தப்பிதங்களால்தான் தமிழருக்குப் பெருமையா?
- தமிழர்களுக்கு மத்தியில் பல்வேறு தப்பிதங்கள் பரப்பப்பட்டுள்ளன. அவற்றைப் பரப்பியவர்கள் சாமானியர்கள் அல்லர். சகலமும் கற்ற புலவர்கள்.
- ஒருவரைப் பற்றி பெருமையாகப் பேசுவது, சிறுமையாகப் பேசுவது என்கிற இரண்டையும்விட உண்மையாகப் பேசுவதுதான் உயர்வானது. அதனால்தான் உயர்வானவை எல்லாம் உண்மையானவையாக உள்ளன.
- கற்றறிந்த புலவர்களில் உச்சிமீது வைத்து மெச்சத்தக்க புலவர் இளங்கோ அடிகள். அவர் படைத்த சிலப்பதிகார காப்பியத்தில் மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவனைப் பற்றிய செய்திகள் சிந்திக்கத்தக்கனவாக உள்ளன.
- செங்குட்டுவன், இளங்கோ அடிகளின் தமையன். சேரநாட்டு மன்னன். மனைவி அரசி வேண்மாவுடன் மலைவளம் காணச் சென்றபோது மலைவாழ் மக்கள் சிலர் அரசனிடமும், அரசியிடமும் தாங்கள் பார்த்து அதிசயித்த காட்சி ஒன்றைக் கூறுகிறார்கள். வானத்திலிருந்து தேரொன்றில் ஓர் ஆடவன் தங்கள் பகுதியில் இறங்கியதாகவும் பின்னர், அங்கு தலைவிரி கோலமாக நின்ற பெண்ணொருத்தியை அத்தேரில் ஏற்றிக்கொண்டு மீண்டும் வானத்தில் பறந்து போனதாகவும் கூறினர்.
- அப்பெண் மதுரையை எரித்துவிட்டு வந்த கண்ணகி என்றும், தேரில் வந்து அழைத்துச் சென்றவன் மதுரையில் பழிகூறப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்ட கோவலன் என்றும் சேர அரசனும், அரசியும் அறிகின்றார்கள். மதுரையில் நடந்த இக்கொலை சம்பவத்தையும், மதுரை எரிக்கப்பட்டதையும் நேரில் கண்ட சாத்தனார் என்கிற புலவர், இதனை இளங்கோ அடிகளுக்குக் கூறி, இதனைக் காவியமாகப் படைக்குமாறு வேண்டியதாகத் தகவல்.
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது;
அடிகள் நீரே அருளுக...
- என்றார் சாத்தனார்.
- இளங்கோ அடிகளும் அவ்வாறு எழுதிய படைப்புத்தான் சிலப்பதிகாரம் என்கிற சோகக் காப்பியம். புகார்க் காண்டம், மதுரைக் காண்டத்திற்குப் பிறகு வஞ்சிக் காண்டத்தில்தான் இந்த வானூர்தி வந்துசென்ற சம்பவம் நிகழ்கிறது.
- செய்தியறிந்த சேரன் செங்குட்டுவனின் மனைவி அரசி வேண்மா, கண்ணகிக்குக் கோயில் எழுப்பி வழிபட வேண்டுமென்ற தமது ஆசையை வெளிப்படுத்தினார். அதனால் அக்கோயில் சிலைக்கு இமயத்திலிருந்து பாறையை எடுத்துவந்து செய்துவைக்க விரும்பினான் சேரன்.
- இமயத்துக்குச் சென்று அப்பாறையை எடுத்துவர படையைத் தயார்படுத்துகிறார். இமயமலைச் சாரலில் ஆட்சி செய்துவந்த இரு அரசர்கள் கனகர் - விசயர் என்பார் தமிழ் மூவேந்தர்களை இழிவாகப் பேசியதாகவும், அவர்களுக்குத் தக்க பாடம்புகட்ட வேண்டுமென்றும், அதற்காகவே இப்படையெடுப்பை நிகழ்த்த வேண்டுமென்றும் சேரன் தீர்மானித்தான்.
- அதன்படி, சேரனின் தளபதி வில்லவன் கோதை படை நடத்த இமயமலைச் சாரலில் உள்ள அரசர்களான கனகர் - விசயர் இருவரையும் தோற்கடித்து, அவர்களையும் இமயமலைக்கே கொண்டு சென்று அங்கு வெட்டி எடுக்கப்படும் பாறையை, அந்த இரண்டு அரசர்களின் தலைமீது வைத்து சுமக்குமாறு செய்து, அதனை வஞ்சி மாநகரத்துக்குக் கொண்டுவந்ததாகவும், அதில் செதுக்கப்பட்ட சிலைதான் கண்ணகி சிலை என்றும் செய்திகள் பதிவாகியுள்ளன.
