TNPSC Thervupettagam

தன்வினை தன்னைச் சுடும்!

August 16 , 2019 1969 days 962 0
  • ஜம்மு-காஷ்மீரத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அகற்றியிருப்பதற்கு எதிராக, அந்த மாநிலத்தவர்களை விடவும் அதிகமாகக் கவலைப்படுவது பாகிஸ்தான்தான். இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி, மதவாத சக்திகளை மேலும் தூண்டிவிடும் அனைத்து முயற்சிகளையும் பாகிஸ்தான் முடுக்கிவிட்டிருக்கிறது.
உறவுகள்
  • பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிஸாரியா திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்திருக்கிறது. தில்லிக்கும், பாகிஸ்தானிலுள்ள லாகூருக்கும் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டிருக்கிறது. 
  • இவையெல்லாம் போதாதென்று, பாகிஸ்தான் சார்பில் தில்லிக்கு தூதரை அனுப்புவதில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜீய உறவுகளைத் தவிர்ப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறது பாகிஸ்தானின் தலைமை. பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ஆம் தேதியைக் காஷ்மீரின் ஒருமைப்பாட்டு தினமாகவும், இன்றைய இந்திய சுதந்திர தினத்தைக் கருப்பு தினமாகவும் அனுஷ்டிக்கிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் முடிவு
  • இந்த முடிவுகளை எல்லாம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தேசிய பாதுகாப்புக் குழு எடுத்திருக்கிறது. பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூடிய பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் அவரது அமைச்சரவை சகாக்கள் மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் நிஜமான ஆட்சியாளர்களான  ராணுவத்தின் சார்பில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவும், ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபயஸ் ஹமீதும் கலந்து கொண்டார்கள்.
  • காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா அகற்றியது பற்றியும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியிருப்பது குறித்தும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக் குழு நீண்ட நேரம் விவாதித்திருக்கிறது.
  • அந்த விவாதத்தின்போது, ஒன்றன் பின் ஒன்றாகப் பல புல்வாமா முறைத் தாக்குதல்களை நடத்தி, இந்தியாவுடன் போர் மூளும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
  • எதார்த்த நிலைமை தெரியாமலும், தனது செயல்பாடுகளால் பாகிஸ்தானின் சர்வதேச மரியாதை மேலும் குலையும் என்பது புரியாமலும் பிரதமர் இம்ரான் கானும்  அவரது சகாக்களும் இருக்கிறார்கள் என்பதைத்தான் அவசர முடிவுகளும், திட்டமிடல்களும் வெளிப்படுத்துகின்றன.
அமெரிக்காவின் நிலைப்பாடு
  • ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டேகஸ் ஐயம் திரிபறத் தெரிவித்திருக்கிறார். உலகின் பெரும்பாலான நாடுகள், ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையாகக் கருதுவதால்தான் எந்தவிதக் கருத்தோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் மெளனம் காக்கின்றன. இதைக்கூடப் புரிந்து கொள்ளாமல், இந்தப் பிரச்னையை ஐ.நா.வின்  பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச்  செல்லப் போவதாக பாகிஸ்தான் கூறியிருக்கிறது.
  • தன் வசமுள்ள காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜித்-பல்திஸ்தானை சீனாவின் கட்டுப்பாட்டில் விட்டிருக்கிறது பாகிஸ்தான். அந்தப் பகுதியில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சீனத் துருப்புகள் முகாமிட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான், ஜம்மு-காஷ்மீர் சீரமைப்பைக் குற்றம்கூற முற்பட்டிருக்கிறது பாகிஸ்தான்.
  • ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அகற்றுவதும், அந்த மாநிலத்தை நிர்வாக ரீதியாகப் பிரிப்பதும், இந்தியாவின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. சர்வதேச அளவிலோ, இரு நாடுகள் தரப்பிலோ எந்தவிதக் கலந்தாலோசனையும் இல்லாமல், இந்தியாவிடமிருந்து கைப்பற்றிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு  பகுதியை 1963-இல் சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுத்திருக்கும் பாகிஸ்தானுக்கு, இந்தியாவின்  இப்போதைய முடிவு குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் தகுதியோ, உரிமையோ கிடையாது.
  • ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அகற்றி, மாநிலத்தைப் பிரிப்பது என்ற முடிவைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவுக்கு விஜயம் செய்தது புத்திசாலித்தனமான ராஜதந்திரம். இந்த ஆண்டு கடைசியில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய இருக்கும் சீன அதிபர் ஷி  ஜின்பிங்கின் பயண ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதுடன், ஜம்மு-காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதும் அவரது பயணத்தின் நோக்கம்.
  • லடாக்கைத் தனது எல்லைக்கு உள்பட்ட பகுதியாக கருதும் நிலையில், இந்தியா அந்தப் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்திருப்பதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சீன விஜயத்தின்போது இந்தப் பிரச்னையும் விவாதிக்கப்பட்டது.
உள்நாட்டுப் பிரச்சினை 
  • அது ஷின்ஜியாங் ஆனாலும், ஹாங்காங் ஆனாலும் இந்தியா எப்படி சீனாவின் உள்நாட்டுப் பிரச்னைகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதில்லையோ, அதுபோல சீனாவும் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடக் கூடாது என்று சீனாவை அமைச்சர் ஜெய்சங்கர்  கேட்டுக் கொண்டிருக்கிறார். காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை ஆதரிப்பது என்பது பயங்கரவாதத்தை ஆதரிப்பது என்பதும், அதன் விளைவுகள் இந்தியாவை மட்டுமல்லாமல் தங்களையும் பாதிக்கும் என்பதும் சீனாவுக்குத் தெரியாமல் இருக்காது.

நன்றி: தினமணி(16-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்