TNPSC Thervupettagam

தனியார் பள்ளிகளின் அலட்சியம் அகலுமா?

January 7 , 2025 3 days 26 0

தனியார் பள்ளிகளின் அலட்சியம் அகலுமா?

  • விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி மாணவி, கழிவுநீர்த்தொட்டிக்குள் விழுந்து இறந்த சம்பவம், தனியார் பள்ளிகளை அரசு நெறிப்படுத்தியே ஆக வேண்டும் என்கிற கருத்தை வலுப்படுத்தியிருக்கிறது. ஜனவரி 3இல் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த நான்கு வயதுச் சிறுமியான லியா லட்சுமி, அங்குள்ள கழிவுநீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.
  • இவ்விஷயத்தில் அலட்சியமாக இருந்ததாக ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் நிர்வாகத்தினரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளனர். கழிவுநீர்த் தொட்டிக்கான மூடி துருப்பிடித்த நிலையில் இருந்ததையும் தொட்டி சரியாக மூடப்படாமல் இருந்ததையும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அப்பள்ளியின் தாளாளர், முதல்வர், வகுப்பு ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்நிலையில், மாணவர்கள் இப்படிப் பலியாவது தொடர்கதையாக நீடிக்கும் போக்கு எப்போது முடிவுக்கு வரும் என்னும் கேள்வி எழுந்திருக்கிறது. 94 குழந்தைகளின் உயிர்களைப் பலிகொண்ட 2004ஆம் ஆண்டு கும்பகோணம் கிருஷ்ணா தொடக்கப் பள்ளி தீவிபத்து, கல்வி நிறுவனங்களில் மாணவர்களது பாதுகாப்பு குறித்து நாட்டுக்கே பெரும் படிப்பினையை வழங்கியது.
  • இதுகுறித்து விசாரித்த நீதியரசர் கே.சம்பத் தலைமையிலான குழு, அரசியல் செல்வாக்குடன் விளங்கிய அப்பள்ளியின் நிறுவனர் விதிமுறைகளைச் சிறிதும் மதிக்காமல் தன்னுடைய மூன்று பள்ளிகளையும் நடத்திவந்தார் என்றும் கல்வித் துறை, நகராட்சி, வருவாய்த் துறை ஆகிய மூன்று துறை அதிகாரிகளும் தங்கள் கடமையைச் செய்யத் தவறினர் என்றும் தனது அறிக்கையில் தெளிவாகக் கூறியது. அதன் பின்னர் நிகழும் விபத்துகளுக்கும் சம்பத் அறிக்கையின் பல அம்சங்கள் பொருந்துவதாகவே உள்ளன.
  • தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி, 2012இல் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியே சாலையில் விழுந்ததில், அந்தப் பேருந்தின் பின்சக்கரத்தில் அடிபட்டு உயிரிழந்தார். அந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்படக் குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் 2023இல் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். தங்கள் மகள் இறந்ததற்கு யார்தான் காரணம் என்கிற ஸ்ருதியின் பெற்றோரின் கேள்விக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.
  • பள்ளி மாணவர்கள் உயிரிழக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் பலரது கூட்டு அலட்சியம் முக்கியக் காரணமாக உள்ளது. ஒவ்வொரு துயரத்தின்போதும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தனிப்பட்ட நிர்வாகங்களை நோக்கியதாக மட்டுமல்லாமல், அதற்கான ஒட்டுமொத்தச் சூழலையும் மாற்றுவதாக இருப்பதுதான் முதன்மையானது. ஆசிரியர்கள் மீது சுமத்தப்படும் அளவுகடந்த பணிச்சுமைகூட இத்தகைய நிகழ்வுகளின் பின்புலத்தில் இருக்கக்கூடும்.
  • அரசுப் பள்ளிகளுக்குச் சமூகப் பொறுப்புக்கான பங்களிப்பாகத் தனியார் பள்ளிகள் உதவி செய்ய முன்வரும் அளவுக்கு அவற்றின் நிலை மேம்பட்டுள்ளது. அரசின் ஆதரவையும் பெற்றோரின் நம்பிக்கையையும் பெற்றுள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பொறுப்பை மறந்துவிடக் கூடாது. அப்படி மறக்கும் பள்ளி நிர்வாகங்கள் மீது அரசு எடுக்கும் உறுதியான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட துயரங்கள் நிகழ்வதை நிச்சயம் தவிர்க்கும். கல்வி மக்களின் அடிப்படை உரிமை; அதைப் பாதுகாப்புடன் பயில்வதையும் அந்த உரிமை உள்ளடக்கியுள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்