- இப்போது நாம் சிந்திக்கத்தக்கதான இக்கருத்து தமிழ்நாட்டில் பரப்புரை செய்யப்பட்டுள்ளது. கொலையுண்ட கோவலன் வானூர்தியில் வந்திறங்கி தனியாக இருந்த கண்ணகியை அழைத்துச் சென்ற செய்திகூட, படைப்பாளியான மகாகவிஞன் புலவர் இளங்கோவின் மகத்தான கற்பனை என்று அதனை தமிழர்கள் கொண்டாடலாம். அல்லது உண்மையாகவே அது நிகழ்ந்திருக்கலாம் என்று அதை மிகை கற்பனை என நினைப்பதுகூடத் தவறல்ல. ஏனெனில், இது கவிஞனுக்கே உரிய ஓர் ஒப்பற்ற கலாசிருஷ்டி! இதில் குற்றம் கண்டுபிடிக்கத் தேவையில்லை.
- நமது பார்வை சேரன் இமயமலைச் சாரலிலுள்ள அரசர்களான கனகர் - விசயர் ஆகிய இருவரின் பெயர்களைக் குறித்துப் பேசப்பட்டுள்ளதால், அவர்களைப் பற்றிய பூர்வாங்கப் புலன் விசாரணையைச் செய்வதில் தவறில்லை. அந்த இரண்டு அரசர்களும் ஆட்சிபுரிந்த ராஜ்யங்களின் பெயர்கள் என்ன எனச் சொல்லப்படவில்லை. அவர்களைப் பற்றி வடநாட்டு இலக்கியங்களில் பேசப்பட்டுள்ளனவா என்றால், அதுவும் இல்லை.
- அப்படியென்றால், அந்த இரு அரசர்களும் யார்? அவர்கள் ஆட்சிபுரிந்த ராஜ்யங்கள் எவை? அவர்களைத் தோற்கடித்த பிறகு இமயமலைக்குக் கொண்டுபோய் அங்குள்ள பாறையை வெட்டியெடுத்து இந்த இருவரின் தலைமீது ஏற்றி சுமார் 2,000 கி.மீ. தொலைவிலுள்ள சேர நாட்டின் வஞ்சி மாநகர் வரை சுமந்துவரச் செய்தது சாத்தியமானதாகுமா?
- தொல்லியல் அறிஞர் பூங்குன்றன், அந்த இரு அரசர்களும் இமயமலைச் சாரலில் இல்லை எனவும், அவர்களின் ராஜ்யங்களைப் பற்றி வடநாட்டு நூல்கள் எதிலும் எந்தக் குறிப்பும் இல்லை எனவும் எழுதியுள்ளார்.
- இதுவரை இப்படிச் சொன்னவர் இவர் ஒருவரே என்கிறபோது, ஏன் ஏனைய தமிழ் அறிஞர்கள் மெüனமாகி விட்டார்கள்? அகழ்வாராய்ச்சிகளை ஆதிச்சநல்லூரிலும், கொடுமணலிலும் செய்திருக்கிறோம். கீழடியில் 3,000 ஆண்டு தொன்மையான நாகரிகத்துக்கு உரிய தமிழர்களின் பழைமையைக் கண்டறிந்ததில் ஆர்வம் காட்டிய நாம், இமயமலைச் சாரலில் கனகர் - விசயர் ஆட்சி செய்த நாடுகளைப் பற்றி இதுவரை ஓர் ஆராய்ச்சியும் செய்யவில்லையே ஏன்? ஆராய்ச்சியே செய்யாமல் அவர்கள் தலைமீது கல்லேற்றிக் கொண்டு வந்ததை தமிழ் மேடைகளில் நாம் முழக்கமிட்டுப் பேசி வருகிறோம்.
- அடுத்து, இமயமலையில் மூவேந்தர்கள் வடநாடுகளை வென்று தமது இலச்சினைகளான மீன் சின்னம், புலிச் சின்னம், வில் அம்புச் சின்னம் ஆகிய மூன்றையும் பதிந்துள்ளதாகவும் சிலப்பதிகாரத்தில் பதிவுகள் உள்ளன.
- அது உண்மையாக இருக்குமானால், இமயமலையில் அம்மூன்று சின்னங்களும் எங்கே வெட்டப்பட்டு பதிவாகியுள்ளன என்பதைப் பற்றி தமிழ் அறிஞர்கள் ஏதேனும் மேலதிகமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்களா? அவற்றைக் கண்டுபிடிக்குமாறு தமிழக அரசையும், மத்திய அரசையும் வேண்டி எவரேனும் கோரிக்கைகள் அனுப்பியுள்ளார்களா? அப்படி அனுப்பப்படவில்லை எனில், அச்செய்தி உண்மைச் செய்தி அல்லவென்று சொல்லாமல் சொல்கிறார்களா?
