TNPSC Thervupettagam

தன்பாலின ஈர்ப்பாளர் திருமணம்: திறந்த மனதுடன் பரிசீலிக்கப்பட வேண்டும்

March 31 , 2023 486 days 264 0
  • தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கான அங்கீகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருந்த அனைத்து மனுக்களையும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, கடந்த ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
  • இதற்கு எதிர்வினையாக மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இடையிலான திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக விழுமியங்களிலும் பல்வேறு மதங்களின் தனிச் சட்டங்களுக்கு இடையிலான சமநிலையிலும் பெரும் சேதத்தை விளைவித்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தக்கூடியதும், சட்டம்-அரசமைப்பு தொடர்பான முக்கியமான கேள்விகளை உள்ளடக்கியதுமான இந்த விவகாரத்தை அரசமைப்பு அமர்வின் விசாரணைக்கு உட்படுத்துவதே சரியானது என்கிற முடிவை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது. இது தொடர்பான விசாரணை ஏப்ரல் 18 அன்று தொடங்கவிருக்கிறது.
  • 2018இல் நவ்தேஜ் சிங் ஜோஹர் வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘18 வயதைக் கடந்த தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இடையிலான பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு குற்றம் அல்ல’ என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களது பாலின ஈர்ப்பை மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
  • ஆனால், பிற உரிமைகளைப் பெறுவதற்கு அவர்கள் நீண்ட போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. திருமணம் செய்துகொண்டோ செய்துகொள்ளாமலோ இணைந்து வாழ்தல் என்பது காதல் உறவின் இயற்கையான நீட்சி. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திருமணம் செய்துகொண்ட இணையர்களுக்குக் கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கிக்கொள்வது தொடங்கி குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்வது.
  • சொத்தில் பங்கு கோருவது வரையிலான பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தன்பாலின இணையர்களுக்கிடையிலான திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால் அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பெரும்பாலான தனிச் சட்டங்கள் மதங்கள், சாதிகளைக் கடந்த திருமணங்களையும் அங்கீகரிப்பதில்லை.
  • அதுபோன்ற திருமணங்கள் சிறப்புத் திருமணச் சட்டம் 1954இன் கீழ் பதிவுசெய்யப்படுகின்றன. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களையும் அதன் கீழ் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்கள் மீறப்படும்போது சமூக அமைதி சீர்குலையும் என்கிற மத்திய அரசின் கவலையைப் புறந்தள்ளிவிட முடியாது.
  • அதே நேரம் சாதி, மதம், இனம், பாலினம் ஆகியவை சார்ந்த பாகுபாடுகளைக் களைவதைப் போலவே பாலின ஈர்ப்பு, பாலியல் தெரிவு ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைய வேண்டியதும் அரசின் கடமைதான். இதை உணர்ந்து தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான தனது முடிவை மத்திய அரசு மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த சமூகத்தின் மனநிலையும் மாற வேண்டும்.

நன்றி: தி இந்து (31 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்