TNPSC Thervupettagam

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா?

September 2 , 2024 86 days 93 0

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா?

  • எத்தனை காலத்துக்கு இவர்கள் இப்படி செத்துச் செத்துப் பிழைப்பது? இந்திய குடிமக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறதா? இல்லையா? தொடர்ந்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தால் அவர்கள் வாழ்வது எப்போது?
  • இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகு, ராமேசுவரம் மீனவர்களின் படகு மீது மோதியதில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். கடலில் விழுந்த மேலும் மூவரில் ஒருவர் மாயமானார். 2 பேர் மீட்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது இன்று நேற்றல்ல, தொடர்ந்து நடந்து வருகிறது.
  • ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து 400 விசைப்படகுகளில் 2,000 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் சிலர் ஜூலை 31 அன்று இரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
  • மேலும், ராமேசுவரம் நோக்கி கரைக்குத் திரும்பிய தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கைக் கடற்படையினர் விடாமல் துரத்தினர். அப்போது, இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகு தமிழக மீனவர் விசைப்படகு மீது மோதியது. இதனால் அந்தப் படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த 4 மீனவர்களும் கடலுக்குள் விழுந்தனர்.
  • இவர்களில் மலைச்சாமி கடலில் மூழ்கி உயிரிழந்தார். கடலில் தத்தளித்த இரண்டு பேர் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமானார். மீட்கப்பட்ட 2 மீனவர்களையும் இறந்த மீனவர் மலைச்சாமியின் உடலையும் இலங்கைக் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு போயுள்ளனர்.
  • தகவல் அறிந்த மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாயமான மீனவரை விரைந்து மீட்க வேண்டும். கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்டுத் தர வேண்டும். இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்களைப் பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்னும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
  • இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மீன்பிடி படகின் மீது இலங்கை கடற்படையினரின் ரோந்துப் படகு மோதிய துயர சம்பவம் ஆழ்ந்த வேதனையையும், கவலையையும் அளிக்கிறது. நமது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி மேற்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல்கள் மீனவ சமூகத்தினர் இடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன்னுரிமை அளித்து தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
  • இதற்கிடையில், மீனவர்கள் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் வழக்கு ஏதுமின்றி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் யாழ்ப்பாணம் தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
  • தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படைக் கப்பல் மோதிய நிகழ்வை விபத்தாகப் பார்கக முடியாது. அதைத் திட்டமிட்ட தாக்குதலாகவும், கொலையாகவும்தான் பார்க்க வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் தொடர்ந்து மீன் பிடிப்பதற்கு அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால், தமிழக மீனவர்கள் எல்லை மீறி வந்ததாகக் கூறி கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையைச் செய்துவந்த இலங்கைக் கடற்படை இப்போது மிருகத்தனமாக மோதி மீனவர்களைப் படுகொலை செய்யும் அளவுக்கு துணிந்திருக்கிறது.
  • இதற்குக் காரணமான இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இரு தரப்பு அதிகாரிகளும், மீனவர் அமைப்புகளை அழைத்துப் பேசியும் முடிவு ஏற்படாமல் போனதற்குக் காரணம் என்ன?
  • மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மீனவர் பிரச்னையில் மாற்றம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் இப்படி நடக்கிறது; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கை கடற்படையின் அட்டகாசத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்று பாஜக உறுதிமொழி அளித்தது. அந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது; ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன; எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
  • இலங்கையின் தாக்குதல் ஏதும் குறையவில்லை. இலங்கையின் பொருளாதார நெருக்கடி நேரத்தில் இந்தியாவும், தமிழ்நாடும் கைகொடுத்தது. இந்த நன்றிகூட இல்லாமல் தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது.
  • தமிழகத்துக்கு - அதாவது இந்தியாவுக்கு உரிமையாக இருந்த கச்சத்தீவை எடுத்துக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் கெஞ்சும்படி நேர்ந்து விட்டது. இந்தியா கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இந்திய மீனவர்களின் நலனைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறையாண்மையைக் காக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு இல்லையா?
  • தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை தமிழக அரசையே கலந்து ஆலோசிக்காமல் இன்னொரு நாட்டுக்குத் தூக்கிக் கொடுக்கலாமா? இந்திய நாட்டின் இறையாண்மையை பற்றிக் கவலைப்படாமல் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகாவும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.
  • 1974ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவை இந்தியா விட்டுக் கொடுத்தது. இதன்படி தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமமும், சுதந்திரமும் வழங்கப்பட்டது. 1976-இல் மீண்டும் ஓர் ஒப்பந்தம் இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்குத் தரப்பட்ட உரிமம் பறிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்தது.
  • ஆனால், இந்த ஒப்பந்தத்தின் 6-ஆவது பிரிவில் இரு நாட்டு மீனவர்கள் காலம் காலமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்கலாம் என்றே உள்ளது. 5 ஆயிரம் சதுர கி.மீ. இலங்கைக் கடற்கரையில் 150 சதுர கி.மீ. பரப்பளவில் தமிழக மீனவர்கள் எல்லை தெரியாமல் மீன் பிடிக்கின்றனர் என்று கூறுகின்றனர்.
  • 1969 வியன்னா உடன்படிக்கையின் விதி 6(1)-இல் விளக்கப்பட்டுள்ளபடி, ஒப்பந்த முக்கிய அம்சத்தை ஏதாவது ஒரு நாடு மீறும்போது மற்ற நாட்டுக்கு உடன்படிக்கையை ரத்து செய்யவோ, தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ உரிமை உண்டு. ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.15 கோடி அபராதம் விதிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்தது.
  • 1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை. கச்சத்தீவு ஒப்பந்தப்படி இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்றும், அங்குள்ள அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம் என்றும் இரண்டு உரிமைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன.
  • அண்மையில் தமிழக மீனவர் பிரதிநிதிகள் தில்லி சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து தமிழக மீனவர் பிரச்னை தொடர்பான மனுவை வழங்கினர். இலங்கைக் கடற்படைப் படகு மோதி உயிரிழந்த மீனவர் மற்றும் காணாமல் போன மற்றொரு மீனவர் குறித்தும், ராமநாதபுரத்தில் மீனவர் போராட்டம் பற்றியும் பேசப்பட்டது.
  • மேலும், இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் மீட்டுத் தர வேண்டும், இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
  • மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீனவர் பிரதிநிதிகளிடம் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போதே இலங்கையின் தூதரை வரவழைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது எனக் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
  • ஒரு நாட்டு மீனவரை அடுத்த நாட்டுக் கடற்படை தொடர்ந்து தாக்கிக் கொண்டே யிருப்பதை இந்திய அரசு அனுமதிப்பது, அதன் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும், அறைகூவலாகும். தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய நாட்டு மீனவர்கள் இல்லையா? வல்லரசு கனவு காணும் இந்திய அரசு, இனியும் இலங்கையில் இத்தகைய அத்துமீறல்களை அனுமதிக்கலாகாது.

நன்றி: தினமணி (02 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்