TNPSC Thervupettagam

தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை – பகுதி I

June 14 , 2023 560 days 3560 0

(For the English version of this Article Please click Here)

  • தகவல் தொழில்நுட்பம் என்பது ஆளுமையை எளிமையாகவும், வெளிப்படையாகவும், பொது மக்களை மையப் படுத்தியதாகவும் உருமாற்றிடும் ஒரு கருவியாகும்.
  • இக்குறிக்கோளை எய்திட 2006 ஆம் ஆண்டில் மின் ஆளுமை இயக்குநரகம் உருவாக்கப் பட்டது.
  • திறமையான மற்றும் துரிதமான அணுகுமுறையும் இத்துறைக்குத் தேவைப்பட்டது.
  • எனவே  தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) 2007 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கமாக உருவாக்கப் பட்டது.
  • தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அரசுச் சேவைகளைத் திறமையாக வழங்குவதன் மூலம் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இது எண்ணுகிறது.
  • மின் ஆளுமை துறையின் இயக்குநர் அலுவல்ரீதியாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை நிர்வாக அலுவலராகச் செயல்படுகிறார்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் முக்கியத் திட்டங்கள்

மாவட்ட மின் ஆளுமைச் சங்கங்கள்

  • மின் மாவட்டத் திட்டம் தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் (NeGP) கீழ் செயல்படுத்தப்படும் மாநிலத்தின் ஒரு குறிக்கோள் நோக்குத் திட்டமாகும்.
  • மாவட்ட அளவில் பொது மக்களுக்கு அடையாளம் காணப் பட்ட அதிக அளவில் வழங்கப்படும் சேவைகளை மின்னனு முறையில் வழங்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • எனவே இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மின் ஆளுமைச் சங்கங்களை உருவாக்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
  • இச்சங்கங்கள் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் செயல்படுகிறது.
  • சென்னை மாவட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் அதன்  தலைவராகச்  செயல்படுகிறார்.
  • மாவட்ட இ-சேவை மையச் செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாயில் 5 சதவிகிதம் இச்சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த வருவாய்ப் பகிர்வானது 10 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப் படுகிறது.

டிஜிட்டல் தமிழ்நாடு (DiTN)

  • தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் செயல்பாடுகளையும் டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கச் செய்வதே டிஜிட்டல் தமிழ்நாடு (DiTN) திட்டத்தின் நோக்கமாகும்.
  • இது மக்களுக்கு வெளிப்படையான மற்றும் அவர்களை மையப்படுத்திய ஆளுமைக்கான ஒரு பாதையை உருவாக்கும்.

பொதுமக்களுக்கான அரசுச் சேவைகள்

பொதுச் சேவை (இ-சேவை) மையங்கள்

  • பொதுமக்களுக்கான அரசின் சேவைகள், மின்னணு முறையில் அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக பொதுமக்களின் அருகாமையிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்த இ-சேவை மையங்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கிராமப்புறத் தொழில் முனைவோர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் ராணுவப் படையினர் நகரம் (கண்டோன்மெண்ட் போர்டு) வாயிலாக அமைக்கப் பட்டு, பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் அவர்களின் இருப்பிடத்தின் அருகாமையிலேயே வழங்கப் பட்டு வருகின்றன.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் 17 ஆம் தேதி  அன்று வரையில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 9,455 இ-சேவை மையங்கள் பல்வேறு சேவை முகவர்கள் வாயிலாக அமைக்கப் பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் 9,720 இ-சேவை பயனர் குறியீடுகள் வழங்கப் பட்டுள்ளன.

மக்கள் வலைதளம்

  • கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் வீட்டில் இருந்தும் அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும், அவர்களது கைபேசி மற்றும் மடிக்கணினி வாயிலாக மின்னணுச் சேவைகளை அணுகி, விண்ணப்பிக்கச் செய்திடும் வகையில் மக்கள் வலைதளம் துவக்கப் பட்டது.
  • அதன் பிறகு இவ்வலைதளத்தின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • மக்கள் வலைத்தளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் 2 சதவீதம் மட்டுமே இ-சேவை பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் அது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மின்னணுச் சேவைப் பரிவர்த்தனைகள், மக்கள் வலைதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தற்போதைய இலக்காகும்.

