TNPSC Thervupettagam

தமிழின் தொன்மை

April 17 , 2022 842 days 1014 0
  • மனிதனின் சிந்தனைக்கு அடிப்படையாகிய கருத்துக்களை வடித்தெடுக்க உதவுவது மொழி. மொழியின் இயக்கமே சமுதாயத்திற்கு உயிரூட்டுகிறது. உலகில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் பண்படா மொழிகளும், பண்பட்ட மொழிகளும் உள்ளன. பண்பட்ட மொழிகளுள்ளும் தொன்மைமிக்க, ஆழமான, இலக்கண, இலக்கிய செறிவுடைய மொழிகளின் எண்ணிக்கை குறைவே.
  • தமிழின் தொன்மையைக் காட்ட எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அது விரிக்கின் பெருகும். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் இயற்றப்பட்டது. அது தமிழன் கிளவி என்றும், அதன் பாயிரம் - "தமிழ்கூறு நல்லுலகம்" என்றும் தமிழை சுட்டிக்காட்டுகிறது.
  • சிவன் வடமொழியை பாணினிக்கும், தென்மொழியை அகத்தியருக்கும் அறிவுறுத்தினான் என்று காஞ்சி புராணம் கூறுகிறது. இது ஆய்வுக்குரியதன்று, எனினும் அதன் பொருள் நோக்கத்தக்கது. "இன்மையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று பிங்கல நிகண்டு பெருமைபடக் கூறுகிறது. நம்முடன் வாழ்ந்த பாவணர், உலகின் முதல் மொழி தமிழ், முதல் மாந்தன் தமிழன் என்ற உறுதிப்படக் கூறுகிறார்.
  • கடைச் சங்க காலம் கி.மு. 500 முதல் கி.பி.200 என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அக்காலத்திலிருந்த புறநானூறு, பரிபாடல், அகநானூறு போன்ற நூல்களும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, ராமாயணம் போன்ற காப்பியங்களும், தமிழை தக்க அடைமொழியுடன் சிறப்பித்துள்ளன. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி என தமிழ்க் குடியை ஐயனாரிதனார் தமது புறப்பொருள் வெண்பா மாலையில் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் தொல்லிலக்கண, இலக்கிய நூல்கள் காட்டும் அகச்சான்றுகளாகும்.
  • இவற்றோடு உலகச் செம்மொழிகள் என கூறப்படும் சம்ஸ்கிருதம், எபிரேயம், கிரேக்கம் போன்ற மொழிகளில் தமிழ்ச் சொற்கள் நிறைந்துள்ளன என்பதை பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
  • தமிழின் தொன்மை பற்றிய ஆய்வுகள் பலவாக நடைபெற்றுள்ளன. இந்தியாவில் வழங்கப்படும் மூவாயிரம் மொழிகளை ஆய்வாளர்கள் நான்காக வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுள் இரண்டாவதாகக் கூறப்படுவது திராவிட மொழிகள். திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலாகக் குறிப்பிட்டவர் குமரிலபட்டர். தமிழ் என்னும் சொல்லில் இருந்தே திராவிட என்னும் சொல் பிறந்தது என்கிறார் ஹீராஸ் பாதிரியார். அதுமட்டுமின்றி மொகஞ்சதராவில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய மொழியில் தமிழ்ச் சொற்கள் அதிகமாக இருந்தன என்றும் அவர் கூறுகிறார்.
  • 1856-ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல், திராவிட மொழிகள் ஆரிய குடும்பத்திலிருந்து வேறுபட்டவை என்றும், சம்ஸ்கிருதக் கலப்பின்றித் தனித்தியங்கும் ஆற்றல் தமிழக்கு உண்டென்றும் கூறுகிறார். பிறநாட்டு மொழியியலாளரும், அறிஞர்களும் தமிழின் எழுத்துமுறை, இலக்கணக் கூறுகள் ஆகியவற்றை ஆய்ந்தறிந்து தமிழ் தொன்மையானது என உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • ஒரு காலத்தில் வடமொழி அறிஞர்கள் பலரும் தமிழிலுள்ள பல சொற்கள் வடமொழியினின்றும், கடனாகப் பெற்றவை என்றும் கருத்தைப் பரப்பினார்கள். அச்சமயத்தில் கால்டுவெல், பர்ரோ போன்ற ஐரோப்பிய ஆய்வாளர்கள் தத்தம் ஆய்வுகள் மூலம் வடமொழியறிஞர் தம் கருத்தை தவறென புலப்படுத்தினர்.  தமிழ் எந்நிலையிலும் வடமொழியின் வழியில் வந்ததன்று. அது திராவிடத்திற்கு தாய்: ஆரியத்திற்கு மூலம். சமஸ்கிருதத்தில் 5ல் ஒரு பங்கு தமிழே என்பதும் அறிஞர் தம் கூற்று.
  • திராவிட மொழிகளின் சிறப்பிற்கேற்ப அவற்றின் இயல்புகள் அனைத்தையும் தாங்கி நடக்கும் ஒரு மொழி தமிழே என்று "நீராரும் கடலுடுத்த" என்னும் பாடலில் மனோன்மனீயம் சுந்தரனார் விளக்கியுள்ளார்.
  • தொல்காப்பியர் இலக்கணம் படைக்குங்கால், தமது நூற்பாக்களில் என்ப, என்மனார், புலவர், ஒத்தென மொழிப உயிர்மொழி புலவர் என்றும் சொற்களை பயன்படுத்தியுள்ளார்.  தொல்காப்பியரே, தமக்கு முன்னர் வாழ்ந்த புலவரின் கூற்றை மேற்கோளாகக் காட்டியிருப்பதானது, அவருக்கு முன்பே தமிழில் சிறப்புமிக்க இலக்கண, இலக்கியங்கள் செழித்திருந்தன என்பதைகாட்டிகின்றதன்றோ.
  • தமிழ் முச்சங்கங்களில் பேணப்பட்டது என்பதை அறிவோம். முதல், இடை, கடைச் சங்கங்கள் பற்றிய குறிப்புகள் இறையனார் களவியலுரை, சிலப்பதிகாரம் போன்றவற்றுள் காணப்படுகின்றன. கடைச்சங்க நூல்களே இப்போது நம்மிடையே உள்ள எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும். இவை தமிழாதம் பண்பாட்டின் அடையாளச் சின்னங்களாகும். இவற்றின் உட்பொருள் தொல்காப்பியரின் பொருளதிகாரத்திலுள்ள அகத்திணை, புறத்திணை சார்ந்தவைகளே ஆகும். சங்க கால வாழ்க்கை திணை சார்ந்தது என்பதற்கு இந்நூல்களே சான்றுகளாகும்.
  • சங்கத்தைத் தொடர்ந்து, சோழர் காலம், பாண்டியர் காலம், சேரர் காலம், பல்லவர் காலங்களில் பல்வேறு காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள், இலக்கண நூல்கள் தோன்றின. இன்றும் தமிழில் காலத்திற்கு ஏற்பப் படைப்புகள் தோன்றிய வண்ணம் உள்ளன.
  • காலந்தொறும் வாழும் மொழியாகவும், வளரும் மொழியாகவும் உள்ள தமிழ் இளமை மாறாத மொழி. இயற்கையான மொழி. உயிர்ப்புள்ள மொழி. தமிழ் நம் தாய்மொழி. அதன் தொன்மை வணங்கத்தக்கது.

நன்றி: தினமணி (17 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்