TNPSC Thervupettagam

தனுஷ்கா நம் குழந்தை இல்லையா

July 4 , 2023 511 days 314 0
  • ஒரு குழந்தையின் சடலத்தைக் கையில் ஏந்தியபடி கண்ணீர் மல்க மலைப் பாதையில் பெற்றோர் நடந்து செல்லும் புகைப்படமானது, பார்த்த மாத்திரத்தில் எவரையும் நிலை குலைக்கக் கூடியது. தனுஷ்காவின் மரணத்தை எளிதாகக் கடக்க முடியவில்லை. மண்டையைக் குடைந்துகொண்டே இருக்கிறது அது.
  • வேலூர் மாவட்டம், அல்லேரிமலைப் பகுதியின் அத்திமரத்துக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி விஜி - ப்ரியா. இவர்களுடைய ஒன்றரை வயதுக் குழந்தை தனுஷ்கா. குழந்தையைப் பாம்பு கடித்திருக்கிறது; சாலை வசதி இல்லாததால், குழந்தையைத் தூக்கிக்கொண்டு மலைப் பாதையில் நடந்தே மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கே குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டாலும், முழு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்பு இல்லை. பக்கத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். அங்கே குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து போகிறது. இறந்த குழந்தையை வீட்டுக்குக் கொண்டுசேர்க்க மறுநாள் ஆம்புலன்ஸ் வண்டி செல்கிறது. ஒருகட்டத்துக்கு மேல் வண்டி செல்லும் பாதை இல்லை. அப்படியே பாதி வழியில் சடலத்தை இறக்கிப் பெற்றோர் கைகளில் கொடுத்துவிட்டுச் செல்கிறது ஆம்புலன்ஸ். வெயிலில் மலைப் பாதையில் குழந்தையின் சடலத்தை உறவினர்கள் ஏந்தியபடி நடக்கும் படம்தான் பேசுபொருள் ஆனது. ஒருநாள் பேச்சு. அதோடு அடுத்த விஷயம் நோக்கிப் பலரும் நகர்ந்துவிட்டார்கள். நம்மால் அப்படி நகர முடியவில்லை.
  • பொதுவாக இத்தகைய செய்திகளை உத்தர பிரதேசம் அல்லது பிஹாரில் நடந்ததாக நாம் அடிக்கடிப் பார்ப்போம். தமிழ்நாட்டிலும் இப்படியா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக உத்தர பிரதேசம், பிஹார் அளவுக்குத் தமிழ்நாடு மோசம் இல்லை; ஆயினும், எல்லா வகையிலும் மேம்பட்ட ஒரு கட்டமைப்பைச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் தமிழ்நாட்டில் கொடுத்திருக்கிறோம் என்று எவரேனும் கருதினால், அது சுயஏமாற்று.
  • தன்னுடைய செயல்பாட்டை ஒரு சமூகம் மதிப்பிட்டுக்கொள்வதற்குச் சிறந்த உரைகல், எளியோரிலும் எளியோருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலைக் கொடுத்திருக்கிறோம் என்று பார்ப்பதுதான் என்பார் காந்தி. இந்தியாவில் பழங்குடிகளும் அவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளும்தான் நம்முடைய ஆட்சியாளர்களை மதிப்பிட துல்லியமான உரைகல். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
  • எனக்கு ஒரு பழக்கம் உண்டு. இது காந்தியிடமிருந்து கற்றது என்றும்கூட சொல்லலாம். தமிழ்நாட்டைக் குறுக்கும் நெடுக்குமாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பயணித்து வருவேன். அதுபோல, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாக ஒருமுறை பயணித்து வருவேன். வருஷத்தில் சில நாட்களையேனும் பழங்குடி கிராமங்களில் செலவிடுவேன். முடிந்தால், ஓரிரவேனும் அங்கு தங்குவேன்.
