- இந்தியா முழுவதும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.
- தற்போது தேசிய பொது முடக்கம் வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பிலிருந்து மீண்டுவர நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில சலுகைகளை அறிவித்துள்ளார்.
அறிவிக்கப்பட்ட சலுகைகள்
- உத்தரவாதம் இல்லாத கடனாக சிறு தொழிலுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்படும் என்றும், அது மட்டுமின்றி சிரமப்படும் சிறு தொழிலுக்கு ரூ.20,000 கோடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்தக் கடன் வசதி வரவேற்கத்தக்கது.
- குறிப்பாக, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இந்தக் கடனை விரைவில் கொடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். வங்கிகளில் கடன் வாங்காமல், வெளியில் கடன் வாங்கி தொழில் செய்யும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஏராளம். அவர்களுக்கும் உதவி கிடைக்கச் செய்ய வேண்டும்.
- நல்ல முறையில் செயல்பட்டுவரும் சிறு தொழில் நிறுவனங்களையும் பாதுகாப்பது அவசியம். அவர்களுக்கு வேண்டிய கடன் கிடைக்க வேண்டும். இதற்கெல்லாம் ரூ.3 லட்சம் கோடி போதுமா என்பது சந்தேகமே.
- இரண்டு மாதங்களாக தொழில் நடத்தவில்லை. இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்கு தொழில்கள் முழுமையாக இயங்க முடியாது. இந்த பழைய கடன், அதற்கான வட்டியே பெரும் சுமை. இந்த தவணை கட்டவே திண்டாடும் நிலையில் புதுக் கடன் பளுவைக் கூட்டிவிடும். எனவே, ஏற்கெனவே உள்ள மொத்தக் கடனுக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வட்டி விகிதத்தை 5% குறைத்துக் கொடுக்க வேண்டும்.
- சிரமப்படும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்தத் திட்டத்தை எவ்வாறு அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது கால ஓட்டத்தில்தான் தெரியும்.
- சிறு தொழில் நிறுவனங்களுக்கு அரசுத் துறை நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை அளிக்க "சுழல் நிதிஅமைப்போம்' என மத்திய சிறு தொழில் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். தற்போது மின் பகிர்மான நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி கடன் அளிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- இது உண்மையிலேயே மின் வாரியத்துக்கு பொருள்களை விற்பனை செய்யும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். ஆனால், இந்தத் தொகையை வேறு செலவுக்கு பயன்படுத்தக்கூடாது. சிறு தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அந்தத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- முதலீட்டை அதிகரிக்கவும் பங்குச் சந்தையில் சிறு தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யவும் உதவ ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது.
- சிறு தொழில்களுக்கான இலக்கண விதிகளில் பெரிய மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் இது தேவைதானா? உற்பத்தித் துறையும் சேவைத் துறையும் இணைக்கப்பட்டது சரியான செயல் அல்ல. உற்பத்தித் துறை, சேவைத் துறைகளின் கடன் தேவைகள், நடைமுறை மூலதனக் கடன் தேவைகள் மாறுபடும்.
- புது விதிகளின்படி நடுத்தர நிறுவனங்கள் மட்டுமல்ல, சில சிறு தொழில் நிறுவனங்கள்கூட பெருந்தொழில் நிறுவனங்கள் ஆகும். பெரிய, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறு தொழில்களாகச் சரியும்.
- இரும்பு மூலப் பொருள்களின் விலை ரூ.40/கிலோ, தாமிரம் போன்ற மூலப் பொருள்களின் விலை ரூ450/கிலோ என்று உள்ளது. எனவே, தாமிர உலோக தொழில் நிறுவனங்கள் பெரிய தொழில்கள் என்று வரையறுக்கப்படும் ஆபத்து உள்ளது.
- ஓராண்டில் விற்பனை அதிகரித்தால் பெரிய தொழில். அடுத்த ஆண்டு விற்பனை குறைந்தால் அதே நிறுவனம் சிறு தொழிலா? இது குறித்து தெளிவுபடுத்தினால் நல்லது. எனவே தீர ஆலோசித்து பிறகு முடிவு எடுப்பது நல்லது.
வருங்கால வைப்பு நிதி
- வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) விஷயத்தில் மத்திய அரசுக்கு சரியான ஆலோசனை அளிக்கப்படவில்லை. தொழிலாளருக்கு தொழில்முனைவோர் அளிக்கும் ஊதியத்தில் தங்களின் பங்காக 12%-ஐ வருங்கால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும்.
- தற்போது இந்த விகிதத்தை 10%-ஆகக் குறைத்துள்ளது. மூன்று மாத காலத்துக்கு இந்தக் குறைவு அமலில் இருக்கும். அதாவது, சராசரியாக ரூ.15,000 சம்பளத்தில் 50 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் சிறுதொழில் நிறுவனத்துக்கு மாதம் ஏழரை லட்சம் செலவாகும்.
- தொழில்முனைவோரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு 2% சலுகை காரணமாக மாதம் ரூ.15,000 வீதம் மூன்று மாதங்களுக்கு ரூ.45,000 மீதமாகும். இது மிக மிகக் குறைவு.
- இதற்கு மாறாக தொழில்முனைவோர், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியின் விகிதம் 12% என்றிருப்பதை, ஓர் ஆண்டுக்கு 3% என்று மாற்றினால் அது தொழில்முனைவோருக்கு உண்மையிலேயே உதவியாக இருக்கும்.
காப்புறுதித் திட்டமும் வேண்டும்
- தற்போது சிறு - குறு தொழில் நிறுவனங்கள் 50% தொழிலாளருடன் உற்பத்தி தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் தொழிற்பேட்டைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், அனைத்து இடங்களிலும் தொழிலாளர் கிடைப்பதில்லை.
