TNPSC Thervupettagam

தனியார் மருத்துவமனைகளும் அரசு கண்காணிப்பில் இருக்கட்டும்

May 11 , 2021 1355 days 582 0
  • தனியார் மருத்துவமனைகளின் கரோனா சிகிச்சைக் கட்டணங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தெரிவித்துள்ள அதிருப்தியானது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
  • தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுகிறதா, அரசு அறிவுறுத்தியபடி தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளில் பாதி கரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
  • சிகிச்சைக் கட்டணங்கள் மட்டுமின்றி, உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்கப் படுவதையும் தமிழக அரசு தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது உடனடி அவசியம்.
  • தமிழக அரசு ஜூன் 2020-ல் அறிவித்ததன்படி, தனியார் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரையில் மட்டுமே கட்டணம் விதிக்கப்பட வேண்டும்.
  • அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் நாளொன்றுக்கு அதிகபட்சக் கட்டணம் ரூ.7,500. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் நடைமுறையில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கும் இந்த வரைமுறைக்கும் சம்பந்தமே இல்லை.
  • மேலும், சென்னைக்கு வெளியே உள்ள பல நகரங்களில் லேசான பாதிப்புகளுடன் வருபவர்களை உள்நோயாளிகளாகச் சேர்த்துப் பல ஆயிரங்களைக் கறப்பதும், நோய்த் தீவிரம் அதிகமானோரை அரசு மருத்துவமனைகள் பக்கம் தள்ளிவிடுவதுமான ஒரு வழக்கமும் உருவாகிவருகிறது.
  • இத்தகு சூழலில், ‘முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்கப்படும்’ என்ற தமிழக அரசு நல்லெண்ணத்தின் அடிப்படையிலான இந்த அறிவிப்பு தனியார் மருத்துவமனைகளின் வேட்டைக்கான துருப்புச்சீட்டு ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதற்குத் தனியார் மருத்துவமனைகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதுடன் சுகாதாரத் துறையின் மூலம் அவற்றின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டும்.
  • உயிர் காக்கும் மருந்துகள் விநியோகமும் விலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
  • முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், உயிர் காக்கும் மருந்துகளைக் கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டுசேர்க்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டும்.
  • கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்துகள் விற்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய ஐந்து மையங்களில் ரெம்டெசிவர் மருந்துகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மக்களின் அலைக்கழிப்பை நிச்சயம் குறைக்கக்கூடும்.
  • மேலதிகம் ஒரு முக்கியமான விஷயம், தீவிர சிகிச்சை தேவைப்படுவர்கள் நீங்கலான 95% கரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சையில் சித்தா முதல் அக்குபஞ்சர் வரையிலான சகல மாற்று மருத்துவமுறைகளையும் முயல முழு உத்வேகம் அளிக்க வேண்டும்.
  • இப்படி ஒரு முயற்சி அனுமதிக்கப்படும்போது நோயாளிகளை அணுகுவது தொடர்பில் பொதுவான சில வரையறைகளையும் வகுத்திட வேண்டும்.
  • கரோனா தொடர்பில் நாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள எந்த இடத்திலிருந்தும் நமக்கு ஒரு பிடி கிடைக்கலாம்; அதற்கான வாய்ப்புகளைக் கதவடைத்துவிடக் கூடாது. அதே சமயம், எல்லாவற்றையும் அரசு கண்காணித்திடவும் வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்