  • இப்படிச் செல்லும்போது மக்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள், எதுபற்றி கவலை கொள்கிறார்கள், அவர்களுடைய அரசியல் அபிலாஷைகள் என்ன என்று கேட்பேன். நாட்டைப் புரிந்துகொள்வதற்கும், என்னுடைய சிந்தனையைச் சீரமைத்துக்கொள்வதற்கும் இது அத்தியாவசியமான ஒரு பயிற்சி என்று எண்ணுகிறேன். அப்படி ஒவ்வொரு முறை பழங்குடி கிராமங்களுக்குச் செல்லும்போதும் நான் ஒரு விஷயத்தை ஆழமாக உணர்கிறேன். ஆள்வது யாராக இருந்தாலும், பழங்குடி மக்களும் அவர்களுடைய வாழ்க்கைப்பாடும் நம்முடைய பொதுச் சமூகத்தின் கற்பனைக்குள்ளேயே இல்லை!
  • சென்ற மாதத்தில், தாண்டிக்குடி வனப் பகுதிக்குச் சென்றிருந்தேன். திண்டுக்கல் மாவட்டத்தில், இருக்கிறது இது. பண்ணைக்காடு வழியாகச் செல்ல வேண்டும். அங்கே கடுகுதடி என்று சிறு பழங்குடி கிராமம். பளியர் சமூகத்தினர் வசிக்கிறார்கள். சற்றேறத்தாழ நூறு குடும்பத்தினர் இருக்கிறார்கள். அவ்வளவு வறுமை. வீடு என்றே அதைக் கூற முடியாது. பத்துக்குப் பத்து தடுப்புகள். அதற்குள் மூன்று திருமணமான பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகளுடன் வசிக்கும் மூத்த தம்பதியைச் சந்தித்தேன். “அறை அளவுக்குத்தான் ஒவ்வொருவர் வீடும். ஆறேழு பேர் வரை தங்கியிருக்கிறார்கள். நூறு சதுரடிக்குள்தான் எல்லா வாழ்க்கையும்” என்று சொன்னார் அங்கிருந்த பெரியவர் மூத்தன்.
  • கடுகுதடிக்கு மேல் தாண்டிக்குடி நோக்கிச் செல்லச் செல்ல சாலை மிகவும் மோசமாகிறது. “எப்பம் வண்டி பழுதுபட்டு நிக்குமோ, எங்கே மலையிலேர்ந்து பெரும் பள்ளத்துல கவிழுமோன்னு பயந்துக்கிட்டேதான் வண்டி ஓட்டணும். தாண்டிக்குடி முருகன் கோயில் ரொம்ப பிரசித்தம். வெளியிலேர்ந்து வேண்டுதல் நிறைவேத்திக்க நிறையப் பேர் கார்ல வருவாங்க. அப்படியிருக்கிற இந்தப் பாதையே இந்த லட்சணத்துல இருக்குன்னா, சுத்தியுள்ள மத்த பாதைகளோட லட்சணம் எப்படி இருக்கும் பாருங்க!” என்றபடி பாரதூரமாக இறங்கி ஏறும் ஜீப்பை ஓட்டினார் ஓட்டுநர். மறுநாள் அஞ்சுவீடு பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள கிராமங்கள் நோக்கிப் பயணப்பட்டபோதும் மோசமான சாலைகளினூடாகவே பயணிக்க வேண்டியிருந்தது.
  • என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? சமவெளியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நம்மைப் போன்றவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டால், ஒரு பெரிய பட்டியலையே நீட்டுவோம். பழங்குடிகள் திரும்பத் திரும்பக் கேட்பவை மூன்றே விஷயங்கள்தான். “வனத்தில் வாழ்பவர்கள் நாங்கள். நாங்கள் பழங்குடிகள்தான் என்பதை உறுதிப்படுத்தும் சாதிச் சான்றிதழும், வாழும் இடத்துக்குப் பட்டாவும் வேண்டும். எங்கள் பகுதிக்குப் பேருந்தும், அது வந்து செல்ல சாலையும் வேண்டும். வனத்துக்குள் சென்று தேன் உள்ளிட்ட சிறுபொருள்கள் சேகரிக்க சுதந்திரமான அனுமதியும், அப்படி எடுத்துவரும் பொருட்களைச் சந்தைப்படுத்த போன்ற ஒரு விநியோக அமைப்பும் வேண்டும்.”