- கடந்த மார்ச் 24-ஆம் தேதி பொது முடக்க உத்தரவு அமலுக்கு வந்தது. பொது முடக்க உத்தரவால் 2 மாதம் சிறு தொழில் நிறுவனங்கள் மூடி இருந்தன. பல நிறுவனங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 70% வரை உள்ளனர். இவர்களுக்கு இரண்டு மாதத்துக்கு முழு ஊதியம், தங்க இடம், உணவு அளிக்கப்பட்டது.
- அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாத்தனர். வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பலாம், அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாநில அரசு கூறியதும் அவர்கள் சொந்த மாநிலம் சென்று விட்டனர்.
- வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு மக்கள் நல அரசு செய்ய வேண்டிய உதவியை சிறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுச் செயல்பட்டன.
- குருவி தலையில் பனங்காயைச் சுமந்தது. ஆனால், தேவையான நேரத்தில் சிறுதொழில் நிறுவனங்களுக்குக் பயன் இல்லாமல் போனது. இந்தச் செலவுகள் பெரும் இழப்பானது.
- வெளி மாவட்டத் தொழிலாளர்களும் இன்று வேலைக்கு வர இயலாது. போக்குவரத்து இன்னும் அனுமதிக்கப்படவில்லை. சிறு தொழிற்சாலைகள் 10% தொழிலாளருடன் தளர் நடைதான் போட முடியும்.
- எனவே, தொழிலாளர்களுக்கு இதுவரை கொடுத்த மொத்த ஊதியமும் மேற்படி சலுகைகளும் நிறுவனத்துக்குப் பெரிய செலவாக உள்ளது. இதை இஎஸ் ஐ நிறுவனம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். கரோனா தீநுண்மி பேரிடரிலிருந்து காப்பாற்ற எந்தக் காப்புறுதித் திட்டமும் கிடையாது.
- ரூ.5 கோடி கடனுடன் எந்தத் தொழிலும் செய்யாமல் இருக்கும், ஆனால், மாதந்தோறும் 50 தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்கும் ஒரு சிறு தொழில் நிறுவனம் 4 மாதங்களில் ரூ.80 லட்சம் நஷ்டத்தைச் சந்திக்கிறது.
- விற்பனைக்கு உறுதியான வாய்ப்பு இல்லாமல் மேலும் கடன் வழங்குவதால் சிறு தொழில் நிறுவனங்களின் கடன் சுமைதான் உயரும். எனவே, கடன் தொகையை அரசு உயர்த்தி அதற்கு வட்டியும் வசூலிப்பது மருந்தாகாது.
- அரசிடம் சிறு தொழில்முனைவோர்கள் நேரடியாக மானியம் கேட்கவில்லை; பிராண வாயு தேவைப்படும் நோயாளிக்கு உடல் தேற, பழ வகைகள் கொடுத்தால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, கீழ்க்கண்ட சலுகைகளை அளித்தால் சிறு தொழில் சிறக்கும்.
இந்தச் சலுகைகள் வேண்டும்
- ஏற்கனவே கொடுத்த நடைமுறைக் கடன், காலக்கெடு கடன் உள்ளிட்ட மொத்தக் கடன்களுக்கும் வட்டி விகிதம் 5% என அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் குறைக்க வேண்டும்.
- தற்போது வழங்கப்படும் புதிய கடனுக்கு உத்தரவாதம் கேட்கக் கூடாது. நடைமுறை சொத்து மதிப்பு (டிராயிங் பவர்) கேட்கக் கூடாது.
- கடந்த 2 மாதங்களாக தொழிலாளர்களுக்கு அளித்த ஊதியத்தில், ஒரு பகுதித் தொகையை காப்பீட்டுக் கழகம் திருப்பித் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
- அடுத்த ஓராண்டுக்கு தொழில்முனைவோர், தொழிலாளர்கள் இருவருக்கும் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 12%-லிருந்து 3%-ஆகக் குறைக்க வேண்டும்.
- கடந்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தி சார்ந்த சிறு தொழில் நிறுவனங்கள் செலுத்திய ஜிஎஸ்டி தொகையில், 30% தொகையை எதிர்காலத்தில் செலுத்தவிருக்கும் ஜிஎஸ்டி-இல் வட்டியில்லாக் கடனாக மத்திய நிதி அமைச்சகம் அறிவிக்க வேண்டும்.
- அந்தக் கடன் தொகையை திருப்பிச் செலுத்த நான்கு ஆண்டுகள் தவணை தர வேண்டும். இந்த ஏற்பாடு நடைமுறை மூலதன கடன்போல சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவி அளிக்கும்.
- வங்கிகளில் கடன் பெறாத குறுந்தொழில் நிறுவனங்கள் வங்கி சாராத நிதி நிறுவனங்களில் அல்லது கூட்டுறவு அமைப்புகளிடம் கடன் பெற்றிருக்கலாம்.
- அந்தக் கடனும் சுமைதான். எனவே, அத்தகைய குறுந்தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் 5% வட்டியில் 5 ஆண்டு தவணையில் தர வேண்டும்.
- இந்தக் கோரிக்கைகள் ஆண்டாண்டு காலமாக பல்வேறு மாநில அரசுகளினால் சிறு தொழில் துறைக்கு உதவ வேறு வேறு வடிவங்களில் திட்டங்களாக அமல் செய்யப்பட்டவை.
- அதனால், இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் சிறு தொழில் துறை தப்பிப் பிழைக்கும். இல்லையெனில், புதிய கடன் சுமையும் சேர்ந்து சிறு தொழில் நிறுவனங்களை ஆற்று வெள்ளத்தில் தள்ள உதவுவதாகவே அமையும்.
நன்றி: தினமணி (26-05-2020)