- இதேபோல, வஞ்சி மாநகரில் எழுப்பப்பட்ட கண்ணகியின் கற்கோயில் விழாவில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், இளங்கோ, சாத்தன் ஆகியோருடன் இலங்கை மன்னன் கஜபாகு என்பவரும் கலந்து கொண்டதாக செய்தி உள்ளது. மகாவம்சம் என்ற இலங்கையின் சரித்திர நூலில் அவனைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. அவன் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு அரசன் என்கிறது.
- சிலப்பதிகாரம் இன்றைக்கு 1800 ஆண்டுப் பழைமையானதுதான். இலங்கை மன்னன் கஜபாகு பற்றி இலங்கை இலக்கியங்களில் வேறு செய்திகள் உள்ளனவா? அவை எந்த இலக்கியம் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? இலங்கைத் தமிழறிஞர்களான ஆறுமுக நாவலரோ, க. சிவத்தம்பியோ, க. கைலாசபதியோ, பெரியவர் இலங்கை ஜெயராஜோ இதுபற்றி எதுவும் எழுதியுள்ளதாக இல்லை.
- சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டமே இளங்கோ அடிகள் எழுதியது அல்ல என்றும், அது பிற்காலச் சேர்க்கை என்றும் இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறியதாகவும் கருத்தோட்டங்கள் உள்ளன. பொதுவெளியில் சாமானிய வாசகர்களாகிய பலருக்கு அது பற்றிய ஆய்வு அவசியமில்லை.
- தமிழர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்பதற்காக கனகர் - விசயர் பற்றிய செய்திகள் பேசப்பட்டுள்ளன என்று இருக்குமாயின், அவை குறித்த உண்மைகளை ஆய்வு செய்வது மிகவும் அவசியமில்லையா?
- லண்டன் மாநகரில் உள்ள கல்லறையில் ஜி.யு. போப் ஐயர், தன்னை "தமிழ் மாணவன்' என எழுதி வைத்துள்ள செய்தியைப் பல ஆண்டுகளாக உண்மை என்று தமிழ்நாட்டு மேடைகளில் பேச்சாளர்கள் பலரும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல; ஜி.யு.போப் ஐயரின் கல்லறையில் இவ்வாறு எழுதப்படவில்லை என்பதே உண்மை. இந்தச் செய்தியை யார் வேண்டுமானாலும் சோதனை செய்து பார்க்கலாமே.
- தமிழ் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி எனப் பெருமையாகப் பேசுகிறோம். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய இனம்' தமிழ் இனம் என்று நமது இலக்கியத்திலிருந்துதான் சான்று தருகிறோமே தவிர, பிற மொழி இலக்கியத்தில் இது பேசப்பட்டுள்ளதென சான்று ஏதேனும் இருக்குமாயின் தமிழர்களுக்கு அதுதானே மெய்யான மேன்மை?
- ரஷிய இலக்கியவாதியான லியோ டால்ஸ்டாய் காந்திஜிக்கு எழுதிய கடிதமொன்றில் காந்திஜியின் முதல் கொள்கையான அகிம்சையை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் எழுதியுள்ளதாகவும் அக்குறள்தான்,
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்
- என்பதாகக் குறிப்பிட்டும் எழுதியுள்ளார். இதுதானே தமிழின் மெய்யான பெருமை. இதுவரை திருக்குறள் 43 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- தமிழ் மொழியை மட்டுமல்ல, உலக மொழிகள் பலவற்றையும் பற்றி ஆய்வு செய்த நோவம் சாம்ஸ்கி என்கிற மொழியியல் அறிஞர், உலக மொழிகளிலேயே தமிழ்மொழியின் கட்டமைப்புத்தான் ஈராயிரம் ஆண்டுகளாக மாறாமல் உள்ளதென்றும், இதுபோல இன்னொரு மொழி "ஸ்வாஹிலி' என்கிற ஆப்பிரிக்க மொழி என்றும் கூறியுள்ளதுதானே தமிழுக்குப் பெருமை?
- மெய்யான பெருமைகளைப் பேசி, தற்பெருமையான தப்பிதங்களைப் பேசாமல், ஒதுக்கி விடுவதுதானே நமக்கு அடக்கமும் அழகுமாகும்?
நன்றி: தினமணி (19 – 09 – 2024)