  • கூர்ந்து யோசித்தால், இவை எதுவுமே அரசிடம் அவர்கள் உதவியாகக் கேட்கக் கூடியவை இல்லை என்பதும், இந்தத் தேவைகளுமேகூட வனத்தில் அவர்களுடைய இயல்பான வாழ்க்கையைக் குலைத்ததால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அன்றாடப்பாடு நெருக்கடிகள் என்பதும் புரியவரும். இவற்றை ஓர் அரசால் செய்ய முடியாதா?
  • தாண்டிக்குடி ஊராட்சியின் கடுகுதடி வட்ட உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதி சித்ரா. மிகவும் பரிதாபகரமான குரலில் பேசினார், “மன்றக் கூட்டத்துல என்ன பேசினாலும், ‘செஞ்சிடலாம்!’னு சொல்வாங்கண்ணா. எதுவுமே நடக்காது. அடுத்தடுத்து பிள்ளைகள் எவ்வளவோ சிரமப்பட்டுப் படிக்கிறாங்க. இந்த வீட்டுக்குள்ளத்தான் உட்கார்ந்து படிக்கணும்; வன விலங்குகள் நடமாட்டத்துக்கு மத்தியில, அஞ்சி நடந்துதான் பள்ளிக்கூடம் போகணும்னாலும் உழைக்கிறாங்க. இந்த முறை பத்தாம் வகுப்புத் தேர்வுல எங்க குடியிருப்புல ஒரு பையன் எண்பது சதவீதம் மதிப்பெண் வாங்கியிருக்கான். பிளஸ் டூ முடிச்சுட்டு இன்னொரு பிள்ளை ஃபேஷன் டெக்னாலஜி படிக்கணும்னு சொல்லுது. ஆனா, அடுத்தகட்டம் நோக்கி எங்களால யாரையும் வெளியே அனுப்பவே முடியலை.”
  • சித்த மருந்தாகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மூலிகைகள் பழங்குடி வழியாகவே வனங்களில் சேகரிக்கப்பட்டு பெறப்படுகிறது. ஆனால், எதற்குமே சரியான விலை இல்லை. “கடுக்காயை எடுத்துக்குங்க; அதுக்குன்னு பெரிய சந்தை இருக்கு. ஆனா, வெளியில நூறு ரூபாய்க்கு விக்கிறதை எங்ககிட்ட பத்து ரூபாய்க்குத்தான் எடுக்கிறாங்க. அதைக் காட்டுக்குள்ள போய் எடுக்குறதுக்குள்ள வனத் துறை அதிகாரிகள் படுத்துற பாடு பெரும் பாடு. காடு எங்களோடது, ஆனா வெளியிலேர்ந்து இங்கே வர்றவங்க திருடங்களைப் போல எங்களை நடத்துறாங்க. நீ பழங்குடிக்கிறதுக்கு என்ன சாட்சியம்னு என்கிட்ட கேட்டார் ஒரு அதிகாரி. கழுத்துல லைசென்ஸா வாங்கி மாட்டிக்கிட்டு காட்டுக்குள்ள போக முடியும்?” என்று கேட்டார் இளைஞர் ராமராஜன்.
  • பல செய்திகளை இன்றைக்கு ஊடகங்கள் தலைகீழாகச் சித்திரிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள செம்மனாரை கிராமத்து மக்கள் புதிய பேருந்து தொடக்க நிகழ்ச்சியை வாத்தியங்கள் முழங்க நடனமாடி கொண்டாடிய செய்தி ஏதோ அரசின் சாதனையை மக்கள் கொண்டாடுவது போன்ற தொனியில் ஊடகங்களில் வெளியானதை இங்கே குறிப்பிடலாம்.
  • மக்கள் கொண்டாட்டம் என்னவோ உண்மை. ஆனால், அது அவர்களுடைய ஐம்பதாண்டு போராட்டத்தின் வெற்றியின் வெளிப்பாடு. நகரத்தின் எல்லா வசதிகளிலிருந்தும் வெகுதொலைவுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளனர் இங்குள்ள பழங்குடி மக்கள். விசேஷம் என்றாலும் சரி; அவசரவுதவி என்றாலும் சரி; ஜீப்பைத்தான் கூப்பிட வேண்டும். ஒருவர் தனிப்பட்ட வகையில் ஜீப்பை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மலையில் ஏறி இறங்க இரண்டாயிரம் ரூபாய் வரை ஆகும்.
  • கோத்தகிரி - செம்மனாரை இடையே ஒரு பழைய பேருந்தைக் கொண்டு பேருந்து சேவையை அரசு ஆரம்பித்திருக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை இந்தப் பேருந்து சேவை இயங்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது. கொணவக்கரை ஊராட்சிக்குட்பட்ட ஏழுக்கும் மேற்பட்ட கிராமங்களை இது இணைக்கும். ஒரு பேருந்து இயக்கம் எப்படி மக்களுடைய கொண்டாடத்துக்கு உரியதாகிறது; எனில், பேருந்து சேவை என்பதே இன்னும் அடைய முடியாத கனவாக எத்தனை கிராமங்களுக்கு இருக்கும்; ஏன் பழங்குடி கிராமங்களில் மட்டும் இந்நிலை என்று ஊடகங்கள் யோசிக்க வேண்டும்.
  • அல்லேரிமலை தனுஷ்கா விஷயத்தையே எடுத்துக்கொண்டால், “பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் சாலை அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் சிரமமானவை” என்று அரசு அதிகாரிகள் கூறும் காரணம் எல்லாம் அற்பச் சாக்குகள்தான். வனங்களுக்குள் எத்தனை பெருங்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டிருகின்றன? அரசு சார்பிலும், பெருநிறுவனங்கள் சார்பிலும் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெருங்கட்டுமானங்களுக்கான அனுமதிகள் எல்லாம் எப்படி அளிக்கப்படுகின்றன? ஜனநாயகத்தில் ஓட்டு எண்ணிக்கைப் பலமற்றவர்கள் பழங்குடிகள் என்பதும், நம் சமூகத்தில் சமத்துவம் என்பது அடிப்படைத் தார்மிகத்திலேயே இல்லாதது என்பதுமே அலட்சியத்துக்கான காரணங்கள்.
  • இன்றைக்கும் தமிழ்நாட்டில் பல பழங்குடி கிராமங்களில், குதிரைகள் முக்கியமான போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. குதிரைகள் இல்லாத இடங்களில் எல்லாம் மனிதர்களே எல்லாவற்றையும் சுமக்கிறார்கள். ஜவ்வாது மலையில், பச்சமலையில், கல்வராயன்மலையில் என்று ஒவ்வொரு மலைப் பகுதியிலும் குறிப்பிட்ட பகுதி வரைதான் சாலை வசதி இருக்கிறது. அதிலும் பேருந்துகள் செல்லும் இடம் குறைவு. ஆரம்ப சுகாதார நிலையங்கள் உண்டு. ஆனால், சிறு தேவைகளைத் தாண்டி சிகிச்சைகள் அவர்கள் தொட முடியாத தொலைவிலேயே உள்ளன. பள்ளிக்கூடங்கள் உண்டு. ஆனால், ஆசிரியர்களின் அலட்சியமும் திறனற்ற நிர்வாகமுமே பெரும்பாலும் அவற்றின் அடையாளங்கள்.
  • தமிழ்நாட்டில் ஏனைய சமூகங்களை ஒப்பிட மிகச் சொற்ப எண்ணிக்கையிலானவர்கள் பழங்குடிகள். ஏன் அவர்கள் அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் வனத்திலோ, வனத்தை ஒட்டிய பகுதியிலோ குடியிருப்புகளை உறுதிபடுத்துவதைத் தமிழக அரசு ஓர் உறுதியான இலக்காகக் கொண்டு செயல்படக் கூடாது? ஏன் கடைசிப் பழங்குடி கிராமத்துக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பஸ் அல்லது ஜீப் சேவை சென்றடையும் எனும் சூழலை உருவாக்கக் கூடாது? ஏன் ‘ஆவின்’ போன்ற ஒரு கூட்டுறவுச் சந்தை அமைப்பைப் பழங்குடிகளுக்கு என்று பிரத்யேகமாக ஆரம்பிக்கக் கூடாது?
  • தனுஷ்கா நம்முடைய குழந்தை என்றால், நாம் இப்படித்தானே சிந்திக்க வேண்டும்!

நன்றி: அருஞ்சொல் (04 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்