கின்ற குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த நினைக்கிறது. புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்று நினைக்கிற மாநில அரசு, தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்பதை இக்குழு கவனத்தில் கொள்ளவேண்டும்.
நன்றி: தி இந்து (06 – 09 – 2022)