TNPSC Thervupettagam

தமிழக நாடோடிகளின் அவலங்கள்

November 24 , 2021 983 days 557 0
  • ‘தமிழக நாடோடிகள் கூட்டமைப்பு’ தங்களை ‘நாடோடிப் பழங்குடியினர்’ (Nomadic Tribes) எனத் தனி இனத்தவராகக் கருதவும், கல்வி, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வேண்டியும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறது.
  • இது சாதி அட்டவணைப்படுத்துதலின் போதாமையையே சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் பூர்வகுடிகளான இவர்களை அலைகுடிகள், காலோடிகள் எனவும் அழைக்கலாம்.
  • சங்க காலத்தில் பாணர், பொருநர், விறலியர், பாடினியர், கூத்தர், அகவுநர் போன்ற நாடோடிக் குழுக்கள் இருந்தது, சங்க இலக்கியங்கள் வழி அறியப்படுகிறது.
  • இவர்கள் குறவர், எயினர், ஆயர், உழவர், பரதர் போன்ற நிலைகுடிகளின் கொடையில், அலைகுடிகளாக வாழ்ந்தனர்.
  • வீரயுக அலைகுடிகளான ‘பாணர்’ சமூகத்தில் மட்டும் துடியர், கோடியர், வயிரியர், கண்ணுளர் போன்ற 17 வகைக் குடிகள் இருந்ததாக ‘பாணர் இனவரைவியல்’ நூலில் மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி குறிப்பிடுகிறார்.
  • நிலைகுடிகளுக்குக் கலைச்சேவை செய்த இவர்கள், ஜந்து நிலங்களிலும் பயணித்திருக்கிறார்கள்.
  • பின்னர், இடைக்காலத்தில் மன்னர்களின் புகழ்பாடி வாழ்ந்த சில நாடோடி இனக்குழுக்களையும், காலனிய ஆட்சிக் காலத்தில் சரக்கு நாடோடிகள், வணிக நாடோடிகள், குறி சொல்லிய மற்றும் நிகழ்த்துக்கலை சார்ந்த நாடோடிகள் இருந்ததையும் வரலாற்று ஆய்வாளர்கள் இனங்காட்டுகிறார்கள்.
  • கணினி யுகத்திலும் நாடோடிக் குழுக்கள் இருப்பது நமக்கு வியப்பளிக்கலாம்.
  • 30 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்திய அளவில் ஏறத்தாழ 15 கோடி நாடோடிகள் (அன்றைய மக்கள்தொகையில் 6%) 120 குழுக்களுக்கும் மேலாக இருக்கின்றனர். இன்று, தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட நாடோடிக் குழுக்களின் மக்கள்தொகை 10 லட்சம்.
  • பொதுவாக, இவர்கள் ஊருக்கு வெளியே, சாலை ஓரங்களில் தற்காலிக முகாமிட்டு, சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு, அடுத்த இடத்துக்கு அலைகுடிகளாக இடம்பெயர்கின்றனர்.
  • சாதியால் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் ஆகியோருக்கும் பழங்குடியினருக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடு என்ன? குறிப்பாக, சிலரைத் தாழ்த்தப்பட்டவர்களாக நம் சமூகம் ஒதுக்கி வைத்திருக்கிறது. ஆனால், காலங்காலமாகத் தனித்த சூழ்நிலையில் வாழும், சமூகப் பொது ஓட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களே பழங்குடிகள் எனும் பூர்வகுடிகள்.
  • வனவாசிகள் அல்லது ஆதிவாசிகள் என அறியப்படும் இப்பழங்குடியினரை அறிவியல் தொழில்நுட்பமும் அணுகவில்லை; சாதியமும் தீண்டவில்லை.
  • சமூகநீதி அடிப்படையில், இந்திய அரசமைப்புச் சட்டம் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் என்று வகைப்படுத்தி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கியது.
  • பின்னர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டது.

நாடோடிப் பழங்குடியினர்

  • நாடோடிகளைப் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் பாவித்தே சான்றிதழ் வழங்கப் படுகிறது.
  • நாடோடிகளின் ஒரு பிரிவினரான வாக்ரிகள் (நரிக்குறவர்கள்) மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.
  • சிலரைக் காட்டுநாயக்கர் என வகைப்படுத்திப் பழங்குடியினர் சான்றிதழும் வழங்கப் படுகிறது.
  • அரசின் இந்த மூன்று அட்டவணை வகைப்பாடுகளுக்குள் திணிக்க முடியாதவர்கள் நாடோடிகள்.
  • இவர்களிடம் சாதி இல்லை. எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அவர்களை வகைப் படுத்துவதில் நியாயம் இல்லை. அலைகுடிகளான நாடோடிகள் நிலைகுடிகளான சீர்மரபினரும் இல்லை.
  • இவர்களைத் தாழ்த்தப்பட்டவர் என்ற வகைப்பாட்டிலும் பகுக்க முடியாது. அதே வேளையில், நாடோடிகள் மலைகளில் வாழ்கின்ற வனவாசிகளும் அல்லர்.
  • எனவே, இவர்களை பழங்குடியினர் என்றும் வகைப்படுத்த முடியாது. வனப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக் கூறி, நாடோடிகளில் சிலர் மலைகளிலிருந்து அப்புறப் படுத்தப் பட்டனர். இவர்கள் சமவெளிப் பகுதியில் அலைகுடிகளாகத் திரிபவர்கள்.
  • தமிழ்நாட்டு நாடோடிகள் சிலர் அரசிடம் சாதிச் சான்றிதழ் கேட்டபோது, மாவட்ட ஆட்சியர்கள் இவர்களை ‘காட்டுநாயக்கர்’ என்று வகைப்படுத்திப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தனர்.
  • வேறு சில ஆட்சியர்கள் “காட்டுநாயக்கர்கள் எப்படி நாட்டில் வாழ முடியும்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, சாதிச் சான்றிதழ் தர மறுத்தனர்! இங்குதான் சிக்கல் தொடங்குகிறது.
  • நாடோடி இன மாணவர்கள் சிலர் பொதுத்தேர்வுகளில் 90%-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த போதும், மேற்படிப்புக்குச் செல்ல முடியாத அவலம் நிலவுகிறது.
  • காரணம், இவர்களிடம் சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள் இல்லை. நாடோடிகளைப் பிற்படுத்தப் பட்டவர், பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினராக அட்டவணைப்படுத்துவதால், அந்தந்தப் பிரிவுகளில் எண்ணிக்கையிலும், சமூக, பொருளாதார நிலைகளிலும் வலுவாக உள்ளவரோடு இவர்களால் போட்டியிட முடியுமா?
  • ‘தமிழக நாடோடிகள் கூட்டமைப்பு’ சார்பில் மதுரையில் முதலாவது மாநாடு 2010-ல் நடத்தப் பட்டது.
  • இதில் சாட்டையடிக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர், குருவிபிடிப்போர், பாம்பாட்டிகள், நரிக்குறவர், நாட்டுவைத்தியர் எனப் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
  •  தமிழ்நாட்டு நாடோடிகள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதன் வெளிப்பாடே ஆண்டுதோறும் கூட்டப்படும் இம்மாநாடுகள்.
  • இக்கூட்டமைப்பின் தலைவி மகேஸ்வரி கூறுகிறார்: “பழங்குடியினரில் மலையாளிகள், குறும்பர், இருளர், தோடர், ஊராளி போன்றவர்கள் மட்டும் பயன்பெறுகின்றனர்.
  • ஆனால், ‘காட்டுநாயக்கன்’ என்ற பட்டியலில் உள்ள பாம்பாட்டிகள் குருவிபிடிப்போர், குடுகுடுப்பைக் காரர்கள், ஆதியன் என்ற பெயரில் உள்ள பூம்பூம் மாட்டுக்காரர்கள், சோழகா என்ற பெயரில் உள்ள பாம்பாட்டிகள் போன்றவர்களால் அவர்களோடு போட்டிபோட முடியாத நிலை இருக்கிறது.”
  • நாடோடி இனத்தவருக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கினால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்பதே இவர்களின் அழுத்தமான கோரிக்கை.
  •  மேலும், நாடோடி இனத்தவர் பின்வரும் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
  • நாடோடிப் பழங்குடியினருக்கு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய தேர்தல் அடையாள அட்டை, குடும்ப அட்டை வழங்க வேண்டும். நாடோடிகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும்.
  • கேட்பாரற்றவர்கள் என்பதால், இவர்கள் மீது பொய் வழக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி, அநியாயமாகச் சிறையில் அவதியுறுகின்றனர். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் பயன்பெறும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
  • நாடோடிகளின் கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். எனவே, அவர்களுக்கான தனி நலத் துறை உருவாக்கப்பட வேண்டும். தேசிய அளவில் நலவாரியம் அமைக்கப் பட்டிருக்கிறது.
  • ஆனால், மாநில அளவில் இல்லை. இவர்களில் ஒரு பிரிவினரான வாக்ரிகளுக்கு (நரிக்குறவர்களுக்கு) மட்டுமே தமிழ்நாடு அளவில் நலவாரியம் உள்ளது.
  • எனவே, நாடோடிகளை ‘நாடோடிப் பழங்குடியினர்’ எனத் தனி இனமாக அடையாளப் படுத்துவதும், அவர்கள் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதுமே சமூகநீதி ஆகும். அதுவே, அரசின் சமூகநலத் திட்டங்கள் அவர்களுக்கு முழுமையாகச் சென்றடைய வழி வகுக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்