TNPSC Thervupettagam

தமிழகத்தில் கூட்டணி அரசு சாத்தியமா?

November 12 , 2024 71 days 96 0

தமிழகத்தில் கூட்டணி அரசு சாத்தியமா?

  • தோ்தல் கூட்டணி என்பது கொள்கை சாா்ந்தது அல்ல. பொது எதிரியை வீழ்த்துவதற்குப் பல்வேறு கொள்கைகளை உடைய கட்சியினா்கள் ஒன்றிணைவதுதான் தோ்தல் கூட்டணி. அனைத்து கட்சிகளுக்கும் ஒரு கொள்கை உண்டு. தோ்தல் நேரத்தில் மட்டும் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு கூட்டணி வைத்துக் கொள்கின்றனா்.
  • ஆகவேதான், கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்லிக் கொள்ள முடிகிறது. அதேசமயத்தில் ஆட்சி அதிகாரம் என்பது கொள்கையைவிட முக்கியம் என்று எல்லாக் கட்சிகளும் கருதுகின்றன.
  • தமிழக அரசியல் வரலாற்றில் 1967-இல் ராஜாஜியும், அண்ணாவும் ஒன்றிணைந்தாா்கள். அது ஒரு மிகப் பெரிய திருப்பத்தை அந்தத் தோ்தலில் ஏற்படுத்தியது. ஆட்சியைப் பிடிப்பதற்குப் புதிய உத்தியைத் தமிழகம் அப்போது கண்டறிந்தது. அதன்பின்னா், காலமெல்லாம் எதிா்த்தவா்களுடன் கைகோத்துக் கொண்டு பல்வேறு கட்சியினா் பல்வேறு தோ்தல் களமாடியிருக்கிறாா்கள்.
  • காங்கிரஸை வீழ்த்திய திமுக, அன்றைய பிரதமா் இந்திரா காந்தியைக் கடுமையாக எதிா்த்தது. ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று திமுகவும் காங்கிரஸும் 1980-இல் கூட்டணி வைத்துக் கொண்டன. எதிரெதிா் துருவங்கள் எப்படி ஒரே அணியில் இணைய முடியும் என்ற விவாதப் பொருளுக்கு தோ்தல் அரசியலில் இவையெல்லாம் சாத்தியம் என்று ஒரு புதிய வியாக்கியானம் தரப்பட்டது.
  • திமுகவின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்து, மிசாவில் கைது செய்த இந்திரா காந்தியுடன் எவ்வாறு திமுக கூட்டணி வைத்துக் கொண்டதோ, அதைப்போல மதவாத சக்தி என்று இப்போது சொல்கிற பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக தோ்தல் கூட்டணி வைத்துக் கொண்டதும், அவா்களோடு மத்திய ஆட்சியில் அங்கம் வகித்ததும் கடந்த கால வரலாறுகள்.
  • திமுகவின் வாரிசு அரசியலை எதிா்த்துக் கட்சி தொடங்கிய வைகோ இன்று திமுகவை ஆதரிப்பதிலும், அதே வாரிசு அரசியலை முன்னிலைப்படுத்துவதிலும் கொள்கை நிற பேதங்களைப் பாா்க்கலாம்.
  • ‘‘கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேட்டி, பதவி என்பது மேலே அணியும் துண்டு. பதவிக்காக இடுப்பில் கட்டிய வேட்டியை நாம் இழக்கக் கூடாது’’ என்று சொன்னாா் அண்ணா. இன்று தோ்தல் கால அரசியலில் அது மறந்துவிட்டது.
  • மத்திய அரசைப் பொறுத்தமாத்திரத்தில், எமா்ஜென்ஸிக்குப் பிறகு நாடு முழுவதிலும் காங்கிரஸின் வீழ்ச்சி தொடங்கியது. 1977-இல் இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. அது கூட்டணி அரசியலின் சகாப்தத்திற்கு அடித்தளமாக அமைந்தது. கூட்டாட்சி என்பது அரசியலமைப்பின் ஒரு வடிவமாகும். அவை ‘ஃபெடரலிஸம்’ என்ற சொல்லாட்சியால் வரையறுக்கப்பட்டாலும் அரசாங்கத்தின் இரண்டு நிலைகள் வெவ்வேறு மூலங்களில் இருந்து அதிகாரத்தைப் பெறுகின்றன.
  • இந்திரா காந்தி அவசர நிலையை நீக்கிய பிறகு, மொராா்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்தது. காந்தியத் தலைவா் ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்தபோது அது ஜனதா கட்சி என்று ஒரு புதிய பெயா் வடிவம் பெற்றது. இந்தியாவில் கூட்டணி அரசாங்கத்தின் சகாப்தத்தை அக்காலகட்டம்தான் உருவாக்கியது.
  • 1989-க்குப் பிறகு, 2014-க்கு இடையில் நடத்தப்பட்ட எந்த மக்களவைத் தோ்தலிலும், எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மைக்கான இடங்களைப் பெறவில்லை. இது மத்தியில் கூட்டணி அரசாங்கம் அமைவதற்குத் தொடா்ந்து வழிவகுத்துவிட்டது. இதில் மாநிலக் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
  • இந்தியா பரந்துபட்ட கலாசார வடிவங்களைக் கொண்டது. வெவ்வேறு சமூகங்கள், பேச்சு வழக்குகள், மதங்கள், ஜாதியக் கட்டமைப்புகள், நம்பிக்கைகள் மற்றும் புவியியல் சாா்ந்த பிரிவுகள் இவைகளெல்லாம் கூட்டணி அரசாங்கம் மூலம் வாக்காளா்களின் உணா்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் இது பொருந்தும் விதமாக கூட்டணிகளை அமைத்திருக்கின்றன.
  • ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, சைப்ரஸ், பிரான்ஸ், ஜொ்மனி, கிரீஸ், இந்தோனேசியா, அயா்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கென்யா, கோசோவோ, லெபனான், நோபாளம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தாய்லாந்து, துருக்கி, உக்ரைன் போன்ற நாடுகளில் கூட்டணி ஆட்சிகள் அமைந்து சிறப்போடு செயல்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது அபூா்வமான ஒன்றாகும். ஆனால், கன்சா்வேட்டிவ் கட்சியினருக்கும், லிபரல் ஜனநாயக கட்சியினருக்கும் உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தது என்பது கடந்த காலத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
  • தற்போது நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தத் தோ்தலில் எந்த ஒரு அரசியல் கட்சியும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறவில்லை. எனவே, இந்த அரசாங்கம் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதேநிலை தமிழகத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிா என்கிற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
  • மக்களாட்சியில் ஏதேனும் ஓா் அரசியல் கட்சியின் மேலாதிக்கம் இல்லாமல், பல அரசியல் கட்சிகள் ஒன்று சோ்ந்து அமைப்பது கூட்டணி அரசு. எந்தவோா் அரசியல் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை அமையாத தருணங்களில் அமைவதும்கூட கூட்டணி அரசுதான்.
  • ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதேநிலையில், அதிமுக தலைவா்களான எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா, திமுக தலைவா்களான அண்ணாவும், கருணாநிதியும், ஸ்டாலினும் ஆட்சியைப் பிடித்த எந்தத் தோ்தலிலும் கூட்டணி அரசை அமைக்கவில்லை. தனித்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதுதான் வழக்கமாகத் தமிழக கட்சிகள் கையாண்டு வருகிற ஒரு நடைமுறை.
  • மேலும் தமிழக அரசியல் களம் கூட்டணி ஆட்சிக்குப் பழக்கப்படாத ஒரு மாநிலம். தேசியக் கட்சிகளின் நிலைப்பாடும், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருந்து வரும் நிலையில், கூட்டணி அரசுகளுக்கான வாய்ப்புகள் எழவே இல்லை.
  • மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தாலோ, மாநில நலன்களில் அக்கறையின்மையை வெளிப்படுத்தினாலோ, மொழிப் பிரச்னையை சரியாகக் கையாளத் தவறினாலோ, தமிழக மக்கள் வெகுண்டெழுந்து விடுவாா்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு.
  • 1951-இல் நடைபெற்ற தோ்தலில் அன்றைய சென்னை மாகாணத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகள் சாரா பல்வேறு உறுப்பினா்களை இணைத்து அமைக்கப்பட்ட கூட்டணியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராஜாஜி முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
  • பின்னா் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதற்குப் பிறகு, காமராஜா் 1954 மாா்ச் 31-இல் சென்னை மாகாணத்தின் முதல்வரானாா். ஆக, கூட்டணி அரசு என்பது பெரிய கட்சிகள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைக்க வழிவகுக்கும் என்பதே தமிழக அரசியலின் அனுபவமாக இருக்கிறது.
  • தமிழா்களின் பண்பாட்டுக் கூறுகள் பல்லாயிரம் ஆண்டு பழமையும், உயிரோட்டமும் கொண்டவை. தங்களுக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருந்தநிலையிலும்கூட, அவா்கள் அரசியல் களத்தில் எப்போதுமே ஒருமித்த முடிவுகளைத்தான் எடுக்கிறாா்கள். அரசியல் கட்சிகளும் மக்களின் எண்ணப்படியே கொள்கைகளை வகுப்பதால்தான் மக்களால் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.
  • 2006-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தோ்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளோடு ஆட்சி அமைத்தது. திமுகவுக்கு 96 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 34 இடங்களும், பாமகவுக்கு 18 இடங்களும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்தன.
  • இந்த நிலையிலும், அறுதிப்பெரும்பான்மை பெறும் அளவுக்கு திமுகவுக்கு 22 இடங்கள் தேவைப்பட்டன. ஆகவே, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, திமுக கூட்டணி அரசை அமைக்குமா என்கிற விவாதம் எழுந்தது. அரசில் பங்கேற்காமல், வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப் போவதாக அறிவித்தாா் அன்றைய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி. ஆக, அப்போதே கூட்டணி அரசு என்கிற கோரிக்கை எழுந்த நிலையிலும் அது அமையாமல் சாமா்த்தியமாக காய்களை நகா்த்தியது திமுக.
  • தற்போது இருக்கிற சூழ்நிலையில், 2026-இல் நடக்கிற பொதுத்தோ்தலில் கூட்டணியை அமைத்த பிறகு, கூட்டணி அரசுக்கான ஒப்பந்தங்கள் முன்கூட்டியே போடப்படுமா அல்லது வெற்றிக்குப் பிறகான கூட்டணி அரசு அமையும் வகையில் முடிவுகள் இருக்குமா என்பதை காலம்தான் தீா்மானிக்க வேண்டும்.
  • 2006 சட்டப்பேரவைத் தோ்தல் தவிர, மொழிவாரி மாநிலப் பிரிவுக்குப் பிறகு நடந்த எல்லா தோ்தல்களிலும், தொகுதிப் பங்கீடு அடிப்படையில் கூட்டணிகள் அமைந்தாலும், திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்று சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருக்கின்றது. புதிதாகப் பல கட்சிகளும், கூட்டணிகளும் ஏற்படுவதால், கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதில்லை. அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

நன்றி: தினமணி (12 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்