- மகாபாரதத்தில் பீஷ்மர், திருதராஷ்டிரன், சுபலன், சகுனி ஆகிய நான்கு ஆண்களே காந்தாரியின் வாழ்க்கையைத் திசை மாற்றியவர்கள்; அவளது கனவுகளைச் சிதைத்தவர்கள். “நான் குருடன் என்ற செய்தியை உனக்குத் தெரியாமல் மறைத்து, உன்னை ஏமாற்றி இங்கு கொண்டுவந்து திருமணம் செய்துகொண்டேன். உன்னுடைய பிறந்த வீட்டினரும் நாங்களும் உனக்குக் கோடிகோடியாகக் குற்றம் இழைத்துவிட்டோம். ஆனால் காந்தாரி, நீயும்கூட அதற்குக் கோடிகோடியாகப் பதிலுக்குச் செய்துவிட்டாய். இன்னும்கூட நடந்துவிட்டதற்காக மன்னிப்பது இயலாதா என்ன?” என்று வாழ்வின் இறுதித் தருணத்தில் காந்தாரியிடம் திருதராஷ்டிரன் கேட்கிறார். காந்தாரி எதற்காகக் கண்களைக் கட்டிக்கொண்டார் என்பது புனைவுத் தன்மைக்குரிய கேள்வி. இந்தத் தொன்மத்தைத்தான் ஜா.தீபா ‘திரை’ என்ற சிறுகதையாக எழுதியிருக்கிறார்.
- காந்தாரி கண்ணைக் கட்டிக்கொண்டதற்குப் பின்புள்ள சமூக உளவியலை ‘திரை’ தீவிரமாக ஆராய்கிறது. காந்தாரிக்கு இருட்டு என்றால் பயம் என்பதைக் குறியீடாக முதலிலேயே புனைவு சொல்லிவிடுகிறது. திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்ற குறையைப் போக்குவதற்காக அவனைப் பற்றி மிகையான பெருமைகளை காந்தாரிக்குச் சொல்கிறான் சகுனி. திருதராஷ்டிரன் பற்றிய கற்பனையை மனதிற்குள் வளர்த்துக்கொள்கிறாள் காந்தாரி. அவன் பார்வையற்றவன் என்ற செய்தியை அஸ்தினாபுரத்திற்குச் சென்ற பிறகுதான் காந்தாரி தெரிந்துகொள்கிறாள். சகுனியின் மூலமாகச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் குறித்த மிகைச் சித்திரம் காந்தாரிக்குள் உடைந்து நொறுங்குகிறது. ஆனாலும், அவளால் ஒன்றும் செய்வதற்குஇல்லை. தன்னை வருத்திக்கொள்ள மட்டும்தான் இயலும் என்கிற முடிவுக்கு வருகிறார். திருதராஷ்டிரன் காந்தாரியின் இச்செயலால் புளகாங்கிதம் அடைகிறார். தன் துயரத்தைப் புரிந்துகொண்ட மனைவி கிடைத்துவிட்டார் என்று மகிழ்கிறார்.
- காந்தாரி கண்ணைக் கட்டிக்கொள்ளும்போது சகுனி உடனிருக்கிறார். ‘இதைத் தியாகமாக நினைக்கிறாயா காந்தாரி?’ என்று கேட்கிறார். இதற்கு காந்தாரி சொல்லும் பதில் புனைவில் முக்கியமானது. “இல்லை அண்ணா, இது ஒரு வைராக்கியம். சிறு வயதிலிருந்தே இருட்டைப் பார்த்து அச்சப்படுபவளாக இருந்திருக்கிறேன். எது நமது பலவீனமோ அதற்குத்தான் சோதனை வரும் என்று நீதானே சொல்லுவாய். நான் அதை எதிர்கொள்ளப் போகிறேன். என்னுடைய இந்தச் செயலை குரு வம்சமோ, காந்தாரமோ எதிர்பார்த்திருக்காது. உயிருடன் இருக்கும்போதே என்னை நான் பொசுக்கிக்கொண்டே இருப்பேன். என்னைப் பார்க்குந்தோறும் மண்ணாசையினாலும் கௌரவத்திற்காகவும் எதையும் செய்யத் துணியும் கோழைகளுக்கு உறுத்த வேண்டும்” என்கிறார்.
- இது யாரை நோக்கிக் கூறப்பட்டது என்பதில் தெளிவில்லை. மண்ணாசை கொள்வது மன்னர்களின் பொது இயல்பு. காந்தாரி வாழ்க்கைப்பட்ட குடும்பத்தில் இனிமேல்தான் இதெல்லாம் நடக்கவிருக்கிறது. சகுனியை நோக்கிக் கூறப்பட்டதா என்பதும் காந்தாரிக்குத்தான் தெரியும். புனைவில் சில இடங்களில் கால முரண்கள் உள்ளன. திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் திருமணம் நடந்த பிறகே பாண்டுவுடன் குந்திக்குத் திருமணம் நடைபெறுகிறது. புனைவின் தொடக்கத்தில், “அங்கு நீ மட்டும் இளவரசி அல்ல. குந்தி போஜனின் மகளும் இருக்கிறாள். பாண்டுவின் மனைவி என்பதால் அவளுக்கும் அங்கு அதிக உரிமைகள் இருக்கும்” என்று காந்தாரியிடம் சகுனி அறிவுரை கூறுவதாக ஜா.தீபா எழுதியிருக்கிறார்.
- காந்தாரியின் கதாபாத்திரத்தைப் பெண்ணிய நோக்கில் ஜா.தீபா அணுகியிருக்கிறார். பண்டைச் சமூகத்தின் அடிப்படைக் குணங்களுடன் காந்தாரியின் கதாபாத்திரத்தைப் பொருத்தியிருக்கிறார். “எனது கண்கள் என்னால் மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள் அனைவராலும் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டிருக்கும். உங்கள் கைகளின் வழியே எனது கண்கள் கட்டப்படுவதை நான் எப்படி ஒத்துக்கொள்வேன்?” என்று திருதராஷ்டிரனிடம் கூறுகிறார் காந்தாரி.
- புனைவின் இந்தப் பகுதிதான் ஜா.தீபாவால் நவீனப்படுத்தப்பட்டுஇருக்கிறது. ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையும் உள்ளடக்கித்தான் ‘உங்கள் அனைவராலும்’ என்கிறார் காந்தாரி. இந்தப் பார்வை முக்கியமானது. இதற்குப் பின்னால் ஆயிரமாயிரம் குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகள் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். காந்தாரியின் சகோதரிகள் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
- காந்தாரி, நூறு குழந்தைகளைப் பெறுவதற்கான வரம் பெற்றவர் என்பதை அறிந்தே திருதராஷ்டிரனுக்கு அவரை மணம் முடிக்க பீஷ்மர் முடிவுசெய்கிறார். சிவபெருமான் கொடுத்த வரமே காந்தாரிக்குச் சாபமாகவும் அமைந்துவிடுகிறது. முதல் குழந்தையாகப் பிறந்த துரியோதனன், அடுத்துப் பிறந்த தொண்ணூற்று ஒன்பது குழந்தைகளின் அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறான். துர்சகுனத்துடன் துரியன் பிறந்தபோதே விதுரன் எச்சரிக்கிறான். காந்தாரியின் பிள்ளைப் பாசம், துரியனை அப்போது காப்பாற்றிவிடுகிறது. அதுவே தன் வம்சத்தை ஒன்றுமில்லாமலும் செய்துவிடுகிறது. இதெல்லாம் காந்தாரிக்கு மிகத் தாமதமாகத்தான் புரிகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2024)