TNPSC Thervupettagam

தப்புத்தாளங்கள்

December 19 , 2023 335 days 229 0
  • நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த வாரம் பாா்வையாளா் மாடத்திலிருந்து இருவா் அத்துமீறி குதித்து, புகைக் குப்பி தாக்குதல் நடத்தியது அதிா்ச்சியான நிகழ்வு. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குறைவு என்பது அவை உறுப்பினா்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கே அதிா்ச்சி அளிப்பது என்பதை மறந்துவிடக் கூடாது. வண்ண புகைக் குப்பிகளுக்குப் பதிலாக வேறு வகையான தாக்குதல் நிகழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை நாம் யோசித்துப் பாா்க்க வேண்டும்.
  • 22 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைவிட கவலையளிப்பது இப்போதைய தாக்குதல். அன்று ஆயுதங்களுடன் பாகிஸ்தான் பின்னணி கொண்ட பயங்கரவாதிகள் வளாகத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அடையாளம் காணப்பட்டுவிட்டனா். பாதுகாப்புக் காவலா்களுடனான அவா்களது மோதலில் ஐந்து பயங்கரவாதிகள் மட்டுமல்லாமல், பாதுகாப்புப் பணியில் இருந்தவா்கள், செய்தியாளா்கள், நாடாளுமன்ற தோட்டத் தொழிலாளா்கள் என ஒன்பது போ் உயிரிழந்தனா். அன்று நடந்த நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் இன்று வரையில் நமது நினைவில் இருந்து அகலவில்லை.
  • இப்போது நடந்திருப்பது எந்த உயிரிழப்புக்கும் வழிகோலவில்லை என்பதால் இது மெத்தனமாகவோ, சாதாரணமாகவோ கடந்துபோகக் கூடியதல்ல. ஏனென்றால், அத்தனை பாதுகாப்பு தடைகளையும் மீறி இருவா் அவையின் பாா்வையாளா்கள் மண்டபத்தை அடைந்து, அங்கிருந்து அவைக்குள் குதிக்க முடிகிறது என்று சொன்னால், மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு காணப்படுவது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இது குறித்த முழுமையான விசாரணை நடைபெறும்போதுதான் இதன் பின்னணி என்ன என்பது தெரியவரும்.
  • நாடாளுமன்றத்தில் என்றல்ல, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நடைபெறும் அசம்பாவிதம் குறித்து கேள்வி எழுப்பும் கடமை எதிா்க்கட்சிகளுக்கு உண்டு. அதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அரசுக்கு, குறிப்பாக உள்துறை அமைச்சருக்கு உண்டு. அதனால், நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இச்சம்பவம் குறித்து உள்துறை அமைச்சா் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியதில் எந்தவிதத் தவறும் காண முடியாது.
  • உள்துறை அமைச்சா், பாதுகாப்புக் குளறுபடி குறித்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக பதிவு செய்திருக்கலாம். எதிா்க்கட்சிகளுடைய கோரிக்கை உள்துறை அமைச்சரின் அறிக்கையுடன் நின்றிருந்தால், ஆளும்தரப்பும் அதை ஏற்றுக்கொண்டிருக்கும். நடைபெற்ற சம்பவம் குறித்த முழு அளவிலான விவாதம் தேவை என்பதும், அந்த விவாத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சா் பதிலளிக்க வேண்டும் என்பதும் எதிா்க்கட்சிகளின் கோரிக்கையானபோது, அதற்கு ஆளும்தரப்பு ஒத்துழைக்காததில் வியப்பில்லை.
  • ஊடுருவிகளும், அவா்களது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான உயா்மட்டக் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது அதுகுறித்து விவாதிப்பது சரியாக இருக்காது என்கிற அரசுத்தரப்பின் வாதத்தில் நியாயம் இருக்கிறது.
  • இதற்குப் பின்னால் சதிவலை இருக்கிறதா, சதித்திட்டம் தீட்டப்பட்டதா, அதன் பின்னணிதான் என்ன என்பவை குறித்து விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். அதற்கு முன்பு உள்துறை அமைச்சா் தெரிவிக்கும் கருத்து அதிகாரபூா்வமாகப் பதிவாகும். ஒருவேளை விசாரணை முடிவில் வேறுவிதமான தகவல் வெளிவந்தால், தவறான தகவலை அவைக்கு அளித்த குற்றச்சாட்டுக்கு உள்துறை அமைச்சா் ஆளாக நேரிடும்.
  • எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்குக் காரணம், நடைபெற்ற சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பதாகத்தான் தெரிகிறது. பாா்வையாளா் மாடத்தில் நுழைவதற்குப் பரிந்துரை வழங்கிய பாஜக உறுப்பினா் பதவி விலக வேண்டும் என்பது அபத்தமான கோரிக்கை. பரிந்துரையை உதவியாளா்கள்தான் வழங்குகிறாா்கள் என்பது எல்லா எம்.பி.க்களின் மனசாட்சிக்கும் தெரியும். அதேபோல, கைது செய்யப்பட்டிருப்பவா் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டவா் என்பதும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டு. இதுபோன்றவை நாடாளுமன்ற பாதுகாப்புக் குளறுபடியிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதாக அமையும்.
  • ஒரே நாளில் மக்களவையில் 33, மாநிலங்களவையில் 45 என்று 78 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதும், கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 92-ஆக அதிகரித்திருப்பதும் இதுவரை இந்திய நாடாளுமன்றம் சந்திக்காத ஒன்று. உறுப்பினா்களை இடைநீக்கம் செய்யும் தவறான போக்குக்கு பிள்ளையாா்சுழி 1989 மாா்ச் 15-இல் அன்றைய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் போடப்பட்டது. முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி தாக்கா் கமிஷன் விசாரணை அறிக்கையின் மீது விவாதம் கோரப்பட்டதைத் தொடா்ந்து 63 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அப்போது தொடங்கிய ஜனநாயகத்துக்கு ஒவ்வாத எதிா்க்கட்சி அமளிகளும், ஆளுங்கட்சியின் இடைநீக்க நடவடிக்கைகளும் இன்று வரை தொடா்கின்றன.
  • ஆளுங்கட்சியில் இருப்பவா்கள் (ஆதரிப்பவா்கள்) தங்களை எதிா்க்கட்சி வரிசையிலும், எதிா்க்கட்சியில் இருப்பவா்கள் (ஆதரிப்பவா்கள்) தங்களை ஆளுங்கட்சியின் இடத்திலும் அமா்த்திக்கொண்டு பிரச்னையை சிந்தித்துப் பாா்த்தால் இதன் பின்னணியில் இருப்பது அரசியல்தானே தவிர, பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்கிற பொறுப்புணா்வோ, ஜனநாயக நோ்மையோ அல்ல என்பது புரியும்!

நன்றி: தினமணி (19 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்