அனைவருக்கும் இ-சேவை

  • இ-சேவை மையங்களை எளிதாக அமைத்திட எதுவாக, "அனைவருக்கும் இ-சேவை" என்ற திட்டம் 2023 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் 15 ஆம் தேதி அன்று துவக்கப்பட்டது.
  • இத்திட்டம் தொழில்முனைவோர்கள் ஒவ்வொரு கிராமங்கள், வார்டுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இ-சேவை மையங்களை அமைத்திட வழிவகுக்கும்.
  • தகுதி வாய்ந்த அனைத்து மக்களும் சில அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின், இணைய வழி மூலம் அந்த மையங்களைத் துவங்கலாம்.
  • 18004256000 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம் இ-சேவை மையங்கள் மற்றும் சேவைகள் குறித்து, ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் மற்றும் புகார்களைச் சேகரிக்க, ஒப்புகை மற்றும் கருத்து பெறும் அமைப்பு ஒன்று செயல் படுத்தப் பட்டுள்ளது. இது ஒரு மையப் படுத்தப் பட்ட அமைப்பின் மூலம் கருத்துகளைப் பெற்று குறைகளைத் தீர்க்க உதவும்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அலுவலகம் தமிழ்நாடு - மின் அலுவலகம

  • மின் அலுவலகப் பயன்பாட்டுத் தொகுப்பு என்பது அரசு அலுவலகங்களில் உள்ள வழக்கமான பணிகளைத் தானியங்கி மயமாக்கும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பாகும்.
  • அரசின் கோப்புகளைக் கையாளும் ஒவ்வொரு பணியாளருக்கும் ஒரு தனித்துவமானப் பெயர் அடிப்படையிலான பயனர் குறியீடு வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட பொருண்மைகள் தொடர்பான கோப்புகளைக் கையாள வழிவகை செய்யப் பட்டுள்ளது.
  • மேலும்  ஒவ்வொரு துறையும் ஒற்றை அலகாக கட்டமைக்கப் பட்டுள்ளதால், அதன் கீழ் உள்ள அலுவலகங்களின் கோப்புகளின் மீதான நிலுவையை அத்துறைத் தலைவரால் எளிதில் கண்காணிக்க முடியும்.
  • மின்னணுக் கோப்பு மேலாண்மை அமைப்பின் மூலம் காகிதமில்லா அலுவலகத்தை உருவாக்கவும், கோப்புகளின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
  • அலுவலகத்திற்குள்ளும் மற்றும் அதன் சார்பு அலுவலகங்களுக்கிடையேயும் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் நிகழ்நேர வேகத்தில் நடைபெறுவதால் கோப்புகள் மீதான முடிவுகள் மேற்கொள்ளும் திறனை அது மேம்படுத்தி உள்ளது.
  • மின் அலுவலகத் திட்டம் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் கோப்புகளைக் கண்காணித்திடவும், அவற்றின் நிலையினை எல்லோரும் எல்லா நேரங்களிலும் தெரிந்து கொள்ளவும் இது வழிவகுக்கிறது.
  • மேலும் கோப்புகள் மீதான முடிவெடுக்கும் தரம் மற்றும் வேகத்தைக் கண்காணிப்பது இதன் மூலம் எளிதாக்கப் படுவதால், பொறுப்புணர்வு அதிகரிக்கப் படுறது.
  • எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தத் திட்டம் தரவுப் பாதுகாப்பு மற்றும் சீரான தரவு ஒருங்கிணைப்பினை உறுதி செய்வதோடு, இந்தத் திட்டம் ஆற்றல் மிக்க நிர்வாகத்தை நோக்கி நம் மாநிலத்தைப் பயணிக்கச் செய்வதுடன், மக்களுக்குச் சேவைகளைச் சிறப்பாக வழங்குவதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.

தமிழக அரசின் கொள்கை முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு - (TN Decision Support System (DeTN))

தரவுத் தூய்மை

  • தரவு சார்ந்த முடிவுகளுக்கான ஆதரவுக் கட்டமைப்பானது, அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை வடிவமைத்தல், அதன் மேம்பாடு மற்றும் அதனைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் உதவுவதற்காகவும்  அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவும் வேண்டி தமிழ்நாடு அரசால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது அரசுத்துறைகளின் மின்னணுத் தரவுகளை ஒரு முறை சேகரிக்கிறது. அதன்பிறகு அத்தரவுகளில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், இடைமுகச் செயல் நிரலி (Application Program Interface) மூலம் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் அரசுத் துறைகளிடமிருந்துப் பெறப் படுகின்றது.
  • தீர்வுத் தூய்மைத் திட்டம் சரியான பயனாளிகளைக் கண்டறியவும், தகுதியற்றவர்களைக் களையெடுக்கவும், இறந்தவர்களின் தரவுகளைப் பயனாளிகளின் பட்டியலில் இருந்து நீக்கவும், தகுதியுள்ளப் பயனாளிகளைக் கொண்டதொரு தரவுத் தளத்தை உருவாக்கவும், அரசாங்கத்திற்கு முடிவெடுக்கும் ஒரு ஆதரவு அமைப்பாகச் செயல்படுவதையும்  நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும்  தனித்தத் தரவுகள் எனும் ஒரு நிலையை மாற்றி, அரசுத் துறைகளுக்கிடையே இது தரவுப் பகிர்தலை ஏற்படுத்துகிறது.
  • தகுதியில்லாதப் பயனாளிகளைக் களையெடுத்ததன் மூலம் நகைக் கடன் தள்ளுபடித் திட்டம் மற்றும் சுய உதவிக் குழுக் கடன் தள்ளுபடித் திட்டம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கோடி அளவிற்கு அரசின் நிதியானது சேமிக்கப் பட்டது.
  • அமைப்புச் சாரா தொழிலாளர்கள் மற்றும் குடும்ப அட்டை இல்லாத மாற்றுத் திறனாளிகள் கண்டறியப் பட்டு, புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான முடிவுகள் பகிரப் படுகிறன.
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் இல்லாத வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் முதலமைச்சரின் CMCHIS திட்டத்திற்கான புதிய அட்டைகளை வழங்க சுகாதாரத் துறையால் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

முதலமைச்சரின் தகவல் பலகை

  • முதலமைச்சரின் தகவல் பலகை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி அன்று தொடங்கப் பட்ட ஒரு உள்ளார்ந்த ஆளுகைக்கானக் கருவியாகும்.
  • இது தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் உள்ள வணிக நுண்ணறிவு உருவாக்குபவர், பணி ஆய்வாளர் மற்றும் ஒருங்கிணைப்புத் தரவு ஆய்வாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவால் வடிவமைக்கப் பட்டது.
  • நிகழ்நேரத் தகவல் அல்லது கள மட்டத்திலிருந்து அவ்வப் போது சேகரிக்கப்படும் தரவுகளைக் கொண்டு தினசரி, மாதாந்திரம் மற்றும் ஆண்டு அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டத் தகவலை வழங்குவதே இத்தகவல் பலகையின் நோக்கமாகும்.
  • இந்தத் தகவல் பலகைகள் தொடங்கப்பட்டதிலிருந்துப் பல்வேறு திட்டங்கள், காவல்துறை முயற்சிகள் மற்றும் ஒட்டு மொத்த நிர்வாகத்தின் செயல்திறனைக் கண்காணிப்பதில்  ஒரு இன்றியமையாத அங்கமாகப்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • தகவல் தளமாக முதலில் வடிவமைக்கப்பட்ட இத்தகவல் பலகைகள், தற்போது ஆதாரம் சார்ந்த முடிவெடுப்பதில் பயனுள்ள ஒரு தளமாகப் பரிணமித்துள்ளது.
  • தகவல் பலகைகள் 32 துறைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இயக்குனரகங்களின் தரவுகளை உள்ளடக்கியுள்ளது.  தற்போது 135க்கும் மேற்பட்ட தகவல் பலகைகள் உருவாக்கப் பட்டு  இத்தளம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
  • தகவல் பலகைகள் குழுவானது தரவுகளின் நிலைத் தன்மையை கவனமாக அணுகி, தரவின் நேர்மையை உறுதி செய்கிறது.
  • ஒவ்வொரு தகவல் பலகையும் ஒவ்வொரு இயக்குநரகத்திலும் அத்துறையின் குறிப்பிட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • முக்கியச் செயல்திறன் குறிகாட்டிகள் ஒவ்வொரு இயக்குநரகத்திலும் இறுதி செய்யப்பட்டு, ஒரு வணிகத் தேவை குறித்த ஆவணமாகத் தொகுக்கப் பட்டுள்ளது.
  • அரசுத் துறைகளில் இருந்து அனுமதி பெற்ற பின், தகவல் பலகைகள் உருவாக்கப்பட்டு. தொலைபேசி எண்ணுடன் இணைந்த மற்றும் ஒரு முறை மட்டுமே பெறக் கூடிய கடவுச் சொல்லுடன் கூடிய பாதுகாப்புடன் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் வழங்கப்படுகிறது.
  • தகவல் பலகைகளில் இருந்து எடுக்கப்பட்ட கால மற்றும் மாதாந்திர அளவிலான அனுமானங்கள், பகுப்பாய்வுக் குறிப்புகள் வடிவில் அந்தந்தத் துறைகளுடன் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.
  • தகவல் பலகைகளைச் செயல்படுத்தும் போது, பல இயக்குநரகங்கள் மற்றும் துறைகளில் இணைய வழியல்லாதச் செயல்முறைகள் மற்றும் சிரமமான, தேவையற்ற நடைமுறைகள் ஆகியவற்றால் ஏற்படும் திறமையின்மை கண்டறியப் பட்டது.
  • இதை நிவர்த்தி செய்திடும் வகையில், ஒவ்வொரு செயல்முறையையும் மதிப்பீட்டுப் பகுப்பாய்வு செய்து, அவற்றைக் கண்காணிக்கவும், அந்தச் செயல்முறையை எளிதாக்கவும், பயனுள்ள மற்றும் தேவைப்படும் மாற்றங்களை முன்மொழியவும் ஒரு குழு உருவாக்கப் பட்டது.
  • மேலும் அச்செயல்முறைகளின் பின்னணி குறித்த வரலாறுசெயலோட்ட விளக்கப் படங்கள் (Flow Chart) வழியாக அவற்றின் தற்போதையப் பொருத்தத்திற்காக ஆராயப் படுகிறது.
  • ஒட்டு மொத்தமாக முதலமைச்சரின் தகவல் பலகையானது தமிழ்நாட்டின் நிர்வாகத்தில்  வெளிப்படைத் தன்மை மற்றும் தரவு சார்ந்த முடிவெடுப்பதில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது.
  • தகவல் பலகைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு காலமுறை ஆய்வுக் கூட்டங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டு,  அவரது வழிகாட்டுதல்கள் அவ்வப் போது பெறப்படுகின்றன.
  • அரசுத்துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றின் தேக்க நிலையைச் சரி செய்திட, தகவல் பலகைகளை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
  • இடைமுக நிரலியை (API) பயன்படுத்தி அரசுத் துறைகளின் இணையதளத் தரவுகள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதால் இத்தகவல் பலகைகளின் செயல்திறன் மற்றும் ஆற்றல் மேம்படுத்தப் பட்டு, நல்ல நிர்வாகத்தை வழங்க அது வழிவகை